ARTICLE AD BOX
How Gold Card visa is different from EB-5 Card and Green Card: டொனால்டு டிரம்ப் அமெரிக்க குடியுரிமைக்கு கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்துள்ளார், இதன் மூலம் 5 மில்லியன் டாலர்கள் செலவழித்து குடியுரிமை பெறலாம். இது EB-5 விசா திட்டத்தை மாற்றியமைக்கும் என்றும், கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்கள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

5 மில்லியன் டாலர்களை செலவழித்து, அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்கான கோல்டு கார்டு குடியுரிமையை டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள பணக்கார முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான கவர்ச்சிகரமான திட்டமாக இதனை டிரம்ப் முன்வைத்துள்ளார்.
இதன் மூலம் அரசின் வருமானத்தைப் பெருக்குவதும் டொனால்ட் டிரம்பின் திட்டமாகும். இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வந்தால், நீண்ட காலமாக கிரீன் கார்டு ஒப்புதல் பெறுவதற்காகக் காத்திருக்கும் திறமையான இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்த திட்டம் ஏப்ரல் மாதத்திற்குள் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது, ஆரம்பத்தில் சுமார் 10 மில்லியன் கோல்டு கார்டு விசாக்கள் வழங்கப்படலாம். "இந்த அட்டையை வாங்குவதன் மூலம் செல்வந்தர்கள் நம் நாட்டிற்கு வருவார்கள். அவர்கள் செல்வந்தர்களாகவும், வெற்றியாளர்களாகவும் இருப்பார்கள், அவர்கள் நிறைய பணம் செலவழித்து, நிறைய வரிகளைச் செலுத்தி, நிறைய பேருக்கு வேலை வாய்ப்புகளையும் கொடுப்பார்கள்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

EB-5 விசா - கோல்டு கார்டு வித்தியாசம் என்ன?
இந்த கோல்டு கார்டு தற்போதுள்ள 35 ஆண்டுகால EB-5 விசா திட்டத்தை மாற்றும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க வணிகங்களில் குறைந்தது 1 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கு EB-5 விசா வழங்கப்படுகிறது. அதற்கு மாற்றாக இந்த கோல்டு விசா கொண்டுவரப்பட்டுள்ளது.
EB-5 விசாவுக்கும் கோல்டு கார்டு விசாவுக்கும் முக்கிய வித்தியாசங்கள் உள்ளன. தற்போதுள்ள EB-5 திட்டத்தின் கீழ், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமெரிக்க வணிகங்களில் 800,000 டாலர் முதல் 1,050,000 டாலர் வரை செலவழித்து குறைந்தது 10 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதனுடன் கிரீன் கார்டுக்காக 5–7 ஆண்டுகள் காத்திருக்கும் காலமும் உண்டு. வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக 1990 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் மோசடிகள் நடைபெறுவதாகவும் பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள 'கோல்ட் கார்டு' விசா திட்டம் முதலீடு செய்வதற்கான நிதித் தேவையை 5 மடங்கு அதிகரித்து $5 மில்லியன் டாலராக உயர்த்துகிறது. அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்கான மிக விரைவான மற்றும் எளிமையான வழியாக உள்ளது. EB-5 விசாவின் கீழ் உள்ளதைப் போல வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நிபந்தனை இதில் இல்லை. இருந்தாலும், அதிக விலை கொடுக்கவேண்டியிருப்பதால் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு இது எட்டாக்கனியாகவே இருக்கும்.

இந்தியர்கள் பாதிக்கப்படுவார்களா?
5 மில்லியன் டாலர் என்ற பெரிய விலை கொடுக்க வேண்டியிருப்பதால், இந்தியாவின் பெரும் பணக்காரர்களும் தொழிலதிபர்களும் மட்டுமே அமெரிக்கக் குடியுரிமை பெற இந்த வழியைப் பயன்படுத்த முடியும். நீண்ட காலமாக கிரீன் கார்டு பெறுவதற்காகக் காத்திருக்கும் திறமையான இந்தியத் நிபுணர்கள் அமெரிக்கக் குடியுரிமை பெறுவது இன்னும் கடினமாகும்.
மேலும், EB-5 விசா திட்டத்தின் கீழ், கடன்கள் மற்றும் நிதியுதவிகள் பெறலாம். அதே நேரத்தில் கோல்டு கார்டு விசாவிற்கு முழுப் பணத்தையும் முன்கூட்டியே செலுத்த வேண்டும். இது இந்தியர்களில் பெரும்பாலோருக்கு சாத்தியமில்லை. இந்தியர்களைப் பொறுத்தவரை, H-1B வேலை விசா திட்டம் இன்னும் விருப்பத்திற்குரிய வழியாக இருக்கும். ஆனால், H-1B விசா பெற்றுள்ள இந்தியர்களும் 5 மில்லியன் டாலர் செலுத்தத் தயாராக இருந்தால் கோல்டு கார்டு பெற விண்ணப்பிக்கலாம்.
கோல்டு கார்டு பெறுவது தொடர்பான விரிவான விதிமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இரண்டு வாரங்களில் அவை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரீன் கார்டு - கோல்டு கார்டு வேறுபாடு:
கிரீன் காம்டு அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்குவதற்கான குடியுரிமையை வழங்குகிறது. பொதுவாக வேலைவாய்ப்பு, குடும்ப ஆதரவு அல்லது முதலீடு (EB-5 வழியாக) அடிப்படையில் கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இந்த முறையில் கிரீன் கார்டு பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
கோல்டு கார்டு மூலமாகவும் அமெரிக்காவில் வாழ்வதற்கான குடியுரிமையைப் பெறலாம்.ஆனால் இதற்காக 5 மில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும். பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், இந்த முறையில் விரைவாக அமெரிக்கக் குடியுரிமை பெறலாம்.