ARTICLE AD BOX
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்பது, சட்டத்திருத்தம் மூலமாக தொகுதி வரையறையை மேலும் தள்ளிவைப்பது தான் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டுநடவடிக்கை குழு கூட்டம் குறித்தும், அதில் நடைபெற்ற விவாதங்கள் குறித்தும் பத்திரிகையாளர் தராசு ஷியாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட போதே இந்த சர்ச்சை வந்துவிட்டது. அங்கிருக்கும் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 880 ஆகும். நமக்கு தேவைப்படுவது 543 இடங்கள் ஆகும். அப்போது எஞ்சி இருக்கும் இடங்களை வைத்து இந்த சர்ச்சை பொதுவெளிக்கு வந்துவிட்டது. இது அண்ணாமலைக்கு தான் தெரியவில்லை. தொகுதி மறுவரையறை என்று எந்த பெயரில் சொன்னாலும், அது மக்களவையை மாற்றி அமைப்பதுதான். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தில் எம்.பிக்கள், எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை எப்படி அமைய வேண்டும் என்று ஒரு ஷரத்து உள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இது 1971 முன்பு வரை சரியாக சென்றுகொண்டிருந்தது.
இந்த விவகாரம் தேவை அற்ற அச்சம் என்று பாஜக சொல்வது தவறு என்பதற்கான உதாரணம் வரலாற்றிலேயே உள்ளது. தமிழகத்தில் 41 சீட்டுகள் ஆக இருந்தது தான், 39 ஆக குறைந்துள்ளது. அடிப்படையில் 10 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி என்று இருக்கிறபோது, உ.பி. மாதிரியான மாநிலங்களில் இதுபோன்ற கணக்குகள் வரவில்லை. அவர்களது நீண்டநாள் கோரிக்கை என்பது மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை, எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை அரசியலமைப்பு சட்டத்தின் படி மாற்றி அமைக்க வேண்டும் என்பதாகும். அதனால் அரசியலமைப்பு சட்டத்தில் இந்திரா காந்தி காலத்தில் ஒரு முறையும், வாஜ்பாய் காலத்தில் மற்றொரு முறையும் திருத்தம் செய்தார்கள். தலா 25 வருடங்கள் வீதம் 50ஆண்டுகளில் எதையுமே நாம் மாற்றி அமைக்கவில்லை. உதாரணமாக தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. அதற்கு அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்காக நாம் 2 திருத்தங்களை கொண்டுவந்துள்ளோம். அதனுடைய கால கட்டம் 2026ல் முடிகிறது. அதனால் 2026ல் மக்களவை தொகுதிகள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்படும்போது எந்த பிரச்சினையும் எழாது. ஆனால் எம்.பி-க்களின் எண்ணிக்கை குறைந்தாலோ கூடினாலோ பிரச்சினையாகும். தமிழ்நாட்டில் 39 எம்.பிக்களில் குறைந்தாலோ, பிற மாநில விகிதாச்சரப்படி இல்லாமல் 130 ஆக கூடினாலோ பிரச்சினையாகும். அதனால் தான் முதலமைச்சர் இதனை அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று சொல்கிறார். மத்தியில் அதிகாரம் என்பது எப்போதும் எம்.பிக்களின் எண்ணிகையை வைத்துதான் உள்ளது. இதுபோக மக்களவை தொகுதி இடங்களை அடிப்படையாக கொண்டு, மாநிலங்களவை இடங்களும் தீர்மானிக்கப்படுகிறது. மக்களவை எண்ணிக்கை மாற்றியமைக்கப்பட்டால், மாநிலங்களவை எம்.பிக்களின் எண்ணிக்கையும் தன்னிச்சையாக மாறிவிடும். அதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய அச்சம் என்பது நியாயமானது மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட அச்சம்தான்.
சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டத்தில் அடுத்த 30 வருடங்களுக்கு தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது என்று தீர்மானம் போடப்பட்டது. மீண்டும் ஒரு முறை அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப் போகிறீர்களா என கேள்வி எழுகிறது. 2 ஷரத்துகளிலும் தலா 25 ஆண்டுகள் கொடுத்துவிட்டோம். இன்னும் 9 மாதங்கள் முடிந்தால் இந்த 2 ஷரத்துக்களும் தன்னிச்சையாக ரத்தாகிவிடும். சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்பது, கூட்டுக்குழுவில் இருந்து பிரதமர் மோடியை சந்திப்பது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் என்ன முடிவை எடுப்பார். எது ஒரு கட்சிக்கு லாபமோ அந்த முடிவைத்தான் அவர்கள் எடுப்பார்கள்.
இந்த கூட்டத்திற்கு அகிலேஷ் வந்தாரா? ஏன் என்றால் உத்தரபிரதசத்தில் இதனை அவர் சொல்ல முடியாது. ரேவந்த் ரெட்டி வந்தாரே தவிர காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்ததா? அதனால் தான் Fair Delimitation என்று கருத்துக்குள் தமிழக அரசு செல்கிறது. டிமிலிட்டேஷன் வேண்டாம் என்று சொன்னால் நாட்டில் உள்ள பெரிய கட்சிகள் எதுவும் அதற்குள்ளாக வராது. ஏனென்றால் அது அவர்களை பாதிக்கும். Fair Delimitation என்று கொண்டுவந்தால், இயல்பாக 2026ல் முடிவடையும் ஷரத்தை திருத்தம் மேற்கொண்டு இன்னும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்வதாகும். இது ஒரு நுண் அரசியலாகும். இந்த கூட்டத்தில் மம்தா பங்கேற்காததற்கான காரணங்கள் உள்ளன. உண்மையில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், நிச்சயமாக இந்த விவகாரத்திற்குள் வர மாட்டார்கள். ராஜஸ்தானில் காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ளது. அங்கு தொகுதிகள் அதிகரித்தால், காங்கிரசுக்கு லாபமாகும். பாஜக கூட்டணியில் இருந்த பவன்கல்யாண் கட்சி வந்துள்ளது. ஆனால் அதே கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு கூட்டத்திற்கு வந்தாரா? இவ்வாறு அவர் தெரிவித்தார்