ARTICLE AD BOX
சென்னை:
சென்னை அபிராமபுரம் அருகேயுள்ள குருபுரத்தில் அமைந்திருக்கும் திருவீதி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், பூர்ணாஹுதி, பிரவேச பலி, வாஸ்து சாந்தி போன்ற நிகழ்ச்சிகளும், 4 கால யாக பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் கலச புறப்பாடு நடந்தது.
இதையடுத்து திருவீதி அம்மன், மகா கணபதி, சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, துர்கை, ஆஞ்சநேயர், அய்யப்பன், சனீஸ்வரர் மற்றும் நவகிரகங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவில் விநாயகர், முருகர், சிவன், திருவீதி அம்மன் உற்சவ மூர்த்திகள் சப்பரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மயிலாப்பூர் எம்.எல்.ஏ. த.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.