சேவலுக்கு கிடைத்த வைரக்கல்... பயனுண்டோ? நீர்ப்புத்தன்மையை உணர்த்தும் கதை

4 days ago
ARTICLE AD BOX

ஒவ்வொரு முதலீட்டிற்கும் மூன்று கூறுகள் உண்டு.

1. வளரும் விகிதம் (rate of return)

2. நீர்ப்புத்தன்மை (liquidity)

3. பணத்தை இழக்கும் அபாயம் (risk)

இது முதலீட்டிற்கு முதலீடு மாறுபடும்‌. எந்த ஒரு முதலீட்டிலும் அதனுடைய நீர்ப்புத்தன்மையை (liquidity) அறிந்து ஈடுபட வேண்டும்.

ஒரு முதலீட்டினைப் பணமாக மாற்றுவது என்பது அதனுடைய நீர்ப்புத்தன்மையைக் குறிக்கும்.‌ இருப்பதிலேயே அதிக நீர்ப்புத்தன்மை உடையவை ரூபாய் தாள்கள் மற்றும் ரூபாய் நாணயங்கள்தான்.

ஏனென்றால், அவை ஏற்கனவே பணமாக உள்ளன. அவற்றைக் கொண்டு நாம் நமது தேவைகளுக்குச் செலவுகளைச் செய்ய முடியும்.‌ மற்ற வகை முதலீடுகளுக்கு அவற்றை எவ்வளவு எளிதாக பணமாக மாற்ற முடியுமோ, அவ்வளவு நீர்ப்புத்தன்மை அவற்றுக்கு இருக்கும். எளிதாக மாற்ற முடிந்தால் அதிக நீர்ப்புத்தன்மை. கடினமாக மாற்ற முடிந்தால் குறைந்த நீர்ப்புத்தன்மை.

*************

இதனைக் குறித்த ஓர் ஈசாப் கதையைப் பார்ப்போம்.

குடும்பத்தலைவன் சேவல் ஒன்று அதனுடைய குஞ்சுகள் மற்றும் மனைவி கோழிக்கு உணவு தேடியது. அது நிலத்தைக் கால் விரல்களால் கீறிய போது அங்கு ஏதோ ஒன்று மின்னியது.

அது என்ன பொருள் என்று அறிய அந்தப் பொருளைச் சேவல் பெயர்த்தெடுத்தது. அது ஒரு வைரக்கல் என்பது சேவலுக்குத் தெரிய வந்தது. உடனே சேவல் பின்வரும் வார்த்தைகளை உதிர்த்தது.

இதையும் படியுங்கள்:
பங்குகள் மரக்குச்சிகளைப் போன்றவை! எப்படி? படிச்சு தெரிஞ்சுக்கலாம் வாங்க!
சேவலுக்கு கிடைத்த வைரக்கல்

"ஆஹா! வைரக்கல்லே! உனது முதலாளி உன்னைக் கண்டிருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பார். உன்னை உனது பழைய இடத்தில் வைத்திருப்பார். உனது மதிப்பு அவருக்குத் தெரியும். ஆனால் உன்னால் ஒரு பிரயோஜனமும் எனக்கு இல்லை. என்னைப் பொருத்தவரை உலகில் உள்ள எல்லா வைரக்கற்களையும் விட ஒரே ஒரு தானியம் மதிப்புமிக்கது," என்றது சேவல்.

**************

இந்தக் கதையில் வைரம் என்பது மதிப்பு மிக்கதொரு விஷயம்தான் என்றாலும் அதனைப் பணமாக சேவலால் மாற்ற இயலாது. அதனைக் கொண்டு தனது பசியைத் தீர்த்துக் கொள்ள இயலாது. அதற்கு பதிலாக அந்த வைரக்கல்லை அதன் முதலாளி கண்டிருந்தால், அதனை அவர் ஒரு வைர வியாபாரியிடம் எடுத்துச் சென்று அதனைச் சரியான விலைக்கு விற்று அந்தப் பணத்தைக் கொண்டு தனது வாழ்க்கையை வளமாக நடத்திக் கொண்டிருப்பார்.

இங்கு வைரம் என்ற முதலீட்டைப் பணமாக மாற்றும் நீர்ப்புத்தன்மையானது சேவலுக்கும் வைரத்தின் முதலாளிக்கும் மாறுபடுகிறது. சேவலுக்கு நேரடியாக தானியமாக இருந்தால்தான் பிரயோஜனம். முதலாளிக்கு வைரமாக இருந்தால் கூட அதனை அவர் பணமாக மாற்றி அந்தப் பணத்தின் மூலம் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். நமது முதலீடுகளையும், நீர்ப்புத்தன்மையை அறிந்து, அதாவது எவ்வளவு எளிதாக பணமாக மாற்ற முடியும் என்பதை அறிந்து செய்ய வேண்டும்.

முதலீடுகளில் பல வகைகள் உண்டு.

சில முதலீடுகளுக்கு நீர்ப்புத்தன்மை அதிகம். சில முதலீடுகளுக்கு நீர்ப்புத்தன்மை குறைவு. தங்கத்திற்கு நீர்ப்புத்தன்மை அதிகம். அதனைப் பணமாக மாற்றுவது எளிது. அருகில் உள்ள அடமானக் கடையில் கூட பணமாக மாற்றிக் கொள்ள முடியும். வீடு, நிலம், வாகனம் போன்றவற்றிற்கு நீர்ப்புத்தன்மை குறைவு. அவற்றைப் பணமாக மாற்றுவது கடினம். அவற்றுக்குச் சரியான வாங்கும் நபர்களைக் கண்டுபிடித்து பணமாக மாற்றுவதற்கு காலம் எடுக்கும். அவசரமாக விற்க நினைத்தால் நஷ்டத்தில் விற்க நேரலாம்.

இதையும் படியுங்கள்:
நமது முதலீடுகள் ஓநாய்களிடம் மாட்டிக் கொள்ளாமல் எவ்வாறு பாதுகாப்பது?
சேவலுக்கு கிடைத்த வைரக்கல்

தொன்மையான ஓவியங்கள், தொன்மையான நாணயங்கள் போன்ற விசேஷ முதலீடுகளில் நீர்ப்புத்தன்மை குறைவு. அத்தகைய முதலீடுகள் செய்வதற்கு அதற்கேற்ற திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவற்றை சரியான இடத்தில் வாங்கி, சரியான இடத்தில் நஷ்டமின்றி பணமாக நம்மால் மாற்ற முடியும்.

நாம் குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது நமது குறிக்கோளின் காலவரையறை முடியும் காலத்தில் அந்த முதலீட்டினை பணமாக இலாபத்துடன் நம்மால் மாற்ற முடியுமா என்று அறிந்து அந்த முதலீட்டில் ஈடுபட வேண்டும். இல்லையேல் பணமாக மாற்றும் பொழுது நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.

எனவே, குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டினைத் தேர்ந்தெடுக்கும் போது, முதலீட்டின் நீர்ப்புத்தன்மையை அறிந்து கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.

Read Entire Article