ARTICLE AD BOX
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை சுமார் 8.23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநிலப் பாடத் திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தொடங்குகிறது. இன்று தொடங்கும் தேர்வுகள் வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகளும் என சுமார் 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதபோல் தனித் தேர்வர்கள் 4,755 பேரும், சிறைவாசிகள் 137 பேரும் என 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 1.15 மணிக்கு நடைபெறுகிறது, முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் நடக்கிறது. மேலும் தேர்வு மையங்களை கண்காணிக்க பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படை 4,470 அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக 44 ஆயிரத்து 236 கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.