ARTICLE AD BOX
-தமிழினியன்
இப்போதெல்லாம் தஞ்சாவூர் புதுப் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறினால் திருச்சிராப்பள்ளிக்கு வந்து சேர ஒண்ணேகால் மணி நேரம்தான்.
அலுப்புத் தெரியாது.
ஆனால், சிவராமனின் இன்றைய பயணம் சுவாரசியமாகக் காரணம் அதுவல்ல.
அந்தக் கல்லூரிப்பெண்.
ஜோல்னா பையுடன் அவரது அருகில் 'ஸ்டாண்டிங்' வந்தாள், அவள்.
சுரிதார் அணிந்து, ஊஞ்சலாடும் காதுத்தோடு மின்ன பளிச்சென்றிருந்தது முகம்.
ஆனால் அவரை உண்மையில் அசத்தியது அவளது லொட... லொட வாய்தான்.
தோளுக்குப் பின்னால் நின்ற உயரமான இளைஞனுடன் பஸ் ஏறியதிலிருந்து விடாமல் பேசிக்கொண்டே வந்தாள், அவள்.
கல்லூரி லூட்டி, பிராக்டிகல் கிளாஸ், பிரின்சிபலின் கண்டிப்பு...
'ஆங்... அப்படியா.. ஓஹோ...'
அந்த இளைஞனும் அவள் பேசியதற்கெல்லாம் ஒற்றை வார்த்தைகளில் தலையாட்டிக்கொண்டே வந்தான்.
பஸ், திருவரம்பூரில் நின்றது.
சிவராமனின் பக்கத்திலிருந்த இரண்டு பிரயாணிகளும் இறங்கினர்.
உடனே அந்தப் பெண்ணும் பையனும் அந்தக் காலி இடத்தில் உட்கார்ந்துகொண்டார்கள்.
இப்போது அவர்கள் பேசிக்கொண்டு வர மிகவும் வசதியாகிவிட்டது.
சிவராமன் பெருமூச்சு விட்டார்.
பம்பாய், கோவா போன்ற ஊர்களில்தான் பஸ்களில் இப்படிப் பாகுபாடின்றி பயணம் செய்வார்கள்.
அந்த நாகரீகம் இப்போது இங்கேயும் வந்துவிட்டதா என்ன... அவருக்கு அந்தக் காட்சி உறுத்திக்கொண்டே இருந்தது.
மத்திய பேருந்து நிலையம்.
இறங்கி, அவள் ஒரு திக்கிலும் இவன் ஒரு பக்கமுமாக 'குட் பை' சொல்லிப் பிரிந்தார்கள்
கலி முற்றிவிட்டதடா, கண்ணா... என்று ஓலமிட்டது அவரது உள்ளம்.
மகன் ஜெயகோபிக்குப் பெண் தேடும் படலத்தில் இறங்கி இருந்தார், அவர்.
இப்போது அதற்காகத்தான் பழைய நண்பர் நாகராஜனைப் பார்க்கப் போகிறார்.
மின்சார வாரியம் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம்ஸ் ரோடில் இயங்கிக்கொண்டிருந்தபோது அவருடன் வேலை பார்த்தவர் நாகராஜன். பதினொன்றாம் வகுப்பு முடிந்த கையோடு இருவரும் வேலைக்கு வந்தவர்கள். நல்ல பழக்கம்.
எழுபதுகளில் சிஸ்டம், மாவட்டவாரியாகப் பிரிந்ததும் சிவராமன் தஞ்சாவூருக்கு மாற்றலாகி... தொடர்பு துண்டித்துவிட்டது.
சென்ற வாரம் சென்னையில் நிகழ்ந்த அலுவலகக் கூட்டம் ஒன்றில் அவர்கள் சந்தித்துக்கொண்டார்கள்.
"நாகராஜன்தானே நீங்கள்? என்னைத் தெரிகிறதா? நான்தான் சிவராமன்.''
''அடடே.. பார்த்து எத்தனை வருஷமாச்சு."
இருவரும் கட்டித் தழுவிக்கொள்ள, கால் நூற்றாண்டு இடைவெளி கால் நிமிஷத்தில் ஒன்றாய் இணைந்தது.
ஆபீஸ் அக்கப்போர்களைவிட குடும்ப விஷயமே அவர்களுக்குப் பிரதானமாக இருந்தது.
''எனக்கு ஒரே பெண்தான். இந்த வருஷம் இன்ஜீனியரிங் முடிக்கிறாள்" என்றார் நாகராஜன்.
"எனக்கும் ஒரே பையன்தான். எம்.சி.ஏ. முடிச்சுட்டு காலேஜிலே லெக்சரராக இருக்கிறான்" என்றார், சிவராமன்.
"கல்யாணம்?"
"இனிமேல்தான். பெண் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள்...."
''நானும் ஒரு நல்ல பையனுக்காகத்தான் அலைஞ்சுட்டிருக்கிறேன்."
இருவரும் அர்த்தத்துடன் சிரித்துக்கொண்டார்கள்.
"ஊருக்குப் போனதும் அவசியம் ஒருநாள் திருச்சிக்கு வாருங்கள்" என்று அழுத்தமாய் அவர் அழைப்பு விடுக்க, இவர் "அவசியம் வருகிறேன்"என்று தலையசைக்க
இன்று - விடுமுறையில் கிளம்பி விட்டார், சிவராமன்.
கடிதம் ஏதும் எழுதவில்லை.
திடுதிப்பாகப் போனால்தான் எல்லாவற்றையும் இயல்பாகப் பார்க்க முடியும் என்பது அவரது எண்ணம்.
வெறும் கையுடன் போனால் நன்றாய் இராது என்று கொஞ்சம் பழம் வாங்கிக்கொண்டார்.
பீமநகரில் இருந்தது, நாகராஜனின் வீடு.
ஹீபர் சாலையில் ஒரு டயர் கம்பெனியின் பெரிய போர்டுக்கடியில் சின்ன வாசலாகத்தான் இருந்தது.
ஆனால் உள்ளே நுழைந்த பிறகுதான் ஒரு கிரவுண்டில் கட்டப்பெற்ற மிகப்பெரிய வீடு என்பது தெரிந்தது.
"வாங்க சிவராம்... வாங்க... வாங்க... என்ன இப்படித் திடீரென்று? ஒரு கடிதம் போடக் கூடாதோ?" மகிழ்ச்சியும் ஆச்சரியமுமாக வரவேற்றார் நாகராஜன்.
''இன்றைக்கு லீவு இல்லையா. ஏதோ தோன்றியது. புறப்பட்டுட்டேன்.”
''சந்தோஷம். மீனா... நான் சொன்னேனே.. தஞ்சாவூர் சிவராமன். அவர் வந்திருக்கிறார்."
நாகராஜனின் மனைவி வந்து உபசரித்தாள்.
"வாங்க... வணக்கம்."
இரண்டே நிமிஷத்தில் பலகாரம், காப்பி யாவும் வந்தன.
"எங்கே... உங்கள் மகள்?" சிவராமனின் கண்கள் அலை பாய்ந்தன.
"அவளும் இப்பத்தான் காலேஜிலே இருந்து வந்தாள். லீவுன்னுகூட இல்லாமல் கிளாஸ் வச்சிருக்காங்க. நந்தினி... நந்தினி..."
நந்தினி வந்தாள்.
நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது சிவராமனுக்கு.
"நீ...இந்த...நீயா... இ. இந்தப் பெண்ணா!"
"என்ன.... சிவராம்... என் மகளை ஏற்கெனவே உங்களுக்குத் தெரியுமா?"
''ஓ... இன்றைக்குத்தான்... ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் தெரியும். நானும் உங்கள் பெண்ணும் ஒரே பஸ்ஸில்... வந்தோம்."
"அ...ப்...ப...டியா." அதிர்ச்சியும் வியப்புமானார், நாகராஜன்.
சிவராமனின் முகத்தில் பரவிய சந்தேகச் சாயல் அவரை மேலும் கலவரப்படுத்த...
"யார் அம்மா அந்தப் பையன்?" என்று விசாரணையைத் துவக்கினார், சிவராமன்.
நந்தினி தயங்கவில்லை.
"என் கிளாஸ்மேட், அங்கிள். பெயர் கிஷோர் குமார்."
''நானும் உங்களைக் கவனித்தேன். அங்கிள்.
பஸ்ஸிலே யாரோ ஒரு பிரயாணின்னு நினைச்சுட்டு இருந்தேன்."
"நான் உன் அப்பாவோட சினேகிதானு தெரிந்தால் என்னம்மா பண்ணியிருப்பே?" இடக்கான கேள்வி.
"உங்களோடவும் பேசிட்டு வந்திருப்பேன் அங்கிள்." மெலிதாகச் சிரித்தாள், அவள்.
"அவ்வளவுதானா?"
நந்தினி வெகு இயல்பாகச் சிரித்தாள்.
சிவராமனின் முகம் அசாதாரணமாய் இறுகியது.
"அப்போ... நான் வர்றேன் நாகராஜ்" எழுந்தார், சிவராமன்.
"என்னவோ முக்கியமான விஷயம் பேசறதாக..."
"பேசலாம் என்றுதான் வந்தேன். ஆனால் நான் வர்றேன்....."
பதில் எதிர்பாராமல் விருட்டென்று வெளியேறினார், சிவராமன்.
'நல்ல வேளை, என் மகன் தப்பித்தான்' என்று நினைத்துக் கொண்டார் அவர்.
'ஜெயகோபிக்கு இவளா? அவன் எந்தப் பெண்ணையாவது ஏறெடுத்துப் பார்ப்பானா? அநாவசியமாக ஒரு வார்த்தை பேசுவானா நல்ல வேளை....''
"திருச்சிக்குப் போன விஷயத்தைப் பற்றி ஒண்ணுமே சொல்லவில்லையே?''
நவராத்திரி கொலுவுக்கான வண்ணச் சர விளக்கைப் பொருத்திய ஈஸ்வரி கணவனை நோக்கினாள்.
"அதொண்ணும் சரிப்பட்டு வராது. ஈஸ்வரி." முகத்தைத் திருப்பிக்கொண்டார் சிவராமன்.
“ஏன்?”
பஸ்ஸில் கண்டதையும் கேட்டதையும் அவர் விவரித்ததை அவர் மகனும் கவனித்தபடியே வந்தான். 'களுக்'கென்று சிரித்தும் விட்டான்.
"எதுக்கு இப்பச் சிரிக்கிறாய்?"
"இப்படி எல்லாம் சந்தேகப்பட்டால் எங்காவது ஒரு தீவில் கடல் கன்னியோ நாக தேவதையோதான் உங்களுக்கு மருமகளா வருவாள் அப்பா!"
"அதுக்காக... ஒரு வாலிபப் பையனுடன் சகவாசம் வைத்திருக்கிற பெண்ணை உனக்கே கட்டி வைக்கச் சொல்கிறாயா?" கோபமாய்ப் பார்த்தார், சிவராமன்.
"இது சகவாசம் இல்லைப்பா. யதார்த்தம். சகவாசம் என்றால் ஓட்டல்... பார்க்... சினிமா. இப்படி திட்டம் போட்டு வரச் சொல்லி பேசுவதுதான் சகவாசம். அதைத்தான் தவிர்க்கணும்.. தப்புன்னு சொல்லணும்."
"அந்தப் பொண்ணு செஞ்சது சரிங்கறியா?"
"தப்பில்லைன்னு நினைக்கறேன் அப்பா, உலகம் மாறிட்டிருக்கு. காலமாற்றத்துக்கு ஏற்ப நாமும் மாறுவது தப்பில்லையே?"
''அதுக்காக?"
"யாரோ ஒரு பெண்ணுக்காக நான் வக்காலத்து வாங்கறதா நினைக்காதீங்க. இந்தக் காலத்துல ஆண்களோடு பேசற பெண்கள், பெண்களோடு பேசற ஆண்கள் இவங்களெல்லாம் கல்யாணம் செஞ்சுக்கத் தகுதி இல்லைன்னு நினைச்சீங்கன்னா ஸாரி, இது பிரும்மச்சாரிகளோட உலகமா ஆயிடும்.
ஐ மீன் ஒருத்தருக்கும் கல்யாணம் கிடையாது."
சிவராமனுக்குப் புரியவேயில்லை. அந்தப் பெண்ணை மட்டுமல்ல, தன் மகனையும்!
பின்குறிப்பு:-
கல்கி 24 நவம்பர் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்