ARTICLE AD BOX
பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அண்ணாமலை தெரிவித்தார். திமுக அரசு தரமான கல்வி வழங்கவில்லை என்றும், 2026ல் ஆட்சி மாறாவிட்டால் அனைவரும் வெளியேற நேரிடும் என்றும் விமர்சித்தார்.

தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவிற்கு டப் கொடுத்து வருகிறது பாஜக, அந்த வகையில் ஒவ்வொரு நாளும் தமிழக அரசின் திட்டங்களை விமர்சித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு எதிராக போராட்டத்தையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட் தொடர்பாக விளக்க பொதுக்கூட்டம் பாஜக சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் 19 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருந்து, தற்போது, 51 லட்சம் கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது.

கடந்த 2004 – 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்குக் கொடுத்த வரிப்பங்கீடு 1,52,000 கோடி ரூபாய் என தெரிவித்த அண்ணாமலை, கடந்த 11 ஆண்டு கால பாஜக ஆட்சியில், ரூ.6,14,000 கோடி நேரடி வரிப் பங்கீடு தமிழகத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக, மத்திய அரசு நிதி தரவில்லை என்று பொய் கூறிக் கொண்டிருக்கிறது என விம்ர்சித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில், திமுக அரசு, கல்வித் துறைக்கு ஒதுக்கிய நிதி ரூ.1.5 லட்சம் கோடி. ஆனால், நமது குழந்தைகளுக்கு தரமான கல்வி இல்லை.

அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லை. கழிப்பறை வசதி இல்லை. சுற்றுச்சுவர் இல்லையென குற்றம்சாட்டினார். அமைச்சர் மகேஷின் மகன் ப்ரெஞ்ச் மொழி படிக்கிறார். ஆனால், நமது அரசு பள்ளி மாணவர்கள் இருமொழியைத் தான் படிக்க வேண்டுமாம்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகன் உட்பட திமுகவினரின் குழந்தைகள் அனைவரும் தனியார் பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்கலாம். ஆனால், ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த நம்ம வீட்டுக் குழந்தைகளுக்கு, அரசுப் பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடாதா? பிரதமர் மோடி ஹிந்தியைத் திணிக்கிறார் என்று பொய் கூறுகிறார்கள். காரணம்,

நம் வீட்டு குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைத்துவிட்டால், இவர்களுக்குப் போஸ்டர் ஒட்ட ஆள் கிடைக்காது என்பதால் இப்படி திமுகவினர் கூறி வருவதாக விமர்சித்தார். தாய்மார்களுக்கு எதிராக நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்த அண்ணாமலை, 2026ல் மாற்றம் இல்லையெனில், அதன்பிறகு மாற்றம் இல்லை என்று தான் அர்த்தம் என தெரிவித்தார். 2026ல் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பஞ்சம் பிழைப்பதற்காக அனைவரும் மாநிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியது தான் எனவும் கூறினார்.

மேலும் பாஜக ஆளும் ஒவ்வொரு மாநிலங்களிலும், தாய்மார்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிதி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தவர், அதிகபட்சமாக, டெல்லியில் ரூ.2,500 வழங்கப்படவுள்ளதாகவும், எனவே வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வெற்றி மூலம் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, நமது தாய்மார்கள் ஒவ்வொருவருக்கும், மாதம் தோறும் ரூ.2,500 க்கும் அதிகமாக வழங்கப்படும். இது பாரதப் பிரதமர் மோடி கேரண்டி என தெரிவித்தார்.