சோம்பலை போக்கும் பாதைகளை உருவாக்குவோம் : சோம்பல் தான் உங்களின் முதல் எதிரி..!!

2 hours ago
ARTICLE AD BOX

ஒவ்வொரு மக்களையும் முன்னேற்ற பாதையில் இருந்து சரிவடைய செய்வதே சோம்பல் தான். சோம்பல் மூலம்தான் ஒருவரின் விதி செயல்படுகிறது. சோம்பல் என்பது பல கெட்ட குணங்களின் வேர்.

ஒரு இடத்திற்குத் தாமதமாக போவது, ஒரு செயலை உடனே முடிக்காமல் தள்ளிப் போடுவது, ஒரு செயலை பாதியில் விட்டு விடுவது, ஒரு செயலை தொடங்குவதற்கு யோசித்து கொண்டே இருப்பது, போரடிக்கிறது என்று சொல்வது இப்படி பலவகையாக வெளிப்படுவதுதான் சோம்பல்.

சோம்பலை ஒழிக்கப் பத்து வழிகள் என்று சுலபமாக பட்டியலிட்டு விடலாம். ஆனால் அதை செய்வதற்கு தடையாக இருப்பதுவும் சோம்பல்தானே எல்லாவற்றுக்கும் மனம்தான் காரணம். மனத்தைச் சரிப்படுத்தத்தான் இத்தனை ஆன்மீக நூல்களும், பயிற்சிகளும். சோம்பலை நீக்க தினமும் அரைமணி நேரம் தியானம் செய்யலாம், கால் மணி நேரம் யோகா செய்யலாம் என்று சுலபமாகச் சொல்லலாம். அதை செய்வதற்கும் சோம்பல்தானே தடையாக இருக்கிறது. அப்படி பட்ட மனதை இயக்குவது நாமாக இருக்க வேண்டும்…

அதிகம் சுறுசுறுப்பாக இருப்பது சில சமயங்களில் பரபரப்பாக மாறி மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஆதலால் சோம்பலாக இருப்பதும் சரியல்ல, பரபரப்பாக இருப்பதும் சரியல்ல.

இதயம் இயல்பாகத் துடிப்பதை விட்டு, குறைவாக (சோம்பலாக) துடித்தால் அது ஆபத்தை விளைவிக்கும். வேகமாக துடித்தாலும் ஆபத்து தான். இதயம் ஒரே சீராக ஓய்வின்றி துடித்தால் பாதகமில்லை. அதுபோல் நம் மனமானது நம்மை ஒரே சீராக கொண்டு செல்லுமானால் சோம்பலை அழித்து விடலாம்.

அப்படியானால் சோம்பலும் இல்லாமல் பரபரப்பும் இல்லாமல் வேலை செய்து பழக வேண்டும். வேகமாகப் போவது வேறு; அவசரமாகப் போவது வேறு. அதே போல் சோம்பலாக இருப்பதற்கும், ஓய்வாக இருப்பதற்கும் ஒரு நூலிழை தான் வேறுபாடு. கொஞ்சம் கவனிக்காமல் விட்டு விட்டால் ஓய்வு சோம்பலுக்குள் நம்மைத் தள்ளி விடும்.உடல் ஆரோக்கியமாக இருந்தாலும் அதை முடக்கிப் போடுவது மனம்தான். ஆரோக்கியமாக இல்லா விட்டாலும் அதை வலுப்படுத்துவதும் மனம்தான். உடல் என்பது மனதின் கருவிதான்; மனம்தான் உடலை இயக்குகிறது. பிறந்ததிலிருந்து நம் மனம் சொல்வதைதான் கேட்டுக் கொண்டிருக்கிறோம். முதல் முதலாக அதையே கேள்வி கேட்கும் போது பதில் சொல்ல முடியாமல் விழிக்கும். ஆனால் அது அவ்வளவு சாதாரண விஷயமல்ல.

மனம் என்பது என்னுள் இருக்கிறது. அந்த மனதை நான் என் ஆளுகைக்குள் வைத்திருக்க வேண்டும். அவன்தான் இயல்பான மனிதன். ஒரு மனிதன் சுதந்திரமானவனாக ஆக வேண்டுமானால் அவன் மனதின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டும்.

நம்மை நாமே ஆள்வது என்றால் முதலில் நம் மனதை ஆளக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த கல்வியை வேறு எங்கும் கற்க முடியாது. மற்றவர்கள் பெற்ற அனுபவத்தின் மூலமும், நாமே பெற்ற அனுபவத்தின் மூலமும்தான் வாழ்க்கைக்கான கல்வியை நாம் அறிய முடியும். மனதை பழக்குவதுதான் கல்வி. முதலில் மனதை பழக்க வேண்டும்.மனதில் இந்த சோம்பல் எங்கிருந்து ஆரம்பமாகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். அதைதான் தன்னறிதல் என்று சொல்கிறார்கள். தன்னையறிந்து செயல்பட்டாலே சோம்பல் மறைந்து போகும். எல்லா கெட்ட குணங்களும், நல்ல குணங்களும் மனம் சார்ந்தவை. மனதை நாமே இயக்க வேண்டும். மனதிலிருந்து நாம் பிரிந்து தனியே இயங்க வேண்டும். அப்போது தான் நாம் மனதை இயக்க முடியும். மனதை சரியாக இயக்க முடிந்தால் சோம்பல் என்ன, எதை வேண்டுமானாலும் பொசுக்கி சாம்பலாக்க முடியும்…!!

Read Entire Article