ARTICLE AD BOX
சென்னையில் எட் ஷீரன்.. களைகட்டப்போகும் இசை நிகழ்ச்சி.. டிக்கெட் ரேட் இவ்வளவா?
சென்னை: இங்கிலாந்தில் இருக்கும் எட்டன் பிரிட்ஸில் கடந்த 1991ஆம் ஆண்டு பிறந்தவர் எட் ஷீரன். 34 வயதாகும் ஷீரனின் பாடல்களுக்கும், இசைக்கும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது இசை நிகழ்ச்சி என்றாலே கூட்டம் தேனீக்கள் போல் மொய்க்கும். இந்தச் சூழலில் இன்று அவரது இசை நிகழ்ச்சி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலை 4 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. எனவே பலரும் டிக்கெட் புக்கிங்கை ஆரம்பித்திருக்கிறார்கள்.
உலகளவில் பிரபலமானவர் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் மற்றும் இசையமைப்பாளரான எட் ஷீரன். சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம் உடைய அவர் தனது 11ஆவது வயதில் முதன்முதலாக பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அதன் பிறகு ஆல்பம் உருவாக்கத்திலும் ஈடுபட்டார். அப்படி அவர் முதன்முதலாக வெளியிட்ட "+" (Plus) என்ற ஆல்பம் 2011ஆம் ஆண்டு வெளியானது. முதல் ஆல்பத்திலேயே தனது திறமை காரணமாக உலகம் முழுவதும் பல இசை ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்தார் ஷீரன்.
முதல் சிங்கிள்: அதனையடுத்து 2012ஆம் ஆண்டு The A Team என்ற முதல் சிங்கிளை வெளியிட்டார். அதுவும் முதல் ஆல்பம் போலவே சக்கைப்போடு போட்டது. அந்த சிங்கிளுக்காக பிரிட் விருதையும், பிரிட்டிஷின் பெஸ்ட் சோலோ சிங்கர் என்ற விருதினையும் வென்றார். அதனையடுத்து அவர் மேல் மேலும் புகழ் வெளிச்சம் கூடியது. அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட Multiple, Divide ஆகிய ஆல்பங்களும் உலகளவில் மெகா ஹிட்டாகி அவருக்கு விருதுகளையும் பெற்று தந்தன.
குழப்பமாக இருக்கு.. அதை நிறுத்தி 2 வருடங்கள் ஆகிவிட்டன.. சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
இசை நிகழ்ச்சிகள்: ஷீரனை பொறுத்தவரை உலகம் முழுவதும் பயணம் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். அந்தவகையில் கடந்த வருடம் மார்ச் மாதம் மும்பையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார். அது இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த இசை நிகழ்ச்சியில் ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அந்த இசை நிகழ்ச்சிக்கு பிறகு எட் ஷீரன் மீண்டும் எப்போது இந்தியா வந்து இசை நிகழ்ச்சி நடத்துவார் என்று ரசிகர்களிடையே ஆர்வம் இருந்தது.
சென்னையில் இன்று: அந்த ஆர்வத்துக்கு தீனியாக இந்த வருடமும் அவர் இந்தியா வந்திருக்கிறார். அதன்படி ஜனவரி 30லிருந்து அவரது இசை நிகழ்ச்சிகள் தொடங்கியிருக்கின்றன. முதலில் புனேவிலும், பிப்ரவரி இரண்டாம் தேதி ஹைதராபாத்திலும் நடந்தது. சூழல் இப்படி இருக்க இன்று மாலை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்டமாக அவரது இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இதனை முடித்துவிட்டு பிப்ரவரி 8, 12, 15 ஆகிய தேதிகளில் முறையே பெங்களூர், ஷில்லாங், டெல்லி ஆகிய இடங்களில் அவர் நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்.
டிக்கெட் ரேட்: சென்னையில் இன்று நடக்கவிருக்கும் எட் ஷீரன் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட்டின் ஆரம்ப விலை 4,500 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. புக் மை ஷோவில் ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டை புக் செய்துவருகிறார்கள். முன்னதாக கடந்த வருடம் மும்பையில் நடந்த நிகழ்ச்சியின்போது பேசிய எட் ஷீரன், "இந்தியாவில் நான் அளவற்ற அன்பை உணர்ந்துகொண்டிருக்கிறேன். பல நாடுகளில் இசை கச்சேரிகள் நடத்தினாலும், அங்கிருப்பவர்கள் இசையின் உற்சாகத்தை உணர்ந்தாலும் பெரிதாக வெளிக்காட்ட மாட்டார்கள். ஆனால் இந்தியாவில் ரசிகர்கள் துடிப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கிறார்கள். அதனால் இங்கு இசை கச்சேரி நடத்த பிடித்திருக்கிறது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.