ARTICLE AD BOX

டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து அந்த சமயம், அதாவது நவம்பர் 1 முதல் 4 வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் வெடித்தன.
உதாரணமாக, டெல்லி நகரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் உயிரிழந்ததாகவும் அந்த சமயம் செய்திகள் வெளிவந்தது. அப்போது, பல அரசியல் தலைவர்கள், போலீசார் மற்றும் அதிகாரிகள் கலவரத்தைத் தூண்டியதாகவும், சீக்கியர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களுக்கு தீவைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் நடைபெற்றபோது முன்னாள் காங்கிரஸ் எம்பி சஜ்ஜன் குமார், அப்போது தில்லி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தார்.
முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு தில்லி மற்றும் அதன் புறநகரங்களில் கலவரம் ஏற்பட உறுதுணையாக இருந்தார் எனவும், சரஸ்வதி விஹார் மற்றும் ராஜ் நகர் பகுதிகளில் சீக்கியர்களின் வீடுகளை தாக்க ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த கலவரத்தின் போது சீக்கியர் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகனும் கொலை செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களுடைய வீடும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. எனவே, இதற்கும் சஜ்ஜன் குமார் காரணம் என கூறப்பட்டு அவர் மீது (IPC 302) கொலை வழக்கு, (IPC 147, 148, 149) – மக்கள் கூட்டத்தைத் தூண்டிய கலவர வழக்கு. சொத்து சேதம் மற்றும் கொள்ளை (IPC 395, 436) – வீடுகளுக்கு தீவைத்து சேதப்படுத்தியது என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக, உயிர் தப்பிய சீக்கியர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சாட்சி அளித்து புகார் கொடுத்தனர்.
எனவே, சஜ்ஜன் குமார் மீது வழக்குகள் போடப்பட்டு வழக்கும் நடந்து வந்த நிலையில், கடந்த 2018 டிசம்பர் 17 அன்று, டெல்லி உயர்நீதிமன்றம் சஜ்ஜன் குமாரை குற்றவாளியாகவும் அறிவித்து. இந்த உத்தரவுக்கு முன்னதாக, நீதிமன்றம், சஜ்ஜன் குமார் 2018 டிசம்பர் 31க்குள் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதன் காரணமாக அந்த சமயம் அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி 2018 டிசம்பர் 31 அன்று, சஜ்ஜன் குமார் டெல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
கொலை வழக்கு
இதனையடுத்து, ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் கொலை வழக்கு தொடர்பாக அவருக்கு என்ன தண்டனை வழங்கப்படும்? என்பது நீண்ட நாள் கேள்வியாக இருந்த நிலையில், இந்த வழக்கில் அவர் தான் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் 2025 பிப்ரவரி 12 அன்று அறிவித்திருந்ததோடு வருக்கு வழங்கப்படவுள்ள தண்டனைகள் விவரம் என்ன என்பது பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது வழக்கில் சிக்கியுள்ள சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாக டெல்லி நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 79 வயதாகும் அவர் ஒரு வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், தற்போது மற்றொரு வழக்கில் மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.