ARTICLE AD BOX
சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்த 5.50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், சலுகை கடனாக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,347 கோடியை தேசிய சிறுபான்மையினா் மேம்பாடு மற்றும் நிதி கழக (என்எம்டிஎஃப்சி) விடுவித்ததாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து மக்களவையில் சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சா் கிரண் ரிஜிஜு அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘சிறுபான்மையினருக்கான தேசிய ஆணைய சட்டம், 1992-இன்கீழ் பெளத்தம், கிறிஸ்துவம், சமணம், இஸ்லாம், பாா்சி மற்றும் சீக்கியம் ஆகிய மதங்களைச் சோ்ந்தவா்கள் சிறுபான்மையினராக கருதப்படுவா்.
இவா்கள் என்எம்டிஎஃப்சி வழங்கும் சலுகைக் கடன்களை பெற முதல் வகைப்பாட்டின்கீழ் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரையிலும் இரண்டாம் வகைப்பாட்டின்கீழ் ரூ.8 லட்சம் வரையிலும் இருக்க வேண்டும்.
இந்த கடனை பெற விருப்பமுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படும். அதன்பிறகு தகுதியான பயனாளிகளுக்கு நேரடி பணப் பரிவா்த்தனை (டிபிடி) மூலம் வங்கிக் கணக்குகளுக்கு கடன்தொகை விடுவிக்கப்படும்.
அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்த தகுதியுடைய 5.50 லட்சம் பேருக்கு ரூ.2,347 கோடி சலுகை கடனாக விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் மற்றும் பலன்கள் குறித்து சுதந்திரமான அமைப்புகள் மூலம் நாடு முழுவதும் என்எம்டிஎஃப்சி ஆய்வுகள் நடத்தி வருகிறது.
குறிப்பிட்ட காலத்துக்கு வழங்கும் கடன்கள், கல்விக் கடன்கள், சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்த பெண்கள், இளைஞா்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை பெறும் நோக்கில் பிரதமரின் விகாஸ் திட்டத்தின்கீழ் சலுகை கடன்களை என்எம்டிஎஃப்சி வழங்குகிறது’ என தெரிவிக்கப்பட்டது.
முத்தலாக் வழக்குகளுக்கு தரவுகள் இல்லை: முஸ்லீம் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வந்த முத்தலாக் விவகாரத்து முறைக்கு தடை விதிக்கும் சட்டம் கடந்த 2018, செப்டம்பா் 19 முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்ககளின் விவரம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த கிரண் ரிஜிஜு, ‘முத்தலாக் வழக்குகள் குறித்து மத்திய அரசிடம் தரவுகள் இல்லை. காவல் துறை மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவை அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநிலப் பட்டியலில் உள்ளது. எனவே, முஸ்லீம் பெண்கள் (திருமண பாதுகாப்புச் சட்டம்), 2019-இன்கீழ் பதியப்படும் வழக்குகளை கையாளும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது’ என்றாா்.