ARTICLE AD BOX
'டிங். டாங்'
வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. குமரேசன் கதவைத் திறந்தபோது, குடியிருப்பின் காவல்காரன் மணிகண்டன் ஒரு அறிவிப்புத் தாளினை நீட்டினான். அதைக் குமரேசன் படித்துப் பார்த்தான்.
'பெங்களூரில் தண்ணீர்ப் பஞ்சம் நிலவுகிறது. இனிமேல் நமது குடியிருப்பு வளாகத்தில் தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்துங்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக தண்ணீர் மீட்டர் போடப்பட்டுள்ளது. மாதக் கடைசியில் தண்ணீர் கட்டணம் தண்ணீர் உபயோகத்திற்கு ஏற்றவாறு உங்களிடம் இருந்து வசூலிக்கப்படும். குறைவாக செலவழிக்கும் வீட்டுக்கு மாதக் கடைசியில் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு உண்டு!'
குமரேசன் தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்தான். பெங்களூரில் ஒரு பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வந்தான். அவனுடைய மனைவி தேவகியும் அவனைப் போலவே மற்றொரு பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வந்தாள். அவர்களுக்கு கமலா என்றொரு நான்கு வயது மகள் இருந்தாள். அவர்கள் 100 வீடுகள் உடைய ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். பெங்களூரில் அந்த மாதம் திடீரென்று பெரிய தண்ணீர் பஞ்சம் நிலவியது. மக்களுடைய தண்ணீர் பயன்பாட்டிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டன. அவனது குடியிருப்பு வளாகமும் தங்களுடைய தண்ணீர் பயன்பாட்டைக் கவனிக்க ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக தண்ணீர் செலவை அளக்கும் நீரளவியை நிறுவியது. இந்தப் புதிய நடவடிக்கையை அறிவிக்கும் தாள் இப்போது குமரேசனின் கையிலிருந்தது.
தாளினைப் படித்தவுடனே குமரேசன் தனது மனைவியை அழைத்தான்.
'தேவகி. இந்த நோட்டீஸைப் பாரு. ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியா தண்ணி மீட்டர் போட்டுட்டாங்க. இனிமே நாம சர்வ ஜாக்கிரதையா இருக்கணும். காலைல பல் தேச்சவுடனே காபி குடிச்சிட்டு நேரா ஆபீசுக்கு போய் அங்க நான் குளிச்சுக்குறேன். ஆபீஸ்ல டார்மட்டரி இருக்கு. அங்க இருக்கற பாத்ரூம்ல நான் குளிச்சிக்கிறேன். ஆபீஸ்ல யாரு தண்ணி யூஸ் பண்றாங்கன்னு பார்க்கிறது இல்லை. நீயும் உன்னோட ஆபீஸ் போயிட்டு லேடிஸ் டார்மட்டரி பாத்ரூம்ல குளிச்சு ரெடி ஆகிடு. கமலாவ கிரச்சுல விட்டுட்டு அங்கேயே குளிப்பாட்டிடு. இந்த மாசம் நாமதான் அந்த 50 ஆயிரம் ரூபாய ஜெயிக்கறோம்,' என்றான் குமரேசன்.
'அருமையான யோசனை. நீங்க ஆபீஸ்ல இருந்து சாயந்திரம் எட்டு மணிக்கு வந்துருங்க. நானும் சாயந்தரம் ஆறு மணிக்கு நம்ம கமலா குட்டியை கூட்டிட்டு வீட்டுக்கு வந்துடறேன். வீட்டு பாத்ரூம்ல காலையில இரண்டு வாளி தண்ணிய புடிச்சு வைக்கிறேன். ஒரு நாள் முழுக்க அந்த ரெண்டு வாளி தண்ணி வச்சு நாம ஓட்ட வேண்டியது தான்,' என்றாள் தேவகி.
'ரெண்டு வாளித் தண்ணி ரொம்ப ஓவர். ஒரு வாளி போதும். தண்ணி மிச்சம் பிடிக்க பாத்ரூம்ல மக்குக்கு பதிலா குட்டி டம்ளர் வை,' என்றான் குமரேசன்.
அன்று காலை 6 மணிக்கு எழுந்த குமரேசன் ஒரு குட்டி டம்ளர் தண்ணீரில் பல் தேய்த்து விட்டு, காபி குடித்தபோது, காபியில் பற்பசையின் சுவை சேர்ந்து சுண்ணாம்பு காபியைப் போல இருந்தது. அதைக் கண்டுகொள்ளாமால், வேக வேகமாக அலுவலகத்திற்கு சென்றான். காலை 6.30 மணிக்கு அவனைக் கண்ட அலுவலகத்தின் வாயிற்காப்போன் பிரமித்துப் போய், இப்படி ஒரு கடமை உணர்ச்சியா என்று ஆச்சரியமடைந்தான்.
அலுவலகம் சென்ற குமரேசன் அங்கு இரவு தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுதுயிற்கூடத்தின் குளியலறைக்குச் சென்று சவரம் செய்ய துவங்கினான். கழுவுத்தொட்டியின் குழாயில் தண்ணீர் வந்தபடி இருக்க அவ்வப்போது தனது சவரக்கத்தியை அதில் கழுவினான். முகச்சவரம் செய்த பின், தண்ணீரை பெரிதாகத் திறந்து முகத்தைக் கழுவினான். பின், அலுவலகத்தின் வரவேற்பறைக்குச் சென்று அன்றைய செய்தித்தாளைப் புரட்டினான். சற்று நேரத்தில் மறுபடியும் பொது துயிற்கூடத்தின் குளியல் அறைக்கு வந்து, பொழிநீர் குளியலில் வெதுவெதுப்பான நீரில் நீண்ட நேரம் குளித்தான். தண்ணீரைக் கன்னா பின்னா வென்று செலவழித்தான். சற்று நேரம் சென்ற பிறகு குளித்துவிட்டு வெளியே வந்து தனது இருக்கைக்குச் சென்று வேலை பார்த்தான். அலுவலகத்தில் வேறு ஒருவருக்குமே அவனது சீக்கிர வருகைப் பற்றிய விவரம் தெரியாது.
மதியம் சாப்பிட்ட பிறகும் கூட அலுவலகத்தின் கழிப்பறையில் பல் துலக்கினான். பல் துலக்கிய பிறகு மறுபடியும் கழுவுத்தொட்டி நிரம்பும் அளவிற்கு தண்ணீரை நிரப்பி முகத்தைக் கழுவினான். அவன் பின்பு இருவர் கை கழுவக் காத்திருந்ததைப் பொருட்படுத்தாமல், முகத்தை மெதுவாக கழுவி விட்டு, இருக்கைக்கு வந்தான்.
மாலையில் மறுபடியும் பொதுதுயிற்கூடத்தின் குளியலறைக்குச் சென்று காலையில் குளித்தது போலவே நன்கு பொழிநீர் குளியலில் குளித்தான். வீட்டில் கூட குமரேசன் இவ்வாறு இரண்டு முறை குளிப்பது இல்லை. நன்றாக குளித்துவிட்டு கீழே தனது அலுவலகத்தின் வாகன நிறுத்தகத்திற்கு வந்து அங்கு நின்றிருந்த தனது சிற்றுந்தை எடுத்துக் கொண்டு, வீட்டுக்கு கிளம்பினான்.
வீடு திரும்பியுடன், கழிவறைக்குச் சென்ற போது, ஓரமாக வைக்கப்பட்டிருந்த அந்த வாளியைக் கவனித்தான். அரைவாளி பாக்கியிருந்தது.
'தேவகி. தண்ணிய இப்படித்தான் செலவழிப்பியா. ராத்திரி வரைக்கும் எப்படி அரைவாளில சமாளிக்கறது. நான் காலைல ஒரு டம்ளர் தண்ணில பல் தேய்ச்சுட்டு போனதுக்கு அப்புறம் கிட்டத்தட்ட முழு வாளி தண்ணி இருந்தது. எப்படி அரைவாளி காலி ஆச்சு?' என்றான் குமரேசன்.
'மன்னிச்சுக்கோங்க. நான் கமலாவை கிரச்சுல காலைல குளிப்பாட்டினேன். தாராளமா தண்ணிலதான் குளிப்பாட்டினேன். இன்னைக்கு சாயந்தரம் அவ விளையாடிட்டு வந்தபோது உடம்புல கொஞ்சம் கறையாயிடுச்சு அதனால அவளை பாத்ரூம்ல மறுபடி குளிப்பாட்டினேன். அதனால அரை வாளி தண்ணி செலவாயிடுச்சு,' என்றாள் தேவகி.
இவ்வாறு குமரேசனும் தேவகியும் மிகவும் ஜாக்கிரதையாக தண்ணீரைச் செலவழித்தனர். குமரேசனும் தேவகியும் அவர்கள் தான் பரிசு வெல்லப் போகிறார்கள் என்று கிட்டத்தட்ட முடிவெடுத்து விட்டனர். அவர்கள் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்தனர். அவர்கள் இருவரும் ஐம்பதாயிரத்தைக் கொண்டு என்ன வாங்கலாம் என திட்டமிட்டனர்.
மாதம் முடிந்தது. அடுத்த மாதம் முதல் தேதியன்று, காலை 6 மணிக்கு, அவர்களது வீட்டின் கதவின் அழைப்பு மணி அடிக்க, தூக்கக்கலக்கத்திலிருந்த குமரேசன் வேகமாகச் சென்று, குதூகலத்துடன் கதவைத் திறந்தான். அவர்களது வீட்டிற்கு முன்பு ஒரு பெரிய கூட்டம் நின்று கொண்டிருந்தது. தனக்கு ஐம்பதாயிரம் பரிசைக் கொடுப்பதற்காக குடியிருப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்றோர் வந்துள்ளதாக எண்ணி தேவகியை மகிழ்ச்சியோடு அழைத்தான்.
'தேவகி. நம்ம அபார்ட்மண்ட் கமிட்டி மெம்பர்ஸ் வந்துருக்காங்க. சூடா காபி போடு.' என்றான் குமரேசன்.
அப்போதுதான் அவன் கவனித்தான். வந்தவர்களின் முகம் இறுகிப்போயிருந்தது. சிலர் கண்கள் அதிகாலைச் சூரியன் போல், செக்கச் சிவக்க கோபமாக இருந்தன.
'குமரேசன். நம்ம அப்பார்ட்மெண்ட்ல 100 வீட்டு தண்ணியை விடவும் உங்க ஒரு வீட்டு தண்ணி உபயோகம் அதிகமா இருக்கு,' என்றார் குடியிருப்புவாசிகளின் குழுத்தலைவர் பார்த்தசாரதி.
'சார் நிச்சயமா இருக்க முடியாது. மீட்டர்ல ஏதாவது தப்பா இருக்கும். நாங்க ஒரு நாளைக்கு ஒரு வாளிக்குள்ள தான் தண்ணிய யூஸ் பண்றோம்,' என்றான் குமரேசன்.
'வாங்க உங்க ரிப்போர்ட்ட பாருங்க' என்றார் பார்த்தசாரதி.
'தினமும் காலையில 11 மணிக்கு, உங்க வீட்ல அதிகமா தண்ணி யூஸ் பண்றீங்க. நீங்க அதிகமா தண்ணி எடுத்துக்கறதுனால நாங்க 12 மணிக்கு மறுபடியும் மொத்த அப்பார்ட்மென்டுக்கும் தண்ணி லாரிய கூப்பட வேண்டியிருக்கு. நேத்திக்குதான் மாசக் கடைசியோட ரிப்போர்ட் வந்தது. போன மாசத்தோட தண்ணி லாரிக்கான செலவை கிட்டத்தட்ட மொத்தமா நீங்க தான் கட்ட வேண்டி இருக்கும். ஒரு லட்சம் தாண்டி இருக்கும்,' என்றார் பார்த்தசாரதி.
'சார் 11 மணிக்கு எங்க வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க. நாங்க ரெண்டு பேருமே வேலைக்கு போறோம்,' என்றான் குமரேசன்.
'வாங்க, நாம செக்யூரிட்டி ரூமுக்கு போய் கேமராவில் 11 மணிக்கு யார் வீட்டுக்கு வராங்கனு பார்க்கலாம்...' என்றார் பார்த்தசாரதி.
குமரேசனும் தேவகியும் குழந்தையைக் கூட்டிக்கொண்டு குடியிருப்பின் பாதுகாப்பு அறைக்குச் சென்று அங்கு தொலைக்காட்சித் திரையில் தங்களது வீட்டின் வாசலைப் பார்த்தபோது, சேமிக்கப்பட்ட முந்தைய நாளின் காணொலி காலை 11 மணிக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
அப்போது திரையில் ஒரு பெண்மணி தோன்றினாள். அவள் வீட்டின் கதவைத் திறந்தாள்.
'யாருங்க இந்தப் பொண்ணு. எதுக்கு வீட்டுக்குள்ள இப்ப நுழையறா?' என்றார் பார்த்தசாரதி.
'அவங்க செங்கமலம். சாயந்திரம் 4 மணிக்கு எங்க வீட்டை பெருக்க வரவங்க. ஏன் 11 மணிக்கு வராங்கன்னு தெரியல. அவங்களுக்கு தண்ணித் தேவை கிடையாது,' என்றான் குமரேசன்.
'இருங்க யாரோ தூரத்துல வர்ற மாதிரி தெரியுது...' என்றார் பார்த்தசாரதி.
தொலைக்காட்சித் திரையில், சில விநாடிகள் கழித்து, செங்கமலத்தின் கணவன், அப்பா, அம்மா, இரண்டு குழந்தைகள் கைகளில் சோப்பு டப்பா, துண்டுகள், புதிய ஆடைகளைச் சுமந்தபடி வீட்டிற்குள் சென்றனர். அவர்கள் உள்ளே சென்றவுடன், செங்கமலம் வீட்டின் கதவை உள்புறம் சாத்திக் கொண்டாள்.
குமரேசனும் தேவகியும்..... என்ன ஆனார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறோம்...