ARTICLE AD BOX
சென்னை: சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட விளம்பரங்களில் நடித்தது தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உட்பட 25 பேர் மீது தெலுங்கானா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், பிரகாஷ்ராஜ் நேற்று காலை வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது: நான் பெட்டின் ஆப் விளம்பரத்தில் நடித்தேன், அனைவரையும் கேள்வி கேட்கும் நான் இதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும்.
இதுவரை காவல்துறையிடம் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை, அப்படி வந்தால் கட்டாயம் அதற்கு நான் பதில் அளிப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 2016ம் ஆண்டு, இது போன்ற ஒரு விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. நான் அதை விளம்பரப்படுத்தினேன். சில மாதங்களுக்குப் பிறகு, தவறை உணர்ந்தேன். ஆனால், ஒப்பந்தத்தின் காரணமாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அடுத்த வருடம், ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என அவர்கள் மீண்டும் என்னை அணுகினார்கள்.
அது தவறு என்று நான் அவர்களிடம் சொன்னேன். 2017ம் ஆண்டு எனது விளம்பரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் அவர்களிடம் சொன்னேன். ஆனால், 2021ம் ஆண்டு, வேறொரு நிறுவனம் அந்த நிறுவனத்தை வாங்கியது. அவர்கள் மீண்டும், நான் நடித்த அந்த விளம்பரத்தை விளம்பரம் செய்தனர். நான் உடனே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மெயில் அனுப்பினேன்.
அது தவறு என்று நான் சொன்னதும், அவர்கள் நிறுத்திவிட்டார்கள்.இது ஒன்பது வருடத்திற்கு முன்பு நான் தெரியாமல் செய்த தவறு, இதற்காக நான் தற்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இளைஞர்களும் இது போன்ற சூதாட்ட செயலியை பயன்படுத்தி பணத்தை இழக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.