ARTICLE AD BOX
சென்னை,
சென்னையில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொசுக்களால் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய் தாக்குதலும் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே, கால்வாய்கள் மற்றும் மழைநீர் தேங்கும் இடங்களில் கொசு புழுக்களை அழிக்க சென்னை மாநகராட்சி மருந்து தெளித்து வருகிறது. ஆனாலும் கொசு பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.
அதனால், சென்னையில் புதிய வகை கொசுக்கள் ஊடுருவி இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்காக புதிய ஆய்வுக் கூடம் ஒன்றை மாநகராட்சி அமைக்க உள்ளது. இந்த ஆய்வு கூடத்தில் சென்னையில் வழக்கமாக உள்ள கொசுக்களை தவிர்த்து புதிய வகை கொசுக்கள் ஏதேனும் ஊடுருவி இருக்கிறதா என்று கண்டறியப்படும். இதுபோக, தற்போது கொசுக்களை ஒழிக்க பயன்படுத்தப்படும் மருந்துகளின் தன்மையை கண்டறிந்து கூடுதல் வீரியத்துடன் புதிய மருந்துகளை பயன்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
மாநகராட்சி சார்பில் கொசு புகை மருந்து அடிக்கப்பட்ட பின்னரும் தற்போது கொசுக்கள் அழிவதில்லை. இதனால், புதிய வகை கொசு ஏதும் ஊடுருவி உள்ளதா? நாம் பயன்படுத்தும் மருந்து வீரியமிக்கதாக உள்ளதா? என்று சந்தேகம் ஏற்படுகிறது. புதிய வகை கொசுக்கள் ஊடுருவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கேற்ப கொசு மருந்தை பயன்படுத்தி கொசு பரவலை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு கூறினார்கள்.