ARTICLE AD BOX
Vijay and Prashant Kishor in TVK anniversary: நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. விழாவில் விஜய் பேசவேண்டிய கருத்துகள் குறித்து பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கியுள்ளார். முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா புதன்கிழமை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பேசவேண்டியது என்ன என பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த விழாவில் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியீடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே தவெக ஆண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் விழா நடைபெறவுள்ளது. இதில் 3,000 தவெக நிர்வாகிகள் மட்டும் கலந்துகொள்ள உள்ளனர் எனக் கூறப்படுகிறது. விழாவில் பங்கேற்பதற்கான பாஸ் இருப்பவர்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

தவெக ஆண்டு விழா நடைபெற இருக்கும் தனியார் விடுதிக்கு வெளியில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட கட்சியின் கொள்கைத் தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. விஜயை வரவேற்கும் வகையில் பேனர்களும் வைக்கப்பட்டிருக்கின்றன.

கிழக்கு கடற்கரை சாலையில் முழுவதும் பல கி.மீ. தொலைவுக்கு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. விழாவில் கலந்துகொள்ள வரும் நிர்வாகிகளுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுதிக்கு வெளியே தவெக நிர்வாகிகள் இரும்புத் தடுப்புகளை வைத்தனர். அனுமதியின்றி வைத்த தடுப்புகளை போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர்.

நாளை நடைபெற உள்ள ஆண்டு விழாவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என கட்சித் தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இந்நிலையிரல், கட்சியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக ஆண்டு விழாவில் விஜயுடன் பிரசாந்த் கிஷோரும் நிர்வாகிகள் முன்னிலையில் பேசுவார் எனச் சொல்லப்படுகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் பிரசாந்த் கிஷோர் தங்கியிருக்கிறார். விழாவுக்கு முன்னதாக விஜய் - பிரசாந்த் கிஷோர் இருவரும் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். அப்போது ஆண்டு விழாவில் பேச வேண்டிய கருத்துகள் குறித்து விவாதித்தனர் என்று கூறப்படுகிறது. விஜய், பிரசாந்த் கிஷோர் இருவரின் சந்திப்பின்போது தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உடன் இருந்துள்ளார்.