ARTICLE AD BOX
நடிகை விஜய லட்சுமி அளித்த கருக்கலைப்பு புகாரில் நேரில் ஆஜராக கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளரசவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் இன்று காவல்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.
வழக்கின் பிண்ணனி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து கருக்கலைப்பு செய்தாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு புகார் அளித்து இருந்தார்.
அதில், சீமான் வற்புறுத்தலினால் ஆறு, ஏழு முறை கருக்கலைப்பு செய்ததாகவும், தன்னிடம் இருந்து பெருந்தொகையை சீமான் பெற்று உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு, விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெற போலீசாருக்கு கோரிக்கை வைத்தார். இருந்தபோதிலும், போலீசார் வழக்கை முடிக்கவில்லை. இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்தது.
மேலும் படிக்க:- சீமான் vs விஜயலட்சுமி: சீமானுக்கு எதிரான கருக்கலைப்பு வழக்கு! முக்கிய ஆதாரத்தை நடிகை விஜயலட்சுமி தந்ததாக தகவல்
தற்கொலை முயற்சி
இந்த நிலையில் தன்னை பலர் அவதூறு பேசுவதாகவும், ஹரிநாடார் என்பவர் மிரட்டுவதாகவும் கூறி கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். வீட்டில் இருக்கும் போது மன அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் அப்போது வெளியிட்ட வீடியோவில் “இதுதான் என் கடைசி வீடியோ….! கடந்த 4 மாசமா ரொம்ப மன அழுத்தத்தில் உள்ளேன். அம்மா மற்றும் அக்காவுக்காகதான் வாழ்ந்து வருகிறேன். ஹரி நாடார் உள்ளிட்டோர் மீடியா மூலம் தொடர்ந்து அசிங்கப்படுத்தி வந்தனர். இனிமேல் என்னால் வாழ முடியாது. கர்நாடகாவில் பிறந்தவள் என்ற காரணத்தை வச்சு என்னை டார்ச்சர் பண்ணியாச்சு. என் குடும்பத்தைவிட்டு போறேன்” என தெரிவித்து இருந்தார். பின்னர் மருத்துவமனை அளித்த தொடர் சிகிச்சையால் அவர் உடல்நலம் பெற்றார்.
சீமான் மீது மீண்டும் புகார்
இதனை அடுத்து கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது மீண்டும் புகார் அளித்தார். அதில் கடந்த 2011ஆம் ஆண்டு அளித்த சீமான் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி இருந்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி எனது புகாரை சீமான் வாபஸ் பெற வற்புறுத்தியதாகவும், ஆனால் அவர் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை என்றும் கூறி இருந்தார். இருப்பினும் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது புகாரை மீண்டும் வாபஸ் பெற விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனாலும், சீமானுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும் படிக்க:- புதுச்சேரி சட்டசபைக்கு வெளியே காத்திருந்த மாற்றுத்திறனாளி வியாபாரி! தேடி சென்று கடை ஆணை வழங்கிய முதலமைச்சர்!
12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
புகார்தாரர் தனது புகாரை திரும்பப் பெற விரும்புவதால் மட்டுமே, குறிப்பாக குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, புகாரை தள்ளுபடி செய்ய முடியாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. சீமான் மீதான வழக்கை 12 வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
விஜயலட்சுமியிடம் போலீஸ் விசாரணை
இந்த நிலையில் பெங்களூருவில் வசித்து வரும் நடிகை விஜய லட்சுமிடம் வளசரவாக்கம் காவல்துறையினர் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்து உள்ளனர். இந்த விசாரணையில் முக்கிய ஆவணங்களை காவல்துறை அதிகாரிகளிடம் நடிகை விஜயலட்சுமி அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டு நடிகை விஜய லட்சுமிக்கு மருத்துவ பரிசோதனையை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆஜராகாமல் அவகாசம் கேட்கும் சீமான்
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு இன்று (27-02-25) ஆஜராக கோரி சீமானுக்கு வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அளித்திருந்தனர். சீமான் இன்று விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர் சீமான் காவல் நிலையத்தில் ஆஜராக நான்கு வார காலம் அவகாசம் கேட்டு கடிதம் ஒன்றை காவல்துறையிடம் அளித்துள்ளார்.
