ARTICLE AD BOX
*பெற்றோர்கள் நெகிழ்ச்சி
குன்னூர்: தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டு கொண்டு வளர்ந்து வரும் பெட்டட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களால் பெற்றோர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 64-ம் ஆண்டு விழாவில் கடவுள்களின் வேடமணிந்து நடனமாடி மாணவ, மாணவிகள் அசத்தினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பெட்டட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் 82 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
1961 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட, ஆரம்ப காலத்தில் குறைவான எண்ணிக்கையில் பயின்ற மாணவர்கள், தற்போது ஆங்கில வழி பயிற்சி துவங்கியதால், அந்த பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக, பள்ளியை ரோட்டரி கிளப் தனியார் அமைப்பினர் ரூ.60 லட்சம் செலவு செய்து, சீரமைக்கும் பணியில் களமிறங்கினர். தற்போது அந்த அரசு பள்ளி தனியார் பள்ளிகளுக்கு போட்டி போட்டு கொண்டு வளர்ந்துள்ளது. குறிப்பாக கல்வி சார்ந்த பாடங்கள் மட்டுமல்லாமல், அறிவியல் ஆய்வகம், இசை வகுப்புகள், கணினி பயிற்சிகள் போன்றவைகளும் மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படுகின்றன.
இந்நிலையில் பள்ளியின் 64 ம் ஆண்டு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தனியார் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
பின்னர் பல்வேறு கடவுள்களின் வேடமணிந்து கலை நிகழ்ச்சிகளை துவக்கினர். இதில் நடைபெற்ற கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
பின் மூன்றாம் பாலினமும் நமது இனம் தான் என்கிற தலைப்பில் திருநங்கைகளை ஆதரிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் நாடகத்தின் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதனை தொடர்ந்து பிச்சைகாரர்களை புறக்கணிக்காமல், நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று கலைநிகழ்ச்சி மூலமாக உணர்த்தினர்.
தொடர்ந்து அளவுக்கு மீறிய செல்போன் பயன்பாடு ஆபத்தை தரும் என்கிற தலைப்பில் ‘பள்ளி வயதினர் குறுஞ்செய்தி, வாட்ஸ் அப், கேம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றை தங்களின் ஸ்மார்ட் போனில் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் போனை பயன்படுத்தும் போது ஆணியடித்தது போல் ஒரே இடத்தில் மணிக்கணக்காக அமர்ந்திருப்பார்கள்.
சாப்பிடும் போதும், நடக்கும் போதும் கூட ஒரு கையில் போனுடன் கேம் அல்லது வாட்ஸ் அப் செய்து கொண்டிருப்பதால் அடிக்கடி கை வலி, முதுகு வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். செல்போன் வந்தது முதல் நாம் அனைவரும் அழிவின் பிடியில் சிக்கி கொண்டிருக்கிறோம்’ என விழிப்புணர்வு நாடகத்தை மாணவிகள் அரங்கேற்றினர்.
இதைத்தொடர்ந்து படுக பாடலுக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் நடனமாடி அசத்தினர். பின் போட்டியில் பங்கேற்ற மாணவ – மாணவிகளுக்கு கேடயங்களும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. அறுசுவை கூடிய மதிய உணவுடன் விழா நிறைவு பெற்றது. இதுகுறித்து தெரிவித்த பள்ளி தலைமையாசிரியர் ராதா கூறுகையில், ‘‘பள்ளியின் சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக ஆண்டுதோறும் இந்த பள்ளிக்கு மாணவர்கள் சேர்க்கைகாக பெற்றோர்கள் போட்டி போட்டு கொண்டு வந்து சேர்க்கின்றனர்.
மேலும் இந்த பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் இனி வரும் 5 ஆண்டுக்கு செய்து தருவதற்கு ரோட்டரி கிளப் நிறுவனம் உறுதுணையாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு பள்ளியில் மாணவர் சேர்க்கை 150 ஆக உயர்வதற்கு வாய்ப்புள்ளது’’ என தெரிவித்தார்.
The post தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் பெட்டட்டி அரசு பள்ளியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் appeared first on Dinakaran.