சேலம்: அறக்கட்டளை பெயரில் நூதன மோசடி – 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது - ரூ.12 கோடி பறிமுதல்

5 hours ago
ARTICLE AD BOX
Published on: 
24 Jan 2025, 9:31 am

செய்தியாளர்: மோகன்ராஜ்

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த அறக்கட்டளை வாயிலாக கூடை பிண்ணுதல், மெழுகுவரத்தி, சாம்பிராணி தயாரித்தல், தையல் பயிற்சி உள்ளிட்ட பலவகையான இலவச பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலை உணவகமும் நடத்தப்பட்டது.

இந்த அறக்கட்டளையில் பணமுதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம் கொடுக்கப்பட்டது. ரூ.5,000 முதலீட்டிற்கு 11 மாதங்கள் வரை மாதந்தோறும் ரூ. 1000, ரூ. 50,000 முதலீடு செய்தால் 7 மாதத்திற்கு ரூபாய் ரூ. 15,000 உள்பட பல கவர்ச்சிகரமான திட்டங்களில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், அம்மாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர்.

அறக்கட்டளை பெயரில் நூதன மோசடி
சேலம்| கைலாஷ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வெற்றிப்படிகள் நிகழ்ச்சி -அரசுப் பள்ளி மாணவிகள் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையின் போது ஏராளமானோர் முதலீடு செந்துள்ளனர்:

இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை முதலீட்டாளர் போல் அனுப்பி வைத்துள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களாக அவர் அங்கு நடக்கும் பணப்பரிவர்த்தனைகள் குறித்து அறிக்கையை தயார் செய்து சமர்ப்பித்தார். குறிப்பாக கடந்த பொங்கல் பண்டிகையின் போது ஏராளமானோர் முதலீடு செந்துள்ளனர். மேலும், நேற்று (23.01.2025) ஒரு நாள் ஆஃபராக ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்வோருக்கு ஏழாவது மாதம் ரூ.2 லட்சமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

பொருளாதார குற்றப்பிரிவினரை சிறைப்பிடித்த முதலீட்டாளர்கள்:

இதனால் அலர்ட் ஆன பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், திடீரென நேற்று அதிரடியாக மண்டபத்திற்குள் நுழைந்தனர். அப்போது அங்கு குவிந்திருந்த முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவினரை சிறைப்பிடித்தனர். அறக்கட்டளையில் முதலீடு செய்தவர்களுக்கு இதுநாள் வரை முறையாக தவணைத்தொகை கிடைத்து வருவதாகவும், அப்படி இருக்கையில் எதற்காக அவர்களை விசாரணை செய்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முதலீட்டாளர்களை கட்டுப்படுத்த மாநகர போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர். இதன்காரணமாக அம்மாப்பேட்டை பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

அறக்கட்டளை பெயரில் நூதன மோசடி
திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று பிரியாணி சாப்பிட்டேனா? - அண்ணாமலைக்கு எம்பி. நவாஸ் கனி சவால்

2 பெண்கள் உட்பட 3 பேர் அதிரடியாக கைது:

இதையடுத்து காவல்துறையினர், முதலீட்டாளர்களை மண்டபத்திலிருந்து வெளியேற்றினர். பின்னர் அறக்கட்டளை நிர்வாகிகளான வேலூரைச் சேர்ந்த விஜயபானு, அவரது உதவியாளர் ஜெயப்பிரதா, சேலம் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மேலாளர் பாஸ்கர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்ததற்கான முறையான கணக்கு, வசூல் செய்வதற்கு முறையான உரிமம், தவணைத்தொகை வழங்குவதற்கான வருமான வழிவகை ஆகியவற்றிற்கான எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இவர்கள் 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

ரூ 12 கோடி ரொக்கம், இரண்டரை கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்:

இதைத் தொடர்ந்து நேற்று 7 பேர் சிக்கிய நிலையில், மூன்று பேர் மீது பொருளாதார குற்றபிரிவினர் வழக்குப் பதிவு செய்து விஜயபானு, ஜெயப்பிரதா, பாஸ்கர் ஆகியோர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து அறக்கட்டளை அலுவலகம் செயல்பட்ட மண்டபத்திலிருந்து ரூ 12 கோடி ரொக்கம், இரண்டரை கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Entire Article