ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் பல படங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தது இசை தான். பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி, வசூலைக் குவித்த படங்கள் ஏராளம். அவ்வகையில் தனது தனித்துவமான இசையின் மூலம், ரசிகர்களை உருகச் செய்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். பல விருதுகளைப் பெற்ற போதிலும் இவர் எப்போதும் தன்னடக்கமாகவே இருப்பார். வாழ்வில் தன்னடக்கமாக இருப்பதற்காக ஏ.ஆர். ரகுமான் சொல்லிய ரகசியம் என்ன என்பதை உங்களுக்கு விளக்குகிறோம் கேளுங்கள்.
இசையுலகில் புதியதொரு புரட்சியை செய்த ஏ.ஆர்.ரகுமான், தான் இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்றார். மணிரத்னம் இயக்கி 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரகுமான். இவரது தொடக்க காலம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. சிறுவயதிலேயே தந்தையை இழந்த ரகுமான், தந்தையின் வாத்தியக் கருவிகளை வாடகைக்கு விட்டு அதில் வருமானத்தின் மூலம் இசைப்பயிற்சி மேற்கொண்டார். மாஸ்டர் தன்ராஜ் அவர்களிடம் மேற்கத்திய இசைக்கருவிகள் அனைத்தையும் கற்றுக் கொண்டார்.
தொடக்கத்தில் விளம்பரங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானின் சினிமா பயணத்தைத் தொடங்கி வைத்த ஆண்டு தான் 1992. அதற்கு முன்பு வரை கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டார். ஒருமுறை இசைஞானி இளையராஜாவின் குரூப் மியூசிக்கலிலும் ரகுமான் வாசித்துள்ளார். ரோஜா திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட் அடிக்கவே, இவருக்கான அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தன. அன்றைய தினம் தமிழ் சினிமாவில் புதியதொரு இசை சகாப்தமே பிறந்து விட்டதாக பலரும் மகிழ்ந்தனர்.
தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்பட பல மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசைமைத்த ஸ்லம்டாக் மில்லியனியர் படம் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது. இது இவரின் வாழ்நாள் சாதனையாக கருதப்படுகிறது. பல விருதுகளை வென்று சாதனைகளைச் செய்தாலும், மிகவும் அமைதியாக அடக்கத்துடனே இருப்பார் ரகுமான். இந்த அடக்கத்திற்கான காரணம் என்ன என்பதை ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், “மண்ணில் பிறந்த அனைவருக்குமே ஒருநாள் மரணம் என்பது நிச்சயம். எப்போதுமே மரணத்தை நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் தானாகவே அடக்கம் வந்து விடும். எவ்வளவு தான் நாம் ஆட்டம் போட்டாலும், கடைசியில் இறக்கத் தான் போகிறோம். இப்படி இருக்கையில் நாம் ஏன் தலைகனத்துடன் ஆட்டம் போட வேண்டும். இருக்கின்ற வரையில் நல்லவற்றைச் செய்வோம்; நல்லவற்றைப் பகிர்வோம். பூமியில் நம்முடைய இருப்பை உபயோகமான முறையில் பயன்படுத்திக் கொள்வோம்,” என்றார்.
இசைத்துறையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல பாடல்களை பாடியும், இசையமைத்தும் வந்த ஏ.ஆர். ரகுமானின் தன்னடக்கம் உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது. இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பிரபலமாக இருக்கும் ரகுமான், தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். இவரது சாதனைகளை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு 2010 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதை அளித்தது.