தமிழக அரசுடன் கைகோர்க்க தயார்.. பழநியில் அறிவிப்பு வெளியிட்ட பிரேமலதா.. கவனிக்கும் அதிமுக

14 hours ago
ARTICLE AD BOX

தமிழக அரசுடன் கைகோர்க்க தயார்.. பழநியில் அறிவிப்பு வெளியிட்ட பிரேமலதா.. கவனிக்கும் அதிமுக

Dindigul
oi-Nantha Kumar R
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழக அரசுடன் கைகோர்க்க தயாராக இருக்கிறோம் என்று திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பரபரப்பாக பேசி உள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக இப்போது உள்ள நிலையில் அவரது இந்த கருத்து என்பது கவனிக்க வைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேமுதிக கட்சி நிர்வாகி இல்லவிழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பங்கேற்றார்.அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

premalatha dmdk dmk

அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் தமிழக பட்ஜெட், தொகுதி மறுசீரமைப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி கேட்டனர். அதற்கு பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:

தேமுதிக சார்பில் தமிழக அரசின் பட்ஜெட்டை நாங்கள் வரவேற்கிறோம். இதற்கான காரணத்தை நான் தெளிவாக பதிய வைக்கிறேன். விஜயகாந்த் 2006ல் முதல் தேர்தல் அறிக்கை புத்தகத்தில் கொடுத்த பல்வேறு விஷயங்களை முதல்வர் இந்த முறை அறிவித்துள்ளார். அதற்காக தமிழக அரசுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளேன்.

வேளாண் நிதி நிலை அறிக்கையில் இங்கு இருக்கும் விவசாயிகளை வளர்ந்த நாடுகளுக்கு அழைத்து செல்வதாக கூறப்பட்டு உள்ளது. புதிய தொழில்நுட்பம் பற்றி அறியும் வகையில் ஜப்பான், சீனா பல நாடுகளுக்கு விவசாயிகள் அழைத்து செல்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை 2006 தேர்தல் அறிக்கை புத்தகத்தில் விஜயகாந்த் அறிவித்தார்.

ரேஷன் பொருட்கள் தேடிவரும் என்பது உள்பட இந்த நிதி நிலை அறிக்கை, வேளாண் பட்ஜெட்டை நாங்கள் வரவேற்கிறோம். மெட்ரோ திட்டம், உள்கட்டமைப்பு திட்டம், பெண்களுக்கான திட்டம், வேலைவாய்ப்பு திட்டங்களை அறிவித்துள்ளனர். இன்னும் கூடுதல் வேலைவாய்ப்பு திட்டங்களை அறிவித்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழலா என்பதன் உண்மைத்தன்மை குறித்து அமலாக்கத் துறை கண்டறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். செந்தில் பாலாஜி ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு பெயிலில் வந்துள்ளார். இதனால் இந்த ஊழல் என்பது உண்மையான விஷயமா? என்பதை அமலாக்கத்துறை கண்டறிந்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

மும்மொழி கொள்கை பற்றி நான் ஏற்கனவே நிறைய இடங்களில் சொல்லிவிட்டேன். தமிழ் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். அதில் மாற்று கருத்து என்பது இல்லை. ‛அன்னை மொழி காப்போம், அனைத்து மொழி கற்போம்' என்பது தான் விஜயகாந்தின் கொள்கை. அது தான் எங்களின் நிலைப்பாடு. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் 40 பாராளுமன்ற தொகுதிகளை குறைத்தால் நிச்சயமாக மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசுடன் கைகோர்த்து தமிழகத்துக்காகவும், தமிழக மக்களின் உரிமைக்காக போராடுவோம் என்பதை உறுதியாக கூறுகிறேன்'' என்றார்.

இதில் திமுக அரசுடன் கைகோர்க்க தயாராக இருப்பதாக பிரேமலதா கூறியிருப்பது தான் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. தொகுதி மறுசீரமைப்பை காரணம் காட்டி அவர் கூறியுள்ளார். இருப்பினும் தற்போது தேமுதிக என்பது அதிமுக கூட்டணியில் உள்ளது. அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்று பிரேமலதா கூறி வந்தார். ஆனால் அப்படி எதுவும் உறுதி அளிக்கப்படவில்லை என்பதை எடப்பாடி பழனிச்சாமி கூறினார். இந்த விஷயத்தில் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் அதிமுக ராஜ்யசபா சீட் தராவிட்டாலும் பராவாயில்லை. அதிருப்தி இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஆனால் இப்போது திமுக அரசுடன் கைகோர்க்கவும் தயாராக உள்ளதாக கூறியிருப்பது தான் அதிமுகவினரை கவனிக்க வைத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
English summary
DMDK General Secretary Premalatha made a sensational statement in Palani, Dindigul district today that they are ready to join hands with the Tamil Nadu government. Her statement is noteworthy given the current state of DMDK in the AIADMK alliance.
Read Entire Article