ARTICLE AD BOX
குழந்தைகள் சாக்லேட், மிட்டாய் போன்ற இனிப்புகளை விரும்பி சாப்பிடுவது இயல்புதான். பெற்றோர் உணவு சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட்டால் சாக்லேட் தருவதாக கூறுவார்கள். இதனால் குழந்தைகள் சாக்லேட் கிடைக்கும் என்ற ஆவலில் வேண்டா வெறுப்பாக உணவை சாப்பிடுவார்கள். இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்க அவர்களுக்கு இனிப்பு பொருட்களை வாங்கி கொடுப்பார்கள் பெற்றோர். ஆனால், அதிகளவில் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடுவது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு என்பதை மறந்து விட கூடாது.
சந்தையில் கிடைக்கும் சாக்லேட், மிட்டாய், கேக் போன்ற இனிப்புகளில் அதிகளவில் சர்க்கரை இருப்பதால், அவற்றை குழந்தைகளுக்கு அளவுக்கு ஏற்ப மட்டுமே வாங்கி கொடுக்க வேண்டும். குழந்தை பருவத்தில் அதிகளவு இனிப்பு சாப்பிடுவது அவர்கள் பெரியவர்களாக வளர்த்த பின்னர் பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடும் என்பதை பெற்றோர் மறக்க வேண்டாம்.
அதேபோல் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு, சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு சரியான உணவு பழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும். இனிப்பு பண்டங்களை முற்றிலும் தவிர்க்காமல், அதே நேரத்தில் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் (என்ஐஎச்) படி, அதிகப்படியான சர்க்கரையின் நுகர்வு பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், போதை பழக்கத்தை போல் இனிப்புக்கு அடிமையாகும் நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுவார்கள் என்று எச்சரிக்கிறது. இப்போது இனிப்பு பண்டங்களை அதிகப்படியான சாப்பிடுவது குழந்தைகளின் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கும் என்று பார்க்கலாம்.
மிட்டாய், சாக்லேட் மற்றும் கேக், குளிர்பானங்கள் போன்ற அதிகளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் கலோரிகளில் அதிகமாகவும் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும் இருக்கும். இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்து, நாளடைவில் உடல் பருமன் ஏற்படுவது மட்டுமல்லாமல் டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய், எலும்பு மற்றும் தசை பிரச்சனை, உயர்ரத்த அழுத்தம் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழி வகுக்கும்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) குழந்தை பருவ உடல் பருமனுக்கு அதிக இனிப்பு பண்டங்களை சாப்பிடுவது தான் காரணம் எனக்கூறியுள்ளது.
குழந்தைகள் அதிகளவு இனிப்பு பொருட்களை சாப்பிடுவது பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதிகளவு இனிப்பு சாப்பிடுவதால் ஏற்படும் பாக்டீரியாக்கள் அதிகளவு அமிலங்களை உற்பத்தி செய்து பற்களை அரித்து, துவாரங்கள், பல் சிதைவு மற்றும் சொத்தை பற்களுக்கு வலிவகுக்கும்.
ஆரோக்கியமான பழக்கங்களை இளம் வயதிலேயே தொடங்குவது மிகவும் முக்கியமாகும். ஆரம்பகால சர்க்கரை நுகர்வு பிற்காலத்தில் நாள்பட்ட நோய்களின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளின் நீண்ட கால ஆரோக்கியத்தை மேம்படுத்த இளம் வயதிலிருந்தே இனிப்பு பொருட்களை அளவோடு சாப்பிடுவது நல்லது.
அதிகப்படியான இனிப்பு குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் பாதித்து, அவர்களை தொற்றுநோய்களுக்கு ஆளாக்கும்.
செயற்கை இனிப்புகளுக்கு பதிலாக கடலை மிட்டாய், எள் மிட்டாய், கொக்கோ மிட்டாய், கமர்கட், பால்கொழுக்கட்டை, பால்கோவா, வெல்லத்துடன் சேர்த்த இனிப்பு, கருப்பட்டி சேர்த்த இனிப்பு திண்பண்டங்களை செய்து கொடுக்கலாம். இவற்றில் இரும்பு சத்து அதிகம் உள்ளது மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டிகளாகும்.