ARTICLE AD BOX
நவீனகாலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது. அதைச்சார்ந்த கல்வி, மொபைல், ரோபோடிக்ஸ் என அடுத்தடுத்த கட்டத்திற்கு ஏஐ தொழில்நுட்பம் நகர்ந்துவருகிறது. இனிவரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகளவில் பெரிய பங்களிப்பை கொடுக்கும் என அனைத்து துறையினராலும் நம்பப்படுகிறது.
ஆனால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதிகப்படியான ஏஐ பயன்பாடு மனித குலத்திற்கு ஆபத்தாக மாறும் எனவும் மற்றொரு பக்கம் பொதுவான கருத்துகள் வைக்கப்படுகிறது. முதலில் அது மனிதகுலத்தின் வேலையை பறிக்கும் என கூறப்பட்ட நிலையில், அது செயல்முறையிலும் மனிதனுக்கு எதிராக திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தான் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஒரு ரோபோ மக்களை தாக்க முயன்ற வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களை தாக்க முயன்ற ஏஐ ரோபோ..
வடகிழக்கு சீனாவீல் கடந்த பிப்ரவரி 9 அன்று இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. AI-ஆல் இயங்கும் ரோபோக்கள் பங்கேற்ற விழாவில், அனைத்துவகையான ரோபோக்களும் முழுமையாக பரிசோதனை செய்தபிறகே விழாவில் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.
ஆனால் வெளியாகியிருக்கும் வீடியோவில், மனித உருவிலான ரோபோ ஒன்று திடீரென மக்களை தாக்க முன்னேறி செல்வதை பார்க்க முடிகிறது. உடனடியாக பாதுகாப்பு பணியாளர்கள் தலையிட்டு, எந்தத் தீங்கும் ஏற்படாமல் தடுக்க, ஒழுங்கற்ற ரோபோவை கூட்டத்திலிருந்து இழுத்துச் சென்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த சம்பவத்தை ஒரு "ரோபோடிக் தோல்வி" என்று குறைத்து கூறியதாகவும், ஆனால் நிகழ்வுக்கு முன்னர் அனைத்து ரோபோக்களும் பாதுகாப்பு சோதனைகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றதாகவே உறுதியளித்திருந்ததாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட ரோபோ, யூனிட்ரீ ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட "மனித வடிவிலான AI அவதார்" என கூறப்படுகிறது. அறிக்கைகளின் படி, மென்பொருள் கோளாறு ஏற்பட்டதால் ரோபோ ஒழுங்கற்று செயல்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீடியோவை பகிர்ந்திருக்கும் சிலர் “இதுதான் அனைத்திற்கும் ஆரம்பம்” என விமர்சித்துள்ளனர்.