சென்னை: இந்தியாவில் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் கடந்த சில ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் விலைகள் நாம் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்து விட்டன. அந்த வகையில் இந்தியாவின் பெருநகரங்களில் எந்த பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் மதிப்பு கணிசமான அளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது குறித்து சொத்து ஆலோசனை நிறுவனமான அனராக் (Anarock) ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து 2024 ஆம் ஆண்டு இறுதி வரையிலான காலகட்டத்தில் பெங்களூரு, ஹைதராபாத் , புனே, டெல்லி என்.சி.ஆர், மும்பை , கொல்கத்தா, சென்னை ஆகிய பகுதிகளில் எல்லாம் எந்தெந்த ஏரியாக்களில் வீடுகளின் மதிப்பும், வீட்டு வாடகைகளின் மதிப்பும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆயிரம் சதுர அடி கொண்ட இரண்டு படுக்கை அறை வீடு என்பதை அளவீடாகக் கொண்டுதான் இது கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி பெங்களூருவில் அதிகபட்சமாக சர்ஜாபூர் சாலையில் 2021 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் வீடுகளின் ரியல் எஸ்டேட் வேல்யூ 63 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுவே இந்த பகுதியில் வீடுகள் வாடகை மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் 76 சதவீதம் உயர்ந்துள்ளது. பெங்களூருவின் தனிசந்திரா சாலையில் வீடுகளின் மதிப்பு 67 சதவீதமும், வீட்டு வாடகை மதிப்பு 62 சதவீதமும் அதிகரித்திருக்கிறது என இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
சென்னையில் பெரம்பூர் பகுதியில் வீடுகளின் மதிப்பு அதிகபட்சமாக 23 சதவீதமும், வீட்டு வாடகைகளின் மதிப்பு 36 சதவீதமும் அதிகரித்துள்ளது. அடுத்ததாக பல்லாவரத்தில் வீட்டின் மதிப்பு 21 சதவீதமும் வீட்டு வாடகை மதிப்பு 44 சதவீதமும் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்ததாக இந்தியாவிலேயே அதிகபட்சமாக வீடுகளின் மதிப்பு உயர்ந்திருப்பது டெல்லி அடுத்த எம்சிஆர் பகுதியில் தான். இங்கே இருக்கும் செக்டார் 150 நொய்டாவில் வீடுகளின் மதிப்பு 128% அதிகரித்துள்ளது .அதுவே இதே பகுதியில் வீட்டு வாடகைகளின் மதிப்பு 66% உயர்ந்துள்ளது.
ஹைதராபாத்தில் ஹைடெக் சிட்டி பகுதியில் வீடுகளின் மதிப்பு 62 சதவீதமும், வீடு வாடகை மதிப்பு 54 சதவீதமும் உயர்ந்துள்ளது. கச்சிபவுலி பகுதியில் வீடுகளின் மதிப்பு 78 சதவீதமும், வீடு வாடகை மதிப்பு 62 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புனேவின் வகோலி பகுதியில் வீடுகளின் மதிப்பு 37 சதவீதம் தான் உயர்ந்துள்ளது. ஆனால் வீட்டு வாடகைகளின் மதிப்பு 65 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது வீட்டின் மதிப்பை விட வீட்டு வாடகை மதிப்பு இங்கே உயர்ந்திருக்கிறது.
மும்பையில் செம்பூரில் வீட்டின் மதிப்பு 48 சதவீதம் உயர்ந்திருக்கிறது, கொல்கத்தாவில் ராஜா ராட் பகுதியில் 32 சதவீதம் என வீடுகளின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. எனவே முதலீட்டு நோக்கத்தில் வீடுகளை வாங்க எண்ணுபவர்கள் இந்த பகுதிகளில் எல்லாம் கவனம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.