ARTICLE AD BOX
டிரம்ப் முதல் சீனா வரை.. இந்திய பங்குச் சந்தைகளின் பல மாத வீழ்ச்சிக்கு இதுதான் காரணம்..
2024ம் ஆண்டு இந்திய பங்குச் சந்தைகளுக்க ஒரு பொன்னான ஆண்டாக அமைந்தது. கடந்த செப்டம்பரில் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. ஆனால் அதன் பிறகு பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவு கண்டு வருகின்றன. சர்வதேச நிலவரங்களால் கடந்த 5 மாதங்களாக பங்குச் சந்தைகள் மரண அடியை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் மற்றும் நிப்டி அதன் உச்சத்திலிருந்து கடுமையாக வீழ்ந்தன. கடந்த செப்டம்பர் 28 முதல் இதுவரை சென்செக்ஸ் 10,677 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. நிப்டி 3,482 புள்ளிகள் சரிவு கண்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. இது இந்திய பங்குச் சந்தையின் பெரிய முதலீட்டாளர்களுக்கு கட்டாயம் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஏனென்றால் அமெரி்கக பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கும். அமெரிக்காவின் மந்தமான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட சர்வதேச காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில மாதங்களாக கரடியின் பிடியில் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

வட்டி குறைப்பு
கடந்த வாரம் வெளியான அமெரிக்க பெடரல் வங்கி கூட்டத்தின் சிறப்பு அறிக்கையில், அமெரிக்காவின் பணவீக்கம் குறித்து முழுமையாக உறுதி செய்யப்படும் வரை, வட்டியை குறைக்க விருப்பமில்லை என்று அமெரிக்க பெடரல் வங்கி தெரிவித்தது. இது இரண்டு மாதங்களாக குறைந்திருந்த அமெரிக்க டாலரின ஏற்றத்துக்கு வழிவகுத்தது. இது இந்திய பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களை பங்குகளை விற்பனை செய்ய தீவிரப்படுத்தியது.
சீனா
சீன அரசாங்கம், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நிதி மற்றும் பணவியல் கொள்கை அறிவிப்புகளை மேற்கொண்டது. இது போன்ற ஊக்குவிப்பு நடவடிக்கைகள், அமெரிக்கா விதித்த கட்டணத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்தான் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்பனை செய்து சீனாவுக்கு பணத்தை மாற்றுகிறார்கள்.
அமெரிக்காவின் மந்தமான பொருளாதார வளர்ச்சி
செலவு குறைப்புகள் முதல் வரிகள் வரை அமெரிக்க அரசின் கொள்கைகளின் தாக்கம் மற்றும் புவிசார் முன்னேற்றங்கள் குறித்து நிறுவனங்கள் பரவலான கவலைகளை தெரிவித்துள்ளன. மாறிவரும் அரசியல் நிலப்பரப்பால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மையால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. சப்ளையர்களிடமிருந்து கட்டண தொடர்பான விலை உயர்வுகளுக்கு மத்தியில் விலைகள் உயர்ந்து வருகின்றன.
பணவீக்கம்
அமெரிக்காவில் அரசியல் சுயேட்சைகள் மற்றும் ஜனநாயக கட்சியினரை பொறுத்தவரை பணவீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். அதேவேளையில், குடியரசு கட்சியினர் பணவீக்கம் குறைந்து வருகிறது என்கின்றனர். கடந்த மாதம் அந்நாட்டில் பழைய வீடுகள் விற்பனை பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் குறைவாக இருந்தது. ஒப்பீட்டளவில் அதிக அடமான விகிதங்கள் மற்றும் வீடு விலைகள் மிக அதிகம் போன்றவை விற்பனையை பாதித்துள்ளது.
தங்கம் விலை உயர்வு
அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வரி பிரச்சினை சர்வதேச வர்த்தகத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இது தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அலுமினியம், ஸ்டீல் மீதான சமீபத்திய 25 சதவீத வரியை தொடர்ந்து டிரம்ப் நிர்வாகம் தங்கத்தின் மீதும் வரிகளை விதிக்கக்கூடும் என்ற கவலைகள் நிலவுகிறது. இந்த எதிர்பார்ப்பு அமெரிக்காவில் தங்க தேவையை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.