ARTICLE AD BOX
நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தமிழில் இட்லி கடை, தெலுங்கில் குபேரா, இந்தியில் தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதன் பின்னர் ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து, மாரி செல்வராஜ் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படமும் அவரது லைன் அப்பில் இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் சிவகார்த்திகேயன், அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிகத் தெளிவாக தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து பல வெற்றி பட இயக்குனர்களுடன் கைகோர்த்து வரும் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் இவர் தற்போது மதராஸி, பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் தனுஷின் இட்லி கடை திரைப்படம் ஏற்கனவே 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட இருப்பதாகவும் இந்த படத்தினை 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் அதே சமயம் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் மதராஸி திரைப்படமும் 2025 ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வர தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. எனவே தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள் மோத இருக்கிறதா? அல்லது இருவரின் படங்களும் இடைவெளிகள் விட்டு வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.