சீமான் வீட்டில் சம்பவம் செய்த இன்ஸ்பெக்டர் யார்?

22 hours ago
ARTICLE AD BOX

சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிச் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சீமான் வீட்டில் சம்பவம் செய்த இன்ஸ்பெக்டர் யார் என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்ற சீமான் தரப்பு வழக்கறிஞர்கள், நாளை கிருஷ்ணகிரியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதால் சீமான் நேரில் ஆஜராக 4 வார அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த போலீசார், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் சம்மனை ஒட்டச் சென்றுள்ளனர்.

நாளை சீமான் ஆஜராகத் தவறினால் அவரைக் கைது செய்ய நேரிடும் என்று குறிப்பிட்டு, சம்மனை சீமான் வீட்டு வாசல் கதவில் ஒட்டினர். உடனே அங்கிருந்த நாதக நிர்வாகி ஒட்டப்பட்ட சம்மனைக் கிழித்தெறிந்தார். போலீசார் கண்முன்னே சம்மன் கிழிக்கப்பட்டதால், அங்கு வந்திருந்த இன்ஸ்பெக்டர் வீட்டிற்குள் செல்ல முயன்றார். சீமான் வீட்டுப் பாதுகாவலர் இன்ஸ்பெக்டரைத் தடுத்து அவரைத் தாக்கவும் முயன்றார்.

இதனால், போலீசார் சீமான் வீட்டு பாதுகாவலரையும் சம்மனைக் கிழித்த நாதக நிர்வாகியையும் கைது செய்தனர். சீமானின் பாதுகாவலர் இன்ஸ்பெக்டரிடம் தன்னிடமிருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். அதையும் போலீசார் லாகவமாகக் கைப்பற்றியுள்ளனர்.

இதற்கிடையில் சீமானின் மனைவி கயல்விழி வீட்டு வாசலுக்கு வந்து, சம்மனைக் கிழிக்கச் சொன்னது நான் தான் என்று கூறி மன்னிப்பு கேட்டார். கைது செய்த இருவரையும் போலீசார் காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சீமான் வீட்டில் சம்பவம் செய்த இன்ஸ்பெக்டர் யார் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. "1991ல் திருப்பெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலமாக ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது, கூடவே 16 பேரும் கொல்லப்பட்டார்கள். அதில் பாதுகாப்புக்கு சென்றிருந்த இன்ஸ்பெக்டர் ராஜகுருவும் ஒருவர். அந்த ராஜகுருவுக்கு அப்போது 16 வயதில் ஒரு மகன் இருந்தார். 34 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில் அந்த மகனும் இப்போது போலிஸ் இன்ஸ்பெக்டர். நீலாங்கரை காவல்நிலையத்தில் பணிபுரியும் பிரவீன் ராஜேஷ்தான் அவர். சீமான் வீட்டில் இன்று ‘சம்பவம்’ செய்தவர் அவர்தான்" என்று பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Read Entire Article