ARTICLE AD BOX
சுனிதா வில்லியம்ஸ் பயணம்: சர்வதேச விண்வெளி நிலையம் முதல் பூமி வரை - என்ன நடக்கிறது? நேரலை

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாள் பயணமாக சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராத நிகழ்வுகளால் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்ப தயாராகி வருகிறார். புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான நாசாவின் நிக் ஹேக், ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ், விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புகின்றார்.
அவர்களுக்குப் பதிலாக, தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் அங்கு பணிகளைத் தொடர்வார்கள்.

பட மூலாதாரம், NASA
சுனிதா வில்லியம்ஸ் பயணம் - கால அட்டவணை வெளியீடு
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்புவது எப்போது என்பது குறித்த கால அட்டவணையை நாசா வெளியிட்டுள்ளது. (கீழே இந்திய நேரப்படி விவரங்கள் தரப்பட்டுள்ளன)
மார்ச் 18
காலை 8:15 மணி - சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் மற்ற குழுவினர் டிராகன் விண்கலத்திற்குள் செல்வார்கள்.
காலை 10:35 மணி - டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு பிரியும் (Undocking)
மார்ச் 19
அதிகாலை 2:15 மணி - பூமிக்கு திரும்புவதற்கான பயணம் NASA+ இல் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும்
அதிகாலை 2:41 மணி - விண்கலம் அதன் சுற்றுப்பாதையிலிருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் (நேரம் தோராயமானது)
அதிகாலை 3:27 மணி - விண்கலத்தின் வேகம் குறைந்து, பாரசூட்டுகள் விரிக்கப்பட்டு பாதுகாப்பாக கடலில் இறங்கும் (நேரம் தோராயமானது)
காலை 05:00 மணி - பூமிக்கு அவர்கள் திரும்பிய பிறகு நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திப்பார்கள்

பட மூலாதாரம், Getty Images
யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்?
சுனிதா லின் வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரர். கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் 'எக்ஸ்பெடிஷன் -14' குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதாவை நாசா சேர்த்துக் கொண்டது.
1965-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா. அவருடைய அப்பா தீபக் பாண்டியா, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தீபக் பாண்டியா 1958-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்.
சுனிதாவின் அம்மா போனி பாண்டியா. சுனிதாவின் கணவர் மைக்கேல் வில்லியம்ஸ். அவரும் ஒரு விமானியாக பணியாற்றியவர். தற்போது அவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.
1998-ஆம் ஆண்டு நாசா சுனிதாவை விண்வெளி வீரராக தேர்வு செய்தது. சுனிதா அமெரிக்க கடற்படை அகாடமியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் ஒரு திறமையான போர் விமானி என்று குறிப்பிடுகிறார் உள்ளூர் பத்திரிகையாளர் சலீம் ரிஸ்வி.
சுனிதா இதுவரை 30 வகையான விமானங்களை இயக்கியுள்ளார். அதில் அவர் 2700 மணி நேரம் பறந்த அனுபவத்தையும் பெற்றிருக்கிறார்.
படிப்பை முடித்த சுனிதா வில்லியம்ஸ் கடற்படையில் விமானியாக தன்னுடைய பணியை துவங்கினார்.

பட மூலாதாரம், Getty Images
சுனிதாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
2013-ஆம் ஆண்டு மாணவர்களிடம் உரையாற்றும் போது, சுனிதா விண்வெளிக்கு சமோசாக்களை எடுத்துச் சென்றதாகக் கூறியிருந்தார். இதனுடன், உபநிடதங்கள் மற்றும் கீதையையும் படிக்க எடுத்துச் சென்றதாக குறிப்பிட்டார்.
இந்திய உணவைப் புகழ்ந்து பேசிய அவர், இந்திய உணவுகளைப் பார்த்து யாருக்கும் சலிப்பே ஏற்படாது என்றார்.
அமெரிக்க அரசாங்கத்தின் தரநிலைப்படியே நாசாவிலும் சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் விண்வெளி வீரர்களுக்கான (civilian astronauts) GS-13 மற்றும் GS-15 தர ஊதியமும் அடங்கும்.
அமெரிக்காவில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் GS-01 முதல் GS-15 வரையிலான தர ஊதியத்தின்படி சம்பளம் வழங்கப்படுகிறது. GS-15 தர ஊதியம் என்பது இங்கு மிக அதிகமான சம்பளத்தை குறிக்கிறது.
இந்த தரநிலைப்படியே சுனிதாவும் சம்பளம் பெறுகிறார்.

GS-13: இந்த பிரிவில் ஆண்டுக்கு $81,216 முதல் $105,579 வரை (தோராயமாக ரூ. 70 லட்சம் முதல் 92 லட்சம் வரை) சம்பளம் வழங்கப்படுகிறது.
GS-14: இந்த பிரிவில் ஆண்டுக்கு $95,973 முதல் $124,764 வரை (தோராயமாக ரூ.83 லட்சம் முதல் ஒரு கோடியே 8 லட்சம் வரை) சம்பளம் வழங்கப்படுகிறது.
GS-15: இந்த பிரிவில் ஆண்டுக்கு $112,890 முதல் $146,757 வரை (தோராயமாக ரூ.98 லட்சம் முதல் ஒரு கோடியே 27 லட்சம் வரை) சம்பளம் வழங்கப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)