ARTICLE AD BOX
புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு ஆய்வு மையத்தில் பிரெஞ்சு பேராசிரியராக பணியாற்றி வரும் பேராசிரியர் திரு.சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இருபதுக்கும் மேற்பட்ட பிரெஞ்சு நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். ஏற்கெனவே சிறந்த மொழிபெயர்ப்புக்கான பிரெஞ்சு அரசின் விருதையும் பெற்றிருக்கிறார்.
வெங்கட சுப்புராய நாயகர் 1987 ஆம் ஆண்டு தாகூர் கலைக் கல்லூரியில் பிரெஞ்சு மொழியில் மாநில அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று முதுகலைப் பட்டம் பெற்றார். இதற்காக 'சொசியத்தே பிரான்சேஸ்' அமைப்பு இவருக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தது. புதுவைப் பல்கலைக்கழகத்தில் 1988 ஆம் ஆண்டு பேராசிரியர் இரா.வெங்கட்டராமனின் மேற்பார்வையில் 'பிரெஞ்சு தமிழ் வினைத்தொடர்கள் - ஓர் ஒப்பாய்வு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து இளமுனைவர் பட்டமும் இதே பல்கலைக்கழகத்தில் செவாலியே இரா.
கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மேற்பார்வையில் சுவிட்சர்லாந்து 'பிரெஞ்சு எழுத்தாளர் பிலேஸ் சாந்திரார் படைப்புகளில் விலகித் தப்புதல் என்னும் கருதுகோல்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து 2006 ஆம் ஆண்டு முனைவர் பட்டமும் பெற்றார். தாகூர் கல்லூரியில், 1989 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். தற்போது காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு ஆய்வு மையத்தில் பிரெஞ்சு துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
பிரான்ஸ் அரசின் உதவியுடன் 1994 ஆம் ஆண்டில் பிரான்ஸின் பெஸான்ஸோன், க்ரேனோபில் கல்வி மையங்களில் மூன்று மாத பயிற்சியினைப் பெற்றார். 2008 ஆம் ஆண்டில் மீண்டும் பிரெஞ்சு அரசின் உதவியுடன் இரண்டு மாதங்கள் பாரிசில் தங்கி, பிரான்ஸின் தேசிய நூலகத்தில் ஆய்வினை மேற்கொண்டார். மொழிபெயர்ப்பு திட்டம் ஒன்றை மேற்கொள்ள பிரெஞ்சு அரசு இவருக்கு உதவித்தொகையை 2017 ஆம் ஆண்டில் அறிவித்தது.
அந்த உதவியுடன் 2018 மார்ச்சில், மனைவி திருமதி சிவகாமியுடன் பிரான்ஸின் ஆர்ல் என்னும் ஊரில் அமைந்துள்ள அனைத்துலக இலக்கிய மொழிபெயர்ப்பாளர் மையத்தில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து உய்பர் அதாத் எனும் பிரெஞ்சு எழுத்தாளரின் 'விரும்பத்தக்க உடல்' புதினத்தினை தமிழில் மொழிபெயர்த்து முடித்தார். மூல ஆசிரியரான உய்பர் அதாத் அவர்களை அவர்தம் இல்லத்தில் சந்தித்து மொழிபெயர்க்கப்படும் புதினம் குறித்தும் அவரது இதர இலக்கியப் பணிகள் குறித்தும் உரையாடும் அனுபவம் பெற்றார். மேலும், ஃபுக்குஷிமா நூலின் ஆசிரியர் மிக்காயெல் ஃபெரியே அவர்களையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.
இவரது முதல் நூல், 'Destination: le tamoul parlé' என்னும் பிரெஞ்சு நூலாகும். இது பிரெஞ்சு மக்கள் நம் தமிழ் மொழியை ஒரு குறுந்தட்டின் உதவியோடு கற்று பேச உதவும் கையேடு. 2008 ல் வெளியான இந்த கையேடு பெரும் வரவேற்பினைப் பெற்றது.
'உல்லாசத் திருமணம்' என்னும் மொழியாக்க நூல் 2021 ஆம் ஆண்டில் வெளியானது. பிரெஞ்சு மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல் சிறந்த மொழிபெயர்ப்பாக தெரிவு செய்யப்பட்டு மொழிபெயர்ப்புக்கான பிரெஞ்சு அரசின் உயரிய விருதான 'ரோமன் ரோலன் விருது' வழங்கப்பட்டது. இதன் பலனாக பாரிசில் 2022 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச புத்தக திருவிழாவில் இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
நம் சங்க இலக்கிய செல்வங்களான குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகியவற்றை முழுமையாக இவர் பிரெஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற லெ கிளெசியோவின் 'சூறாவளி', மற்றும் 'அடையாளத்தைத் தேடி அலையும் பெண்' என்னும் இரு குறுநாவல்கள், 'இல்லறவாசிகள் எனும் புதினம்' முதலானவை குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புப் பணிகளாகும்.
இவை தவிர, கி.ரா, எஸ்.ராமகிருஷ்ணன், பா.செயப்பிரகாசம், எஸ்.பொ, பாவண்ணன், ராஜ்ஜா, நாகரத்தினம் கிருஷ்ணா, பாரதிவசந்தன், கிரிஜா ராமச்சந்திரன் ஆகியோரின் தமிழ்க் கதைகளை பிரெஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார். பஞ்சாங்கம், இந்திரன், மாலதி மைத்ரி, கடற்கரை, சீனு.தமிழ்மணி ஆகியோரின் கவிதைகளை பிரஞ்சில் மொழியாக்கம் செய்துள்ளார்.
இவருடைய பிரெஞ்சு மொழிக்கான சேவையை அங்கீகரிக்கும் விதமாக இவருக்கு 'செவாலியே' விருது வழங்கப்படும் என்ற முடிவை பிரெஞ்சு மொழி பாராளுமன்ற கூட்டு அவை (94 நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்றங்களை உள்ளடக்கியது) எடுத்து அறிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் மாத இறுதியில் புதுச்சேரி வரவிருக்கும், பிரெஞ்சு பேசும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு இந்த விருதை அவருக்கு வழங்கவிருக்கிறது.
மிக உயரிய செவாலியே விருதைப் பெறவிருக்கும் பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்களை கல்கி வாழ்த்தி மகிழ்கிறது.