ARTICLE AD BOX
பிரதமர் மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இலங்கையின் அதிபராக அனுர குமார திசநாயக்க பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு முதலில் வருகை தந்தார். அப்போது இந்தியா - இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் விவாதிக்கபட்டன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் பிரதமர் மோடியின் பயணத்தின் போது இறுதி செய்யப்பட உள்ளன. இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத், மோடியின் இலங்கை பயணத்தின் போது இருதரப்புக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இலங்கையின் கிழக்கு பகுதியான திருகோணமலை சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளிமின் உற்பத்தி நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என்றார். மேலும் அண்டை நாடான இந்தியாவுடன் நாங்கள் நெருங்கிய உறவைப் பேணி வருவதாகவும் அவர் கூறினார்.
அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கை செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக, பிரதமர் ஹரிணி அமரசூரியா உள்ளிட்டோரை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் மீனவர்கள், இலங்கையால் கைது செய்யப்படுவது- சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது அதிருப்தியை உருவாக்கி உள்ளது. இதனால் தமிழக மீனவர் பிரச்னையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. 2015ம் முதல் இலங்கைக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 4-வது பயணம் இதுவாகும்.