ARTICLE AD BOX
கும்பகோணத்தைச் சுற்றிலும் நவகிரக ஸ்தலங்கள் அமைந்துள்ளதைப் போலவே காஞ்சிபுரத்திலும் பழமையான நவகிரக ஸ்தலங்கள் அமைந்துள்ளன. காஞ்சியில் அமைந்துள்ள அருள்மிகு மாகாளேஸ்வரர் திருத்தலம் ராகு கேதுவிற்குரிய பரிகார ஸ்தலமாகும்.
ஸ்தல வரலாறு
ஸ்ரீகாளஹஸ்தியில் வசித்து வந்த மாகாளன் என்ற பாம்பரசன், சிவபெருமான் இட்ட சாபத்தினைப் போக்கிக் கொள்ள, அதாவது சாபவிமோசனம் வேண்டி, காஞ்சியில் அமைந்துள்ள இத்தலத்திற்கு வந்து மாகாளேஸ்வரரை தரிசித்துப் பேறு பெற்று மீண்டும் காளஹஸ்திக்குச் சென்று அங்கு முக்தி அடைந்ததாக ஐதீகம்.
மாகாளன் என்ற பாம்பரசன் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற தலம் இது. காஞ்சியில் ராகு கேது மனித உருவத்தில் இத்தலத்தில் ஈசனை வழிபட்டதாக ஐதீகம். எனவே இத்தலமானது மிகச்சிறந்த இராகு கேது பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
பக்தர்களின் குறைகளை நீக்கியருள ஒன்பது கிரகங்களும் தனித்தனி சன்னிதிகளில் தம்பதி சமேதராய் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். ராகுவும் கேதுவும் தனித்தனி சன்னதிகளில் அமைந்துள்ளனர். இத்தலத்திற்கு வந்து ஈசனை வழிபடுபவர்களுக்கு கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் மற்றும் ராகு கேதுவால் ஏற்படும் காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.
சிவஞான முனிவர் இயற்றிய காஞ்சிபுராணத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள எழுபதுக்கும் மேற்பட்ட சிவத்தலங்களைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுராணத்தில் மாகாளேஸ்வரர் கோயிலும் விவரிக்கப்பட்டுள்ளது.
கோயில் அமைப்பு
கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள கருவறையில் ஈசன் லிங்கத்திருமேனியில் மாகாளேஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருள்பாலிக்கிறார். அவருக்கு முன்னால் நந்தியெம்பெருமான் அமைந்துள்ளார். பின்னால் பலி பீடம் அமைந்துள்ளது. பொதுவாக பல சிவத்தலங்களில் கருவறையின் பின்புறச் சுவற்றில் சோமாஸ்கந்தர் வடிவத்தை தரிசிக்கலாம். ஆனால் இத்தலத்தில் வேறெங்கும் இல்லாத விதமாக கருவறையின் பின்சுவற்றில் சிவபெருமான் தனது கரங்களில் இராகுவையும் கேதுவையும் ஏந்திக் காட்சியளிக்கிறார். அருகில் அமைந்துள்ள பார்வதிதேவி தனது கரத்தில் முருகப்பெருமானோடு காட்சி தருகிறார். இத்தகைய அபூர்வ வடிவத்தை வேறெங்கும் காண இயலாது.
கோவில் சுற்றுப் பிராகாரத்தில் ஸ்ரீசெல்வ விநாயகர் ஒரு சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். தொடர்ந்து குருபகவான் தாராதேவி, உஷாதேவி சூரியபகவான் சாயாதேவி, சுக்கிரபகவான் சுபகீர்த்தி தேவி, அங்கார பகவான் மாலினிதேவி, புதன் பகவான் இளையாள் தேவி, சனி பகவான் நீலா தேவி, சுவாதி சந்திரபகவான் ரேவதி ஆகிய ஏழு நாயகர்களும் தம்பதி சமேதராகக் காட்சி தருகிறார்கள்.
ராகு லிங்கம் சன்னதியில் ராகு பகவான் சிவபெருமானை வணங்கிய கோலத்திலும் கேது லிங்க சன்னதியில் கேது பகவான் சிவபெருமானை வணங்கிய கோலத்திலும் காட்சி தருவது மற்றுமொரு சிறப்பு.
சரஸ்வதி தேவி ஒரு சன்னதியில் காட்சி தருகிறாள். சரஸ்வதிதேவிக்கு ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி தினங்களில் இத்தலத்தில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
அருள்மிகு கல்யாண துர்க்கை இத்தலத்தில் ஒரு தனி சன்னிதியில் எழுந்தருளி திருமணத் தடைகளை நீக்கி அருள்பாலிக்கிறார். ஒரு தனி சன்னிதியில் பைரவரும் மற்றொரு சன்னிதியில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமியும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள்.
ஸ்தல விருட்சம்
வன்னி மரம் இத்தலத்தின் ஸ்தல விருட்சமாகும். இந்த ஸ்தலவிருட்சத்தின் கீழ் ஸ்ரீவன்னி விநாயகர் காட்சி தருகிறார்.
திருவிழாக்கள்
மகாசிவராத்திரி அன்று ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன. மற்றும் பௌர்ணமி தினமன்றும் பிரதோஷ தினத்தன்றும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் இராகுகேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி முதலானவை விசேஷமாக நடைபெறுகின்றன.
நடை திறந்திருக்கும் நேரங்கள்
காலை 06.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் இத்தலம் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.
அமைவிடம்
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்குப் பின்புறத்தில் மேற்கு இராஜகோபுரத்திற்கு அருகில் ஜவஹர்லால் தெருவில் இத்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு அரைகிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.