ARTICLE AD BOX
சென்னையை பொறுத்தவரை மிக முக்கிய போக்குவரத்து சேவையாக, சென்னை மாநகரப் போக்குவரத்து சேவை இருந்து வருகிறது. சாதாரண பேருந்து, டீலக்ஸ் பேருந்துகள், தாழ்தள பேருந்துகள், ஏ.சி. பேருந்துகள் என பல வகையான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை நகரில் இயங்கும் ஆயிரக்கணக்கான பேருந்துகளில் நாள்தோறும் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அலுவலகங்கள், கல்லூரிகளுக்கு செல்லும் அன்றாட பயணிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு பயண சலுகை திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சாதாரண பேருந்தில் நாள்தோறும் பயணிப்பதற்கான பயண சலுகை அட்டை குறைந்த விலையில் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ரூ.2 ஆயிரத்திற்கு மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். ரூ.2,000 கட்டணத்தில் ஏ.சி. பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் மாதம் முழுவதும் விருப்பம் போல் பயணம் செய்யலாம். ஏற்கனவே மாதம் ரூ.1,000 சலுகை அட்டை பயணத்தில் ஏ.சி. பேருந்துகள் தவிர ஏனைய பேருந்துகளில் பயணிக்க வழிவகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் சென்னையில் ஏ.சி. பேருந்தில் பயணம் செய்யும் வகையில் மாதாந்திர பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.