ARTICLE AD BOX
அமெரிக்காவை சேர்ந்த பிரபல கணினி அறிவியல் விஞ்ஞானி (Computer Scientist) லெக்ஸ் பிரிட்மென். செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வாளரான இவர் பாட்காஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட உலக பிரபலங்களை லெக்ஸ் பிர்ட்மென் பேட்டி எடுத்துள்ளார்.
இந்நிலையில், லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவரிடம் லெக்ஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இந்திய-சீன உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். 3 மணிநேரம் 17 நிமிடங்கள் இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது.
ரஷ்யா-உக்ரைன் பேசினால் தீர்வு:
ரஷ்ய அதிபா் புதின், உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி ஆகிய இருவருடனும் எனக்கு நெருங்கிய நட்புறவு உள்ளது. இரு நாடுகளும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டால் மட்டுமே போருக்குத் தீா்வு கிடைக்கும். இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. அமைதியின் பக்கமே நிற்கிறது என்றார்.
"இந்திய-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி"
கடந்த ஆண்டு அக்டோபர் சீன அதிபர் ஸி ஜின்பிங் உடனான சந்திப்பின்போது, எல்லைப் பகுதிகளில் இயல்பு நிலையை நீட்டிக்க செய்வதற்கான பார்வைகளை இருவரும் பகிர்ந்துகொண்டோம். இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்; இப்போட்டி மோதலாக மாறக் கூடாது. 2020-க்கு முன்பு எல்லைப் பகுதிகளில் நிலைத்திருந்த அமைதியை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இருதரப்பிலும் ஈடுபட்டுள்ளோம். நிச்சயமாக எல்லைகளில் இயல்பு நிலை திரும்பும். எல்லைகளில் முன்பு இருந்த அதே உற்சாகம், ஆற்றல் மீண்டும் திரும்பும். ஆனால், இதற்கு நேரம் எடுக்கும்.
இருதரப்பும் உலக மேம்பாட்டிற்காக அளப்பறிய பங்காற்றியுள்ளன. பொருளாதார வரலாற்றை திரும்பிப் பார்த்தால், இந்தியாவும் சீனாவும் மட்டுமே உலகின் மொத்த ஜிடிபியில் 50% பங்காற்றியுள்ள பதிவுகளைக் காணலாம். சீனா உடனான கூட்டு ஒத்துழைப்பு கலாசார ரீதியிலும் வலுவாக உள்ளதாக நான் நம்புகிறேன் எனக் குறிப்பிட்டார்.
"பாகிஸ்தான் மறைமுக போரில் ஈடுபடுகிறது"
கடந்த 2014-ம் ஆண்டில் இந்திய பிரதமராக பதவியேற்றேன். பதவியேற்பு விழாவில் பங்கேற்க அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு அழைப்பு விடுத்தேன். இதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையே புதிய அத்தியாயம் தொடங்கும் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் என்னுடைய அமைதி முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை. அந்த நாடு மறைமுக போரில் ஈடுபடுகிறது. ஆனால் பாகிஸ்தான் மக்கள் அமைதியை விரும்புகின்றனர். தீவிரவாதம், உள்நாட்டு குழப்பங்களால் அவர்கள் விரக்தி அடைந்துள்ளனர். நிச்சயம் ஒருநாள் பாகிஸ்தான், அமைதி பாதைக்கு திரும்பும்.
குஜராத் கலவரம் - "துயரம் நிறைந்த சம்பவம்"
கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரியில் குஜராத் கலவரம் நடைபெற்றது. அது துயரம் நிறைந்த சம்பவம் ஆகும். அந்த கலவரத்துக்கு பிறகு குஜராத்தில் கலவரம் நடைபெறவில்லை. மாநிலத்தில் நிரந்தரமாக அமைதி திரும்பி உள்ளது. கடந்த 2002-ம் ஆண்டுக்கு முன்பு குஜராத்தில் சுமார் 250 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 1969-ல் நடைபெற்ற கலவரம் 6 மாதங்கள் வரை நீடித்தது.
ட்ரம்ப்-மோடி நட்புறவு குறித்த கேள்விக்கு பதில்:
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற "ஹௌடி மோடி" நிகழ்ச்சியில் நானும் அமெரிக்க அதிபர் டிரம்பும் பங்கேற்றோம். அந்த நிகழ்ச்சியின் இறுதியில் எனது அழைப்பை ஏற்று விழா மேடையை சுற்றிவந்து பார்வையாளர்களை டிரம்ப் உற்சாகப்படுத்தினார். பாதுகாப்பு நடைமுறைகளை மீறி என்னோடு அவர் இணைந்து மேடையை சுற்றி வலம் வந்தார். அவர் மிகவும் துணிச்சலானவர். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது மீண்டும் டிரம்பின் துணிச்சலை பார்த்து வியந்தேன். அவர் என்னை நம்புகிறார். இருவருக்கும் இடையே ஆழமான நட்பு நீடிக்கிறது. எங்களது உறவை யாராலும் முறிக்க முடியாது.
புனிதமான ஆா்.எஸ்.எஸ் - பிரதமர் மோடி
புனிதமான அமைப்பான ஆா்.எஸ்.எஸ்.ஸிடம் இருந்து வாழ்க்கை விழுமியங்களைக் கற்றுக் கொண்டது எனது பாக்கியம். இந்த அமைப்பு, கடந்த 1925-இல் இருந்து நாட்டுக்காக அா்ப்பணிப்புடன் செயல்பட மக்களை ஊக்குவிக்கிறது. இப்போது உலகத்தின் மிகப் பெரிய அமைப்புகளில் ஒன்றாக ஆர்எஸ்எஸ் உருவெடுத்திருக்கிறது. விரைவில் 100-வது ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டை கொண்டாட இருக்கிறோம். நாட்டுக்கு சேவையாற்றுவதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையாய பணி. மக்களுக்கு சேவையாற்றுவதை கடவுளுக்கு ஆற்றும் தொண்டாக நாங்கள் கருதுகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.