ARTICLE AD BOX
ஒருவரைச் சட்டத்திற்குப் புறம்பாக, வேண்டுமென்றோ அல்லது தவறாகவோ காவல்துறையினர் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் அடைத்து வைத்திருப்பதாகக் கருதினால், அந்த நபரை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்துவதற்கு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் மனுவை ஆட்கொணர்வு மனு என்று தமிழிலும், ஆங்கிலத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு (Habeas Corpus Petition) என்றும் சொல்கின்றனர். ஹேபியஸ் எனும் மத்தியக் கால இலத்தீன் மொழிச் சொல்லுக்கு ‘நீ உயிருடன் இருக்கிறாய்’ என்று பொருளாகும்.
ஆட்கொணர்வு மனுவினை சமர்ப்பிப்பதன் மூலம், அந்நபரின் தனி மனித உரிமை காக்கப்படுகிறது. தனி மனித உரிமை பாதிக்கப்படும் போது, அக்குறையை நீக்குவதற்கும், பாதுகாப்பதற்கும், நீதிமன்றத்தின் ஆட்கொணர்வு நீதிப் பேராணை பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு தனிமனிதனின் சுதந்திரம் தடை செய்யப்படும் போது, நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பிப்பதன் மூலம், அந்தத் தடை பற்றி விசாரித்து தக்க தீர்வு கோர உரிமை உள்ளது.
ஆட்கொணர்வு நீதிப் பேராணை முதலில் இங்கிலாந்து நாட்டின் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டது. அதன் பின்னர் பொதுநலவாய (Commonwealth) நாடுகளிலும், ஏனைய பல நாடுகளிலும் பின்பற்றப்பட்டு, தனிமனித உரிமைக்கு ஒரு சட்டப் பாதுகாப்பு அளிக்கிறது.
இந்தியாவில் பொதுவாக, ‘ஆட்கொணர்வு மனு’ உயர்நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்டு, உயர்நீதி மன்றங்களின் வழியாக அதற்கான பேராணை பிறப்பிக்கப்படுகிறது. நீதிமன்றத்தின் பேராணையினைக் காவல் துறையினரே பெரும்பான்மையாகச் செயல்படுத்துகின்றனர்.
ஆட்கொணர்வு மனு மீது வழங்கப்பட்ட பேராணையில் குறிப்பிடப்பட்ட நபரை, நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவது காவல் துறையின் கடமையாகும். அந்தச் சுதந்திரத் தடை சட்டத்துக்குப் புறம்பாக இருப்பின், அவர் விடுவிக்கப்படலாம். இதன் மூலம், தகுந்த காரணமோ, ஆதாரமோ இல்லாமல் நீண்ட நாட்கள் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பித்து, அவர்களின் தனி மனித உரிமைகளைக் காக்க இயலும். இந்த ஆட்கொணர்வு மனு காணாமல் போனவர்களைக் கண்டறியவும் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது.
இதேப் போன்று, நீதிமன்றங்களில் முன்னெச்சரிக்கை மனு (Caveat Petition) என்று ஒரு மனுவும் தாக்கல் செய்யப்படுகிறது. முன்னெச்சரிக்கை மனு தாக்கல் செய்யும் வாதிக்கு எதிராக, முன்னறிவிப்பு இன்றி, ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில், பிரதிவாதிக்குச் சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதைத் தடுக்க, வாதி சார்பில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. கேவியட் எனும் இலத்தீன் மொழிச் சொல்லிற்கு முன் எச்சரிக்கை என்று பொருளாகும்.
நீதிமன்றத்தில் ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் ஒரு செயல் குறித்து வழக்கு தாக்கல் செய்யும் போது, அவ்வழக்கு தம்மை பாதிக்கும் எனக் கருதும் ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம், தன்னை அல்லது நிறுவனத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வழக்கின் தீர்ப்பினை உடனடியாக வழங்கிவிடக் கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக நீதிமன்றத்தில் முன்னெச்சரிக்கை மனு தாக்கல் செய்கின்றனர். முன்னெச்சரிக்கை மனு தாக்கல் செய்பவரின் விளக்கத்தைப் பெற்ற பின்னர்தான், அந்நீதிமன்றம் தொடர்புடைய வழக்கின் தீர்ப்பை வழங்குவதால், தனி மனிதர்களின் அல்லது நிறுவனத்தின் உரிமை காக்கப்படுகிறது.