டிரம்பின் அடுத்த உத்தரவு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தடை விதிக்கக் காரணம் என்ன?

2 hours ago
ARTICLE AD BOX

டிரம்பின் அடுத்த உத்தரவு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தடை விதிக்கக் காரணம் என்ன?

டொனால்ட் டிரம்ப், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மன் ஜூனியர்
  • பதவி, பிபிசி நியூஸ், வெள்ளை மாளிகை
  • 5 நிமிடங்களுக்கு முன்னர்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) மீது தடை விதித்து நிர்வாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அந்த உத்தரவில் "அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய கூட்டணி நாடான இஸ்ரேல் மீது ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை ஐசிசி சுமத்துவதாக" அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க குடிமக்கள் அல்லது அமெரிக்கக் கூட்டாளி நாடுகளில் உள்ளவர்கள் மீது ஐசிசி விசாரணை மேற்கொள்வதற்கு துணைபோகும் நபர்கள் மீது நிதி மற்றும் விசா தடையை அறிவித்துள்ளார் அவர்.

வாஷிங்டனுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருகை தந்த பிறகு இப்படியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

கடந்த நவம்பர் மாதம், ஐ.சி.சி. காஸாவில் போர்க்குற்றங்கள் புரிந்ததாகக் கூறி, நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேபோன்று, ஹமாஸ் அமைப்பின் தளபதிக்கும் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

வியாழக்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் அறிக்கையில், நெதர்லாந்தின் ஹேக் எனும் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் ஐ.சி.சி. தார்மீக ரீதியில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு ஒரே நேரத்தில் வாரண்டை பிறப்பித்து சமமாக நடத்துவது வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டிருந்தது.

நிர்வாக உத்தரவில் குறிப்பிட்டிருந்தது என்ன?

ஐ.சி.சியின் சமீபத்திய நிகழ்வுகள் அனைத்தும் முன்னேப்போதும் இல்லாத வகையில் அபாயகரமானதாக உள்ளது என்றும், 'துன்புறுத்தல், துஷ்பிரயோகம், மற்றும் சாத்தியமான கைதுக்கு' அமெரிக்கர்களை ஆளாக்கும் வகையிலும் அதன் செயல்பாடுகள் உள்ளது என்றும் டிரம்பின் நிர்வாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இத்தகைய நடத்தை, அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட அதன் கூட்டணி நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் முக்கிய தேசிய பாதுகாப்பை குறைமதிப்புக்கு உள்ளாக்குகிறது," என்றும் அந்த நிர்வாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கொண்டு, "இரு நாடுகளும் (அமெரிக்காவும், இஸ்ரேலும்) வளர்ந்து வரும் ஜனநாயக நாடுகள். இவை முறையாக போர் விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன," என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குத் தடை விதித்துள்ளார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸாவில் ஹமாஸுக்கு எதிராக நடைபெற்ற போரில், போர் குற்றங்களை நிகழ்த்தியதாகக் கூறி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தொடர்ந்து விமர்சிக்கும் அமெரிக்கா

அமெரிக்கா, ஐ.சி.சி.யில் உறுப்பினராக இல்லை. மேலும், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் தொடர்பாக வெளியாகும் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் அமெரிக்கா தொடர்ச்சியாக மறுத்துவருகிறது.

தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமை மீது ஐ.சி.சி. கட்டுப்பாடுகள் விதிக்கிறது என்றும், இரான் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான குழுக்களை ஐ.சி.சி. கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றும் வெள்ளை மாளிகை குற்றம்சாட்டுகிறது.

டிரம்ப் தொடர்ச்சியாக இந்த நீதிமன்றத்தை விமர்சனம் செய்து வந்தார். இதற்கு முன்பு அதிபராக பதவி வகித்த போதும் இந்த நீதிமன்றத்தின் மீது தடை விதிக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆப்கானிஸ்தானில் போர்க் குற்றங்களில் அமெரிக்கா ஈடுபட்டதா என்பதை விசாரித்த ஐ.சி.சி. அதிகாரிகள் மீது அவர் தடை விதித்தார். ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் அந்தத் தடைகள் நீக்கப்பட்டன.

கடந்த மாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஐ.சி.சிக்கு தடை விதிக்க வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால், அந்த மசோதா செனட் அவையில் தோல்வி அடைந்தது.

யுகோஸ்லாவியா அரசு கலைப்பு, ருவாண்டா இனப்படுகொலை போன்ற நிகழ்வுகளைளைத் தொடர்ந்து, வன்முறை குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் வகையில் 2002-ம் ஆண்டு ஐ.சி.சி. உருவாக்கப்பட்டது.

ஐ.சி.சியை உருவாக்கிய ரோம் உடன்படிக்கையை 120 நாடுகள் அங்கீகரித்துள்ளன. மேலும், 34 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. எதிர்காலத்தில் அந்த நாடுகளும் ஐ.சி.சியை அங்கீகரிக்கலாம்.

ரோம் உடன்படிக்கையை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை.

இதுபோன்ற சர்வதேச விவகாரத்தில் ஐசிசி என்பது கடைசி முயற்சியாகும். இது தேசிய அளவிலான அதிகாரிகளால் வழக்குத் தொடர முடியாத நிலையோ, விசாரணை செய்ய முடியாத நிலையில் தான் ஐ.சி.சி வழக்கை விசாரிக்க முன்வரும்.

முன்னாள் அதிபர் பைடனும், நெதன்யாகுவுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக கருத்துகளை முன்வைத்தார். அவர் ஐ.சி.சியின் நடவடிக்கை மூர்க்கத்தனமாக உள்ளது என்றும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸை சமமாக பாவிக்கக்கூடாது என்றும் கூறினார்.

டொனால்ட் டிரம்ப், பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கா, இஸ்ரேல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஐசிசி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டிரம்பும் நெதன்யாகுவும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தப் பிறகு ஐ.சி.சி. தொடர்பான நிர்வாக உத்தரவை பிறப்பித்தார் டிரம்ப்

காஸாவை கைப்பற்றும் முனைப்பில் அமெரிக்கா

செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவும் கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்கள். அப்போது, காஸாவை அமெரிக்கா எடுத்துக்கொண்டு அங்கே பாலத்தீனர்களை மறுகுடியிருப்பு செய்து, மத்திய கிழக்கின் 'சொர்க்கபூமியாக' மாற்ற திட்டம் ஒன்று அமெரிக்காவிடம் உள்ளது என்று தெரிவித்தார் டிரம்ப். அதனைத் தொடர்ந்து, இந்த நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரபு நாடுகளின் தலைவர்களும், ஐக்கிய நாடுகளின் சபையும் அமெரிக்காவின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிறகு, டொனால்ட் டிரம்ப் அவரின் ட்ரூத் சோசியல் பக்கத்தில் மீண்டும் தன்னுடைய முடிவை உறுதி செய்யும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

"சண்டையின் முடிவில் காஸா கரையை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு வழங்கிவிடும்," என்று டிரம்ப் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அங்கே பாலத்தீனர்கள் மறுகுடியிருப்பு செய்யப்படுவார்கள் என்றும் அமெரிக்க ராணுவத்தினர் யாரும் அங்கே பணிக்கு அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் மீண்டும் உறுதி அளித்தார் டொனால்ட் டிரம்ப்.

காஸா போர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்மொழிதலின்படி, இந்த கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்தில் காஸா மக்கள் அங்கிருந்து தற்காலிகமாக வேறொரு இடத்துக்கு செல்வார்கள்

ஆனால் அங்கே வசித்து வந்த 2 மில்லியன் பாலத்தீனர்கள் அனைவரும் அங்கே மறுகுடியிருப்பு செய்யப்படுவார்களா என்பது தொடர்பான எந்த தகவலையும் அவர் தெளிவாக தெரிவிக்கவில்லை.

வெள்ளை மாளிகை ஊடகத்துறை செயலர் கரோலின் லிவிட் இது தொடர்பாக புதன்கிழமை பேசியபோது, எந்த ஒரு பணியமர்த்தலும் தற்காலிகமானதே என்று தெரிவித்தார்.

வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, முன்மொழிதலின்படி, இந்த கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்தில் காஸா மக்கள் அங்கிருந்து தற்காலிகமாக வேறொரு இடத்துக்கு செல்வார்கள் என்று குறிப்பிட்டார்.

கேபிடல் ஹில்லுக்கு வந்த நெதன்யாகு அங்கே குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார். டிரம்புடன் முக்கிய உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார்.

நெதன்யாகு டிரம்புக்கு தங்கத்தால் ஆன 'பேஜர்' ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேஜர் கருவிகள் மூலம் ஹெஸ்பொலா அமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை குறிக்கும் வகையில் இந்த அன்பளிப்பு இருந்தது.

இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். சில ஆயிரம் மக்கள் காயம் அடைந்தனர்.

இஸ்ரேலோ, இரானால் ஆதரிக்கப்படும் ஹெஸ்பொலா உறுப்பினர்களை தாக்கும் நோக்கில் மட்டுமே உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறது. ஆனால், லெபனானில் பாதிக்கப்பட்டவர்களில் குடிமக்களும் இருந்தனர் என்று கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

Read Entire Article