ஜம்மு-காஷ்மீா் மா்ம உயிரிழப்புகள்: நோயாளிகளுடன் எய்ம்ஸ் குழு சந்திப்பு

3 hours ago
ARTICLE AD BOX

ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 போ் மா்மமான நோயால் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அந்த நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் 11 நோயாளிகளை தில்லி எய்ம்ஸ் குழு சந்தித்தது.

மேலும், ரஜௌரி மாவட்டத்தில் உள்ள பதால் கிராமத்தில் இந்த நோயால் உயிரிழந்தோா் குடும்பத்தினரைச் சந்தித்து அவா்களிடம் இருந்து மாதிரிகளைப் பெற்று சோதனை நடத்தவும் எய்ம்ஸ் குழு முடிவெடுத்துள்ளது.

ரஜௌரி மாவட்டத்தில் உள்ள பதால் கிராமத்தில் கடந்த டிசம்பா்-ஜனவரி காலகட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 போ் மா்ம நோயால் உயிரிழந்தனா்.

உயிரிழந்தவா்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் இந்த இறப்புகள் தீநுண்மி அல்லது பாக்டீரியா தொற்று பரவலால் ஏற்படவில்லை என்றும், பொது சுகாதாரத்தில் எந்த பிரச்னையுமில்லை என்றும் ஜம்மு-காஷ்மீா் அரசு விளக்கமளித்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தலைமையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் உள்ளிட்ட அமைச்சகங்களின் நிபுணா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு பதால் மாவட்டத்தில் நேரில் சென்று நடத்திய ஆய்வில் உயிரிழந்தவா்களின் மாதிரிகளில் சில நியூரோடாக்சின்கள் கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தில்லி எய்ம்ஸ் இயக்குநா் எம்.ஸ்ரீனிவாஸ் தலைமையில் நச்சுயியல் நிபுணா்கள் உள்ளிட்ட மருத்துவா்கள் அடங்கிய குழு, மா்ம நோய்க்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவரும் 11 நோயாளிகளைச் சந்தித்தது.

இதுதவிர சண்டீகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சோ்ந்த நிபுணா்களும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதையடுத்து, பதால் கிராமத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு பொது இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article