ARTICLE AD BOX
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. 'அழகிய லைலா-வான ரம்பாவிற்கு', 90ஸ்-களில் தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. இன்றளவும் கூட பலருக்கும் பிடித்தமான நடிகையாக ரம்பா திகழ்கிறார். இந்நிலையில், மீண்டும் சின்னத்திரை மூலம் ரம்பா ரீ-என்ட்ரி கொடுத்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்த சூழலில் சென்னையில் தான் வசிக்கும் வீடு மற்றும் அந்த வீட்டில் தான் பராமரித்து வரும் செடிகள் குறித்து நடிகை ரம்பா, அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் நடிகை ரம்பா பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்களை காணலாம்.
நடிகை ரம்பா திருமணத்திற்கு பின்னர் தனது குடும்பத்தினருடன் கனடாவில் வசித்து வந்ததாக கூறியுள்ளார். இதன் காரணத்தினால் அவரது குழந்தைகளுக்கு விடுமுறை கிடைக்கும் போது மட்டுமே சென்னையில் இருக்கும் வீட்டிற்கு வருவதாக தெரிவித்தார். இப்போது, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தான் மட்டும் சென்னையில் இருக்கும் தனது வீட்டில் தனியாக வந்து வசிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டில் பராமரிக்கப்பட்டு வரும் மருதாணி செடி, கறிவேப்பிலை செடி, கற்றாழை, துளசி மற்றும் செம்பருத்தி போன்ற அனைத்து விதமான செடிகளையும் தானே வளர்த்ததாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக, மருதாணி செடியை இலங்கையில் இருந்து விமானத்தில் கொண்டு வந்த சுவாரசிய தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
மருதாணி செடியை விமானத்தில் எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது என்று ரம்பா தெரிவித்துள்ளார். எனினும், ஒரு பாட்டலில் சிறிது தண்ணீர் நிரப்பி அதில் மருதாணி செடியின் வேரை மட்டும் சிறியதாக வெட்டி எடுத்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவை அனைத்தையும் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று தன் வீட்டு தோட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு சில டிப்ஸை ரம்பா தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல் மூலமாக நடிகை ரம்பாவிற்கு தோட்டக்கலை மீது இருக்கும் ஆர்வம் பல இடங்களில் தெரிய வந்தது. இதேபோல், தனது குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தை வளர்ப்பு என சில பர்சனல் பக்கங்களையும் ரம்பா பகிர்ந்து கொண்டார்.
நன்றி - Aval Vikatan Youtube Channel