ARTICLE AD BOX
-சத்திய சந்தன்
இன்று இரவு டூட்டிக்கு, இரண்டு மணி நேரம் லேட்டானதால் செய்யக்கூடிய வேலைப் பளுவை நினைத்துக் கொஞ்சம் பரபரப்பு அடைந்தாள் ரேவதி.
இவள் உள்ளே நுழைந்ததும், மதியம் டூட்டி பார்த்த நாஸ் உடை மாற்றி ரெடியாக இருந்தாள் "வரட்டுமா..? பத்து கேஸ் புதுசு இருக்கு, விஸ்டை பார்த்துச் செய்" அவள் நடந்துகொண்டிருந்தாள்.
அவள் அவசரம் கிராமத்துக்கு கடைசி பஸ்சை பிடிக்கணும்.
யூனிபாஃர்ம் மாட்டிக்கொண்டு வெளியே வந்து லிஸ்டை பார்த்தாள் ரேவதி. எல்லாம் வயிற்றுப் போக்கு கேஸ் சீசன் இது. வரிசையாக எல்லோருக்கும் பி.பி. பார்க்கணும். ஊசி போடணும். மாத்திரை கொடுக்கணும். சலைன் டரிப்பை சரி பார்க்கணும்.
அந்த நேரத்தில்...
தன் கணவருடன் வார்டு பேஷன்டான வள்ளி வந்து நின்றாள்.
"என்ன...?"
"யம்மா. இவருக்கு வயத்த வலிச்சிக்கிட்டு தண்ணியா போவுதும்மா."
"எத்தினி தடவ போனது...?"
"மூணு நாலு தடவ இருக்கும்மா.."
"காலரா கேஸ்ல... துணைக்கி யாரும் அங்க இருக்கக் கூடாதுன்னா, யாரும் கேட்டாத்தானே..! ஓ.பி.க்கு போக சொல்லு. டாக்டர்ட்ட அட்மிஷன் சீட்டு வாங்கி வந்தா. ஒரு பெட்ட போட்டு படுக்க வச்சுடலாம்.."
"வேண்டாம்மா...நா வந்தே மூணு நாள் ஆயிட்டு நாளைக்கி வூட்டுக்குப் போகணும், புள்ள குட்டி எல்லாம் பசி, பட்டினியா பயந்து போய்க் கெடக்கும். நீங்களே ஊசி போட்டு மாத்திரை கொடுங்கம்மா...''
ரேவதி கொஞ்ச நேரம் யோசித்தாள். டாக்டர் வார்டு ரவுன்ட்ஸ் வரும்போது சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டே ஒரு ஊசி போட்டாள். உள்ளுக்கு மாத்திரை கொடுத்தாள்.
வரிசையாக ஒவ்வொரு பேஷண்டாக, பி.பி. பார்த்து ஊசிபோட்டு, மாத்திரை கொடுத்தாள். சலைன் ட்ரிப்புகளை மாற்ற வேண்டியதை மாற்றிச் சரி செய்தாள்.
திரும்ப ஓய்வு அறைக்கு வரும்போது மணி பன்னிரண்டு. பசி.
டிபன் பாக்ஸை திறந்ததும்... சட்னியின் ஊசிப்போன வாசம் 'குப்'பென்று முகத்தில் அடித்தது. அடிவயிற்றைக் குமட்டியது. பெயருக்கு இரண்டு இட்லியை பிளாஸ்க்கில் உள்ள வெந்நீரில் நனைத்துச் சாப்பிட்டாள்.
மாலை நான்கு மணிக்கு சுட்டு டப்பாவில் வைத்த இட்லி. பன்னிரண்டு மணிக்கு சாப்பிட்டால் என்னவாகும்..?
இன்று எல்லாமே அவசரம். எப்போதும் அவன் வண்டியில் கொண்டு வந்து விட்டு போவான். நேற்று இரவு டூட்டி முடிந்து காலை பஸ் பிடித்து வீட்டுக்குப் போகும்போது மணி பத்து. இவளைப் பார்த்ததும் அவள் கணவன் முறைத்துக்கொண்டே வண்டியை வேகமாக உதைத்து ஸ்டார்ட் பண்ணி வேகமாகப் போனான்.
வெளியே கோபமாகப் போன கணவனை எதிர்பார்த்து... என்னமோ, ஏதோ என்று பயந்து அவள் காத்திருக்க... ஆறு மணிக்குத்தான் வீடு வந்தான்.
"இங்க அம்மாவுக்கு உடம்பு முடியல. பையன் பரீட்சைக்குப் படிக்கிறான்.... வூட்டு வேலை நெறையா இருக்கு... நீ, ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரின்னு ஓடுற.. அதான் உன்மேல கோவம். பகல்ல நா இருந்தா உன்னுட்ட சண்டை போட்டிருப்பேன். அதான் வெளில் கெளம்பிட்டேன்..." என்ற கணவனை, கண்களில் நீர் கலங்கப் பார்த்தாள் ரேவதி. அவன் தரை பார்த்தான்.
ரேவதி பதில் பேசாமல் மெளனமாக பையைத் தூக்கிகொண்டு பஸ்ஸுக்கு நடந்தாள். அவனைப்போலவே தானும் மெளனமாக நடந்துகொள்வதுதான் இருவருக்கும் நல்லது என்று நினைத்துக்கொண்டாள்.
பொழுது விடிஞ்சி, பொழுதுபோனா... எந்த நேரமும் மனசு ஒரே பரபரப்பா இருக்கு. வாழ்க்கையை அவசரப்படுத்துகிற நர்ஸ் தொழில். மனசில் உள்ள ஆசைகளைக் காலில்போட்டு மிதித்துவிட்டு ஆஸ்பத்திரி, வீடு என்று மெஷினாய் ஓடுகிற நர்ஸ் தொழில்...
இப்படிக் கெடந்து கஷ்டப் படுகிறபோதும் இந்த வேலைக்கு உள்ள மரியாதையும், கௌரவமும் கிடைக்கிறதா? வீட்டிலும் இல்லை. ஆஸ்பத்திரியிலும் இல்லை.
இவளும் ஓ.பி.யில் இருந்து. ஆபரேசன் தியேட்டர் பிரசவ வார்டு, குழந்தைகள் வார்டு, எம்.எஸ். வார்டு. ஐ.சி.சி .வார்டு என்று ஒவ்வொரு பிரிவிலும் இருந்து பார்த்து விட்டாள்.
சொன்னதைக் கேட்காமல் மருத்துவப் பணிக்கு இடைஞ்சலாக 'நா ஆளுங் கட்சிக்காரன், ஒன்றியம், வட்டம்' என்று கரை வேஷ்டியை மடித்துக்கட்டிக் கொண்டு மீசையை முறுக்கும் அதிகாரம்.
ஓ.பி.யில் டாக்டரை பார்க்க சீட்டு வாங்கி வரிசையில் வரும்போது... இடையில் ஆஸ்பத்திரி பணியாள் தன் உடம்பைக் காண்பிக்கப் புகுந்தான் என்று, 'இதுக்கு எதுக்கு வரிசை' என்று சீட்டைக் கிழித்து இவள் தலையில் போட்டுச் சென்றவனும் உண்டு.
இது ரம்பா மாதிரி இல்ல... நக்மா மாதிரி இல்ல என்று நடிகைகளின் பெயரை வைத்துக் கேலி பேசி காமப் பார்வையுடன் சுத்திவரும் பார்வையாளர்களும் உண்டு.
''ம்! எதை நினைத்து என்ன பயன்? கை நிறைய சம்பளம் கிடைக்கிறது. நிம்மதி? போன ஜென்மத்தில் எதாவது பாவம் பண்ணியிருப்போமா?
"அய்யய்யோ... நா, என்ன பண்ணுவேன்... கண்ணு சொருகிட்டே... நல்லா இருந்து மனுசனுக்கு ஒரு ஊசி போட்டதால இப்படி ஆயிட்டே... பாவி! அவ நல்லா இருப்பாளா? காசு கொடுக்கலன்னு இது மாதிரி பண்ணிட்டாளா? உனக்கு எம்புட்டுக் காசு வேணும்? அம்பதா? நூறா? உன்னோட ரேட் எம்மா?" வள்ளி போட்ட சத்தம் மருத்துவமனையின் சகல வார்டுகளிலும் ஒலித்து, எதிரொலித்தது. "ரேட்டா...?" ரேவதி எழுந்து வெளியே சப்தம் கேட்ட வார்டுக்கு ஓடினாள். ''உன்னோட காசக் கொண்டுப் போய்க் குப்பையில போடு. நா ஊசி போட்டதால் இது மாதிரி ஆயிட்டுன்னு கத்தறியே...?"
''ஆமாண்டி பாவி! எனக்குத் துணையா வந்த எம் புருஷன்.. புருஷன்..."
"நா என்ன பண்ணினேன். நீதானே! மூணு தரம் தண்ணியா போவுது, ஊசி போடுங்கன்னு சொன்ன...?
"அப்ப.. சொன்னேன். இப்ப இப்படி ஆயிட்டே... பொழுதனைக்கும் டாக்டர்களுங்ககிட்ட பல்லக் காமிச்சுக்கிட்டு நிக்கிறதுக்குத்தானே ஒங்களுக்கு நேரம் சரியா இருக்கு... எங்க வைத்தியம் பார்க்கிறீங்க..."
"இத பாரும்மா... மரியாதையா பேசு, நீ ஊசி போடுங்கன்னு சொன்னதும், நா ஒ.பி.க்குதான் போவ சொன்னேன். இரக்கப்பட்டதால் இப்படியா? முதல்ல நீ எந்திரி... என்னை ஒண்ணும் பண்ண முடியாது. முறைப்படி ஓ.பிக்கு போய் டாக்டர்ட்ட காமிச்சிட்டு வா!
"அய்யய்யோ... உடம்பு சில்லின்னு ஆயிடுச்சே... மூச்சுக்காணுமே! நா என்ன பண்ணுவேன்... அடிப்பாவி, கொன்னுட்டியே...! எம் புருஷன...'' மீண்டும் அவளின் ஒப்பாரி அதிகமாக...
சட்டென்று படுத்திருந்த அவனின் கண் இமையை விலக்கிப் பார்த்தாள் ரேவதி. வாயைப் பிளந்து பார்த்தாள். நாடி பிடித்து, பி.பி. செக் பண்ணும்போது...பல்ஸ் ரொம்ப இறங்கிப்போய் ஆபத்தான நிலையில் இருந்தது.
அவளுக்குள் அதிர்ச்சி. வயிற்றுப் போக்கு ரொம்ப நேரமாகப் போயிருக்க வேண்டும். இல்லையேல் உடம்பு இவ்வளவு சீக்கிரம் ஆபத்தான நிலை ஆகியிருக்காது.
"அய்யா... உங்க பெயரென்ன?"
"சொல்லுய்யா, உங்க பெயரென்ன...? உடம்பை உலுக்கினாள்.
"செய... ராமன்ங்க..."
"ம்..சொல்லு, எத்தினி தடவ போனது."
".............."
"சொல்லுய்யா ... எத்தினி தடவ போனது...?'
பளிச்சென்று அவன் கன்னத்தில் அறைந்தாள். 'உண்மையைச் சொல்லு? எத்தினி தடவ போனது...?"
அவன் மிரண்டு போய் விழித்தான். "இ...இரு..பது தடவைக்கு மேல.. கால்லருந்து போவுதும்மா..."
"அடப்பாவி, மனுசா... காலையில் இருந்து இருபது தடவைக்கு மேல போயிருக்கு... நீ மூணு, நாலு தடவன்னு என்னுட்ட பொய் சொன்னியே..."
பக்கத்தில் இருந்த வார்டு ஹெல்பரிடம் டாக்டருக்கு மெமோ எழுதி அனுப்பிவிட்டு, காலியாக இருந்த பெட்டில் படுக்க வைத்தாள்.
இரண்டு கைகளிலும் நரம்புகளைக் கண்டுபிடித்து ஒருபக்கம் குளுக்கோஸ் சலைனும், மறு பக்கம் குளுக்கோஸ் சொலுயூசன் சலைனும் போட்டாள். ஆம்பிசிலின் ஊசியுடன், காராமைசின் ஊசியும் சேர்த்துப் போட்டாள்.
கொஞ்ச நேரத்தில டூட்டி டாக்டர் வந்தார். விவரம் சொன்னாள். அட்மிசன் சீட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு, "ட்டிரிப்பை கண்டினியூவ் பண்ணுங்க. காலையில் நார்மலுக்கு வந்துடும்.." என்று சொல்லிப் போனார்.
மனம் சலித்துப் போனது. ஒரு நிமிஷத்தில் உடல் நடுக்கம் கண்டது. இது மாதிரி பத்து கேஸ் வந்தால் போதும்! தொழிலில் உள்ள புனிதம் கெட்டுவிடும்.
திரும்ப ஒவ்வொரு வார்டாக நுழைந்து, வரிசையாக பேஷண்டுகளைப்பார்த்து வந்தாள். மணி இரண்டானது. நேற்று பகலில் வேறு தூக்கம் இல்லை. உடம்பு பலகீனமாய் இருந்தது. கொஞ்ச நேரம் கண் அசந்தால்நன்றாக இருக்கும் என்று நினைத்தவள், வேண்டாம், ஜெயராமன் கேஸ் கொஞ்சம் சீரியஸ் என்று... சேரை தூக்கி அந்த வார்டுக்கு நேராகப் போட்டுக் கொண்டு, இதர எழுத்துப் பணிகளைப் பார்த்தாள்.
விடிந்ததும் ஏழு மணிக்கு அடுத்த டூட்டி நர்ஸ் ரெடியாக வந்தாள். ரேவதி உடை மாற்றிக்கொண்டு வெளியே வரும்போது...
"அம்மா... தெய்வம்போல எம் புருஷனை எமன்கிட்ட இருந்து காப்பாத்தினீங்க..." என் ரேவதியின் காலில் பொத்தென்று விழுந்தாள் வள்ளி.
"சீச்சி.. என்ன வேல...இது? எந்திரி.. என்று பின்வாங்கினாள் ரேவதி.
பின்குறிப்பு:-
கல்கி 23-02-1997 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்