ARTICLE AD BOX
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள லிக்சன் டியான்ஷெங் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில், பணியாற்றும் ஊழியர்கள் கழிவறைக்குச் சென்றுவர நீண்டநேரம் எடுத்துக்கொள்வதால், அவர்களுக்கு வித்தியாசமான முறையில் தண்டனை அளித்துள்ளது. அதாவது, அவர்கள் கழிவறையில் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை எடுத்து சுவரில் ஒட்டியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு எதிராகப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். பயனர் ஒருவர், “அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஊழியர்களின் தனியுரிமைக்கு எதிரான தெளிவான மீறல்” எனப் பதிவிட்டார். மற்றொருவர், ”கண்காணிப்பு கேமராக்களை தவறாக பயன்படுத்தியதற்காக நிறுவனம் தண்டிக்கப்பட வேண்டும்" எனவும், வேறொருவர், “ஊழியர்கள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர வேண்டும்” எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர். இதையடுத்து, அந்த நிறுவனம் சுவரில் ஒட்டியிருந்த புகைப்படங்களை நீக்கியது.
முன்னதாக, 2021ஆம் ஆண்டு, சீன மின்சாதன விற்பனை நிறுவனம் ஒன்று, ஊழியர்களின் இணையச் செயல்பாட்டைக் கண்காணித்ததற்காகவும், தனிப்பட்ட பொழுதுபோக்கிற்காக வேலை நேரத்தைப் பயன்படுத்தியவர்களைத் தண்டிப்பதற்காகவும் இதே போன்ற விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.