ARTICLE AD BOX

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
டெல்டா மாவட்டங்களில் அடுத்த ஓரிரு தினங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் அம்மாவட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் சேதமடைமடையாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் 2024-25 கொள்முதல் பருவத்தில் இதுவரை 16,94,796 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவைவிட இது 3,10,288 மெட்ரிக் டன் அதிகமாகும்.
விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து கால தாமதமின்றி கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ஆண்டு 2.088 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதலில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆறாயிரத்திற்கும் அதிகமான கடந்த ஆண்டைக் காட்டிலும் ஏறத்தாழ 200 கொள்முதல் நிலையங்கள் நடப்பாண்டில் கூடுதலாகத் தொடங்கப்பட்டு நெல் கொள்முதல் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், 28ம் தேதி மற்றும் 1ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் இந்த மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் தயார் நிலையில் இருந்து மழையால் நெல் பாதிக்கப்படாமல் கொள்முதல் செய்திடவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பாக வைத்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.