ARTICLE AD BOX
சென்னை,
தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை சிதைக்கும் உள்நோக்கத்துடனும், ஆதிக்க இந்தியை திணிக்கும் மத்திய பா.ஜனதா அரசைக் கண்டித்து, நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய நகரங்களில் பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக மாணவர் அணி அறிவித்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யு.ஜி.சி. வரைவுக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும், மும்மொழிக் கொள்கையை திணிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் திமுக மாணவர் அணி உள்ளிட்ட மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேரணியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தலைமை தபால் நிலையம் முன்பு திமுக மாணவர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டத் திமுக மாணவரணி சார்பில் தலைமை தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தித் திணிப்பை கண்டித்து திருவண்ணாமலை காமராஜர் சிலையிலிருந்து திமுக மாணவர் கூட்டமைப்பினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.
இந்தியைத் திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி தரமாட்டோம் என பேசிய மத்திய மந்திரியின் பேச்சைக் கண்டித்தும் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் முன்பு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாஜக அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கையை கண்டித்து தாம்பரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக மாணவரணி, இளைஞரணி, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட மாணவரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.