ARTICLE AD BOX
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 40 தொகுதிகளை வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3வது முறையாக ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றவில்லை.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்தது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்து 3வது முறையாக ஆட்சியமைக்க ஆம் ஆத்மி கட்சி முனைப்புடன் இருந்தது.
இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர்.
மாலை 4.30 மணியளவில் நிலவரத்தின்படி, பா.ஜ.க. 40 தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ளது. இன்னும் 8 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. பாஜக 27 வருடங்கள் கழித்து தலைநகரில் ஆட்சி அமைப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அக்கட்சியினர் உற்சாகமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியைக் கொண்டாடுகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சி வெறும் 18 இடங்களில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. மேலும் 4 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. டெல்லி சட்டசபை தேர்தலில், பெரும்பான்மைக்கு 36 தொகுதிகளில் வெற்றி தேவை என்ற நிலையில், 40 இடங்களை வென்்ற பாஜக விரைவில் ஆட்சி அமைக்க உள்ளது. இதனால், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.