ARTICLE AD BOX
சிவப்பு அரிசிக்கு ஏற்ற சிறுகிழங்கு கூட்டும், சிறுதானியங்களுக்கு ஏற்ற வேர்க்கடலை கத்தரிக்காய் குழம்பும்!
சிறு கிழங்கை கூர்க்கன் கிழங்கு என்று கேரளாவில் கூறுவார்கள். கிடைக்கும் சீசனில் தவறாது சமைத்து சாப்பிடுவார்கள். அதில் செய்யும் ஒரு கூட்டு வகை இதோ:
1) சிறுகிழங்கு கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:
சிறு கிழங்கு- 10
சாம்பார் பொடி -ஒரு டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது- ஒரு கைப்பிடி அளவு
தக்காளி - ஒன்று பொடியாக நறுக்கியது
வேக வத்த மைசூர் பருப்பு- ஒரு டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை, தனியா பொடியாக நறுக்கியது- ஒரு கைப்பிடி அளவு
தேங்காய்த் துருவல்- ரெண்டு டேபிள் ஸ்பூன்
சீரகம்- ஒரு டீஸ்பூன்
புளிக்கரைசல் ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு- அரை டீஸ்பூன்
உப்பு , எண்ணெய் -தேவைக்கேற்ப
செய்முறை:
சிறுகிழங்கை தோல் சீவி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் சீரகத்தை சேர்த்து அரைத்து, கருவேப்பிலையை சதைத்து எடுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கி சாம்பார் பொடி ,புளி கரைசல் மற்றும் வேகவைத்த மைசூர் பருப்பு, அரைத்த விழுது போட்டு கொதிக்க விடவும். இதனுடன் வேக வைத்த சிறு கிழங்கை சேர்த்து நன்றாக கிளறி வேக விட்டு நல்ல திக்காக வரும் பொழுது, மல்லித்தழை தூவி இறக்கவும்.
சிறு கிழங்கு கூட்டு ரெடி. வடிமட்ட அரி சாதத்துடன் சாப்பிடலாம்.
2) வேர்க்கடலை - கத்தரிக்காய் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை அவித்ததுஅளவு-ஒரு கப்
கத்தரிக்காய் நீளமாக நறுக்கியது- ஒரு கப்
புளி கரைசல்- கால் கப்
சாம்பார் பொடி -3 டேபிள் ஸ்பூன்
சீரகம் -ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்- மூணு டேபிள் ஸ்பூன்
தாளிக்க: கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தலா- ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் அரிந்தது- 10
கறிவேப்பிலை- ஒரு கொத்து
பெருங்காயப்பொடி -சிறிதளவு
நாட்டுத்தக்காளி பொடியாக அரிந்தது -இரண்டு
உப்பு ,எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
தேங்காய் சீரகத்தை அரைத்து அதனுடன் மூன்று சின்ன வெங்காயம் ஒரு கொத்து கறிவேப்பிலையை ஒரு சுற்று சுற்றி எடுக்கவும் .
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் கடலை, கத்தரிக்காயினை சேர்த்து வதக்கி புளி கரைசல், சாம்பார் பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கடைசியில் அரைத்து வைத்த விழுதை இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு, குழம்பு நன்றாக சேர்ந்து கமகம என்று வாசனை வரும் பொழுது கீழே இறக்கவும்.
வித்தியாசமான ருசியில் அசத்தலாக இருக்கும் இந்தக் குழம்பு. சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்ற சாதங்களுடன் சேர்த்து சாப்பிட சுவையள்ளும்.