தங்கம் கடத்திய வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் வீட்டில் சோதனை: நகை, சொத்து பறிமுதல்

11 hours ago
ARTICLE AD BOX

பெங்களூரு: வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்த குற்றச்சாட்டில் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவின் வீட்டில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.17.29 கோடி மதிப்பு நகை மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கன்னட படங்களான ‘மாணிக்யா’ மற்றும் ‘பதாகி’ மற்றும் தமிழ் படமான ‘வாகா’ ஆகியவற்றில் நடித்தவர் ரன்யா ராவ்.

சமீபத்திய நாட்களில், இந்தியாவிற்கும் துபாய்க்கும் இடையில் தொடர்ந்து பயணம் செய்து வந்த ரன்யா ராவை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். கடந்த 15 நாட்களில் 4 முறை துபாய் சென்று வீடு திரும்பினார் ரன்யா ராவ். கடந்த திங்கட்கிழமை இரவு, ரன்யா ராவ் பெங்களூருக்கு வருவார் என்ற தகவல் கிடைத்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விமானநிலையத்தில் கண்காணித்து வந்தனர். அப்போது வெளிநாட்டில் இருந்து வந்த ரன்யா ராவ் தனது உடைகளில் தங்கம் பதுக்கி கடத்தி வந்தார். இதையடுத்து அவரை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

பின்னர் ரன்யா ராவை காவலில் எடுத்த, அதிகாரிகள் குழு பெங்களூரு லாவலி ரோட்டில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தி, ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கமும், ரூ.4.73 கோடி மதிப்புள்ள பிற சொத்துக்களையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தங்கம், ரொக்கம் உட்பட மொத்தம் ரூ.17.29 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் வரும் 18ம்தேதி வரை நடிகை ரன்யா ராவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தங்கம் கடத்திய வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் வீட்டில் சோதனை: நகை, சொத்து பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article