ARTICLE AD BOX
தங்கம் என்னங்க தங்கம்... இன்னும் 12 மாதத்துல வெள்ளியின் விலை எங்கேயோ போகப் போகுது..
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதை எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சத்தமே இல்லாமல் சம்பவம் செய்ய காத்திருக்கு வெள்ளை உலோகமான வெள்ளி. தங்கத்தின் விலையோடு ஒப்பிடும்போது வெள்ளியின் விலை அந்த அளவுக்கு உயரவில்லை. இருந்தாலும், 2022 டிசம்பர் முதல் இதுவரையிலான காலத்தில் வெள்ளியின் விலை 41 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த 12 மாதங்களில் வெள்ளி விலை ரூ.1.17 லட்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சாம்கோ செக்யூரிட்டீஸின் சந்தை கண்ணோட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி பிரிவு தலைவர் அபூர்வா ஷேத் கூறுகையில், வெள்ளி ஒவ்வொரு 28 மாதங்களுக்கு ஒரு பேராசை மற்றும் பய சூழற்சிசியை கடந்து செல்கிறது.
பேராசை கட்டத்தில் மேலே நகர்ந்து பய கட்டத்தில் குறைகிறது அல்லது ஒருங்கிணைக்கிறது. 2023 ஜனவரியில் தொடங்கிய வெள்ளியின் பேராசை கட்ட வர்த்தகம், 2025 ஏப்ரல் வரை நீடிக்கும். எனவே அடுத்த 12 மாதங்களில் வெள்ளியின் விலை ரூ.1.17 லட்சம் என்ற இலக்கை எட்டும். மேலும் டாலர் மதிப்பு சரிவு உள்ளிட்டவை வெள்ளி உயர்வுக்கு வழிவகுக்கும். டாலர் இன்டெக்ஸ் குறைந்தால் அது வெள்ளியின் ஏற்றத்துக்கு கொண்டாட்டமாக அமையும். டாலர் மதிப்பு குறையும்போது, ஒரே அளவு வெள்ளி வாங்குவதற்கு முன்பே காட்டிலும் அதிக டாலர் தேவைப்படும். இதனால் வெள்ளி விலை உயரும்.

தற்போது 1 அவுன்ஸ் வெள்ளியின் விலை, 1 அவுன்ஸ் தங்கத்தின் விலையில் 1.11 சதவீதமாக உள்ளது. இது மிகவும் குறைவாகும். இந்த விகிதம் மேலே செல்ல ஒரே வழிதான், ஒன்னு தங்கத்தின் விலை குறைய வேண்டும் அல்லது வெள்ளியின் விலை உயர வேண்டும். வெள்ளியின் விலை உயர அதிகம் வாய்ப்புள்ளது.
மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல்கள் போன்ற பல்வேறு தயாரிப்புகளுக்கு வெள்ளி முக்கியமான பொருளாக இருக்கிறது. பிஓஎஃப்ஏ குளோபல் ஆய்வின்படி, 2030ம் ஆண்டில் வெள்ளிக்கான விநியோக சமநிலை எதிர்மறையாக இருக்கும். சப்ளையை காட்டிலும் தேவை அதிகமாக இருப்பது விலை அதிகரிப்பதற்கு ஒரு சரியான வழிமுறையாகும். கொரியா போன்ற சில நாடுகளில் தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகளுக்கான தேவை சப்ளையை காட்டிலும் அதிகரித்துள்ளது. இதனால் தேவை-சப்ளை இடையிலான இடைவெளி காரணமாக வெள்ளி கட்டிகளை வங்கிகள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க கொரிய அரசை கட்டாயப்படுத்தியுள்ளது.
வெ ள்ளிக்கான லீஸ் விகிதங்கள் 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது வெள்ளி குறைந்து வருவதையும், வெள்ளி விலை ஏற்றத்துக்கான சூழலையும் காட்டுகிறது. வெள்ளி லீஸ் சந்தை என்பது மத்திய வங்கிகள், நிதி நிறுவனங்கள்,சுரங்க நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் இடையே வெள்ளியை கடன் வழங்குவதையும், கடன் வாங்குவதையும் அனுமதிக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் கடன் வழங்குபவருக்கு லீஸ் வட்டி செலுத்தும் போது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வெள்ளியை கடன் வாங்க அனுமதிக்கிறது. பொதுவாக வெள்ளிக்கான குத்தகை விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும். அதேவேளையில் வெள்ளி அதிகமாக இருந்தால் இந்த விகிதம் மைனஸிலும் செல்லும்.
சர்வதேச சந்தையில் தற்போது 1 டிராய் அவுன்ஸ் வெள்ளியின் விலை அதன் உச்ச விலையான 50 டாலரை காட்டிலும் 33 சதவீதத்துக்கும் குறைந்த விலையில் வர்த்தகமாகி வருகிறது. தற்போதைய விலையான 33 டாலரிலிருந்து 50 டாலரை தொட வெள்ளி விலை 50 சதவீதம் உயர வேண்டும். டாலர்-ரூபாய் மதிப்பு விகிதங்கள் அப்படியே இருந்தால், இந்திய ரூபாயில் 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1.17 லட்சத்தை தாண்டும் என தெரிவித்தார்.
Story written : subramanian