ARTICLE AD BOX
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஆகியவை நடைபெற்றன. அதற்கான முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
இதில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றிருந்தது. தற்போது அந்த தொகுதியிலும் பின்னடைவையே சந்தித்து வருகிறது. பாஜக 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 44-ல் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 26 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு :
இந்த முன்னிலை நிலவரம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக முன்னிலை பெற்று வருவது அதிர்ச்சியளிக்கிறது. ஆம் ஆத்மி இந்தளவுக்கு பின்னடைவை சந்தித்து வருவதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்தால் அது தேசத்திற்கு பின்னடைவாகவே கருத வேண்டியுள்ளது.
ஈகோவை தள்ளிவையுங்கள்…,
இந்த தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றதா என்ற ஐயம் எழுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை என்றே கருத வேண்டியுள்ளது. காங்கிரஸ் – ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவிலை. இந்தியா கூட்டணி தலைவர்கள் தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டியும் நேரமிது. கூட்டணி தலைவர்கள் தங்கள் ஈகோ பிரச்னையை தள்ளிவைத்து விட்டு இந்தியா கூட்டணி எதிர்காலம் குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும்.
இந்தியா (I.N.D.I.A) கூட்டணி நாடாளுமன்ற தேர்தலை மட்டுமின்றி சட்டமன்ற தேர்தல்களிலும் கவனம் செலுத்த வேண்டும். டெல்லி தேர்தலை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி , சமாஜ்வாடி ஆகிய கட்சித் தலைவர்கள் இதுகுறித்து தீவிரமாக சித்திக்க வேண்டும். ஈரோடு கிழக்கில் எதிர்பார்த்தவாறு திமுக அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகிறது.” என டெல்லி தேர்தல் முடிவுகள் நிலவரம் குறித்தும், ஈரோடு கிழக்கு நிலவரம் குறித்தும் விசிக தலைவர் திருமாவளவன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.