டாப்5 செய்திகள்: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை உறுதி - ஐகோர்ட் தீர்ப்பு

3 hours ago
ARTICLE AD BOX

டாப்5 செய்திகள்: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை உறுதி - ஐகோர்ட் தீர்ப்பு

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், @jawahirullah_MH/twitter

2 நிமிடங்களுக்கு முன்னர்

இன்றைய (15/03/2025) தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

"வெளிநாடுகளில் இருந்து அனுமதியின்றி பணம் பெற்ற வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது," என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 1997 முதல் 2000-ம் ஆண்டு வரை வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ1.55 கோடி பணம் பெற்றதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏ-வுமான ஜவாஹிருல்லா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் கடந்த 2011-ம் ஆண்டு ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.

"இந்த சிறை தண்டனையை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்ட அனைவரும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு அவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி செய்தது.

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை உயர்நீதிமன்றம்

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. வேல்முருகன், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி வசூலில் ஈடுபட்டதாக எம்எல்ஏ ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த தண்டனையை எதிர்த்து மனுதாரர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்வதற்காக ஒரு மாத காலத்துக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை - ஸ்டாலின் முயற்சிக்கு கேரள முதல்வர் ஆதரவு

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்து தமிழக முதல்வர் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் ஆலோசனைக் கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தார் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் மார்ச் 22 அன்று நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு ஏழு மாநிலங்களின் முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சூழலில் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் நேரில் சென்று பினராயி விஜயனை இந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்புவிடுத்தனர்.

"ஜனநாயக மதிப்பீடுகள் மற்றும் கூட்டாட்சி நடைமுறைகளை மதிக்காமல் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைக்க மத்திய அரசு அவசரம் காட்டி வரும் சூழலில் சென்னையில் வரும் 22-ஆம் தேதி அன்று நடைபெறும் அனைத்துக்கட்சி ஒற்றுமை மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டுக்கு எனது இசைவை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று பினராயி விஜயன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், @pinarayivijayan/X

படக்குறிப்பு, ஜனநாயக மதிப்பீடுகள் மற்றும் கூட்டாட்சி நடைமுறைகளுக்கு எதிரானது மறுசீரமைப்பு நடவடிக்கை என பினராயி விஜயன் கருத்து

கட்சி நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு தர கட்டணம் - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்துள்ள உயா்நீதிமன்றம், இனி அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு காவல் துறையினா் பாதுகாப்பு அளித்தால், அதற்கு அந்தக் கட்சியினரிடமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி நாம் தமிழா் கட்சி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) சீமான் தலைமையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அந்தக் கட்சி நிா்வாகி சசிக்குமாா் மனு தாக்கல் செய்தாா்.

அதில், திருப்போரூா் கந்தசாமிக் கோயில் திருவிழாவைக் காரணம் காட்டி காவல் துறையினா் அனுமதி மறுத்துவிட்டனா் என்றும், அமைதியான முறையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தாா்.

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், NTK

"இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வந்தபோது, திருப்போரூரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு குறிப்பிட்ட இடத்தில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை காவல் துறையினா் நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க வேண்டும். காவல் துறை பாதுகாப்பு வழங்க ரூ. 25 ஆயிரத்தை கட்டணமாக நாம் தமிழா் கட்சி செலுத்த வேண்டும் என்றாா்.

அதற்கு நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி ரூ. 25,000 செலுத்த வேண்டும் என்பதை உத்தரவில் இருந்து நீக்கினாா்.

பின்னா் நீதிபதி, பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும், சட்டம் - ஒழுங்கை கட்டிக்காக்கவும் பணியமா்த்தப்பட்டுள்ள காவல் துறையினா் இதுபோன்ற அரசியல் கட்சியினா் நடத்தும் நிகழ்வுகளுக்கும் பாதுகாப்பு அளிக்க நேரிடுவதால் அவா்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் இதுபோல நடத்தும் பேரணி, பொதுக்கூட்டம், ஆா்ப்பாட்டம், போராட்டம் போன்ற அன்றாட நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு அளிப்பது காவல் துறையினரின் வேலை அல்ல. அரசியல் கட்சியினா் நடத்தும் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு அளிக்க காவல் துறையினா் பணியமா்த்தப்பட்டால் குறிப்பிட்ட தொகையை அந்தக் கட்சியினரிடமிருந்து கட்டணமாக காவல் துறையினா் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தாா்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

மார்ச் 24, 25-ந் தேதிகளில் வங்கிகள் ஸ்டிரைக்

இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் ஸ்டிரைக் நடைபெறும் என்று வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள், அதிகாரிகள், இயக்குநர்கள் உள்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 24 மற்றும் 25-ந் தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்து இருந்தன.

9 வங்கி ஊழியர் சங்கங்களின் உயரிய அமைப்பான வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு இதற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, இந்திய வங்கிகள் சங்கம், ஐக்கிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

பேச்சுவார்த்தையின்போது, வாரத்தில் 5 நாள் வேலையை அமல்படுத்த வேண்டும். பணித்திறனை ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை ஆகிய உத்தரவுகளை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஐக்கிய கூட்டமைப்பு முன்வைத்தது. ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எல்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி, மார்ச் 24 மற்றும் 25-ந் தேதிகளில் நாடு தழுவிய 2 நாள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், Getty Images

பெண்களை கட்டுப்படுத்தும் தடைகள் உடைக்கப்படும் - இலங்கை பிரதமர்

"தேசிய அபிவிருத்தியில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை உணர்ந்து, பொருளாதாரத்தில் பெண்கள் முழுமையாகப் பங்கேற்பதைக் கட்டுப்படுத்தும் தடைகளை உடைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்," என்று வீரகேசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் மார்ச் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

"இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் மகத்தான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு தடைகள் பொருளாதாரத்தில் அவர்களின் முழு பங்களிப்பையும் மட்டுப்படுத்தியுள்ளன.

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், FACEBOOK/HARINI AMARASURIYA

பெண்கள் வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களாக முன்னேறக்கூடிய ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் இந்தத் தடைகளை உடைக்க எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

பெண் தொழில்முனைவோருக்கு உகந்த சூழலை உருவாக்குவதன் மூலமும், குழந்தை பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் பெண்களின் பொருளாதார பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் மாற்றுத்திறனாளி சேவைகள் போன்ற துறைகளை வலுப்படுத்துவதன் மூலமும் பெண்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஹரிணி அமரசூரிய கூறினார்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

Read Entire Article