அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் எடுத்து வரக்கூடிய பல்வேறு நடவடிக்கைகளும் இந்திய ஐடி நிறுவனங்களை பெருமளவில் பாதிக்கும் என மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.
சர்வதேச கிரெடிட் ரேட்டிங் நிறுவனமான மூடிஸ் அண்மையில் அமெரிக்க குடியுரிமை கொள்கை தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான நிர்வாக குடியுரிமைக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வந்தால் இந்திய ஐடி நிறுவனங்களை தான் பெரும் அளவில் பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளது. ஏனெனில் இந்தியாவை சேர்ந்த பல்வேறு ஐடி நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை ஆன் சைட்டிற்கு அனுப்ப ஹெச்1பி விசாவை தான் பயன்படுத்துகின்றன.

அமெரிக்கா அரசு இந்த ஹெச்1பி விசா நடைமுறையில் தான் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய ஐடி நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட உள்ளன. ஏனெனில் அமெரிக்காவில் ஹெச்1பி விசாவை பயன்படுத்தி சென்று வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் தான். 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி பார்க்கும்போது அமெரிக்காவில் வழங்கப்பட்ட 75% ஹெச்1பி விசாக்கள் இந்தியாவை சேர்ந்த தொழில் நிபுணர்களுக்கு தான் வழங்கப்பட்டுள்ளன.
இன்போசிஸ் , டிசிஎஸ் ஆகிய பெரிய ஐடி நிறுவனங்கள் எல்லாம் நீண்ட கால பணிகளுக்காக தங்களுடைய ஊழியர்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கு ஹெச்1பி விசாவையே பயன்படுத்துகின்றன. இந்த நிலையில் மூடீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க அரசு தங்களுடைய குடியுரிமை கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது, ஹெச்1பி விசாவுக்கான கட்டணத்தை உயர்த்துவது. ஹெச்1பி விசாவில் அமர்த்தப்படும் ஊழியர்களுக்கான சம்பள வரம்பினை உயர்த்துவது என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளை கையில் எடுத்தால் அமெரிக்காவை சார்ந்து வேலை செய்யக்கூடிய வெளிநாட்டு ஐடி நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளது.
குறிப்பாக டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த பிரச்சனையில் சிக்கி தவிக்கும் என தெரிவிக்கிறது. இதனால் இந்த நிறுவனங்களின் வருமானம் பாதிக்கும் என மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் காரணமாக டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவில் தங்களுடைய ஐடி பணிகளுக்கு அமெரிக்காவிலேயே ஆட்களை தேட வேண்டிய நிலை உருவாகும் அவ்வாறு அமெரிக்காவிலேயே வேலைக்கு ஆட்களை தேடும்போது அவர்களுக்கு அதிக அளவு ஊதியத்தை தர வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியேற்ற துறை வெளியிட்டுள்ள தகவலின் படி பார்க்கும்போது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட்ட 1.30 லட்சம் ஹெச்1பி விசாக்களில் 24,760 விசாக்களை இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட நிறுவனங்கள்தான் கைப்பற்றியுள்ளன. இதில் இன்ஃபோசிஸ் நிறுவனம் 8,140 விசாக்களையும் டிசிஎஸ் 5,274 விசாக்களையும் ஹெச்சிஎல் சுமார் 3000 விசாக்களையும் பெற்றுள்ளன.