ARTICLE AD BOX
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வேளையில், மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படுகிறது. பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம்தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி சிவராத்திரிக்கான புனித நீராடலுக்குப் பிறகு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் இந்த புனிதமான காலகட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் இணையும் திருவேணி சங்கமத்தில் புனித நீராடுவது ஒருவரின் பாவங்களை சுத்தப்படுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும் ஆன்மீக சக்தியை மேம்படுத்தி, முக்தியை அடைய உதவுவதாகவும் கூறப்படுகிறது.
இதனாலேயே திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆன்மிகவாதிகள் மட்டுமல்ல மக்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தினமும் சராசரியாக பல லட்சம் மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வந்தனர். குறிப்பாக மகரசங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி, பவுஷ்ய பூர்ணிமா மற்றும் மகா சிவராத்திரி ஆகிய 5 தினங்கள் அமிர்த ஸ்நானத்துக்கு ஏற்ற தினங்களாக கூறப்படுகிறது.
இந்த மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள சாதுக்கள், துறவிகள், ஆன்மிக பெரியவர்கள் மற்றும் உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் வந்து குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டன.
இதுவரை 63 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் வந்ததாக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இன்று மகா சிவராத்திரி மற்றும் கடைசி நாள் என்பதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, போக்குவரத்து, அவசரகால உதவி, சுகாதாரம் மற்றும் போதுமான மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய விரிவான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது.
ஜனவரி 26-ம்தேதி மௌனி அமாவாசை அன்று ஏற்பட்ட நெரிசலில் 30க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழாவில், இன்று கடைசி நாள் என்பதால் அதிகாலையில் தொடங்கும் இறுதி 'அமிர்த ஸ்னான்' நிகழ்ச்சிக்காக கும்பமேளாவில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
மிகப் பழமையான இந்து வேதமான ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்ட கும்பம் என்பது ஒரு குடம் என்று பொருள். தேவர்களாலும், அசுரர்களாலும் அண்டப் பெருங்கடலைக் கடைந்த போது கிடைத்த அழியாத அமிர்தத்தின் துளிகள் இங்கு சிந்தியதாகக் கதை கூறுகிறது. அமிர்த துளிகள் விழுந்த இந்த திரிவேணி சங்கமத்தில் குளிப்பது அனைத்து பாவங்களையும் கழுவும் என்று நம்பப்படுகிறது.