ARTICLE AD BOX
* தொடர் டிரா
நியூசிலாந்து-இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது. முதல் போட்டியில் இலங்கையும், 2வது போட்டியில் நியூசிலாந்தும் வென்றன. அதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கு இடையே டுனேடினில் நடைபெற இருந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. அதனால் தொடர், 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. முன்னதாக இந்த 2 அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஒருநாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.
* நாளை தொடக்கம்
அகில இந்திய அளவிலான 2வது ‘விளையாடு இந்தியா’ பாரா விளையாட்டுப் போட்டி நாளை புதுடெல்லியில் தொடங்குகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1200 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். நாளை முதல் 26ம் தேதி வரை இந்த போட்டிகள் மொத்தம் 7 நாட்கள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளில் பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற நவதீப் சிங் (ஈட்டி எறிதல்), ஹர்விந்தர் சிங் (வில் வித்தை) உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் காண உள்ளனர்.
* வீரருக்கு இரங்கல்
முன்னாள் ஹாக்கி வீரரும், சென்னை மாவட்ட ஹாக்கி சங்கத்தின் துணை தலைவருமான பி.எஸ்.ராஜசேகரன்(70) நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஹாக்கி சங்கங்கள், முன்னாள் வீரர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
* ஆயுஷ் வெற்றி
சுவிட்ர்லாந்தின் பெசல் நகரில் சுவிஸ் ஓபன் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. அங்கு நேற்று நடந்த தகுதிச் சுற்றில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-15 என நேர் செட்களில் வெற்றி பெற்று முதன்மை சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்து உள்ளார்.
* மியாமி ஓபன் ஆரம்பம்
கத்தார், துபாய், இண்டியன் வெல்ஸ் போட்டிகளை தொடர்ந்து 1000 தரவரிசைப் புள்ளிகளுக்கான மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடக்கிறது. தகுதிச் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன. இன்று முதல், முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதிலும் முன்னணி வீராங்கனைகளான அரைனா சபலென்கா, இகா ஸ்வியாடெக், கோகோ காப், நடப்பு சாம்பியன் டேனியலி கொலின்ஸ், மிர்ரா ஆண்ட்ரீவா, முன்னணி வீரர்கள் கார்லோஸ் அல்கராஸ், அலெக்சாண்டர் ஸ்வெரவ், டேனியில் மெத்வதெவ் ஆகியோர் நேரடியாக 2வது சுற்றில் களம் காணுகின்றனர். போதை மருந்து விவகராத்தால் விதிக்கப்பட்ட தடைக் காலம் இன்னும் முடியாததால் நம்பர் ஒன் வீரரும் நடப்பு சாம்பியனுமான ஜேனிக் சின்னர் (இத்தாலி) இந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை.
The post செய்தித் துளிகள்… appeared first on Dinakaran.