ARTICLE AD BOX
-பானு ரவி
'பயணிகள் கவனத்துக்கு... வாஷிங்டன் டி.சி. செல்லும் யூ.ஏ.937 விமானம் இன்னும் அரைமணியில் கிளம்பவிருக்கிறது...'
அறிவிப்பைக் கேட்ட லலிதா, ஏழாவது தடவையாகத் தமது பாஸ்போர்ட்டையும், ஏர் டிக்கெட்டையும் சரி பார்த்துக்கொண்டாள். கூடவே கணவன் சுந்தரும் வந்திருந்தால் இதைப் பற்றியெல்லாம் அடிக்கொருதரம் கவலைப்பட்டுக் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டாம்... கம்பெனியில் நெருக்கடியான நேரம் என்பதால் அவரால் வர முடியாத நிலைமை.
லலிதாவுக்கே சற்று வியப்பாகத்தான் இருந்தது. வாழ்நாளில் இப்படித் தன்னந் தனியே அமெரிக்காவுக்குப் போவோம் என்று கனவுகூடக் கண்டதில்லை.
போன மாதம் திடும்மென்று பரத் ஃபோன் செய்து சொன்ன சேதியைக் கேட்டு இருவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்கள். 'அப்பா! எனக்கு வர்ஜீனியால வேலை கிடைச்சிருக்கு. அமெரிக்காவிலேயே, ரெண்டாவது பெரிய கம்பெனி... சம்பளம் நிறையக் கொடுத்து, காரும், கூடவே அபார்ட்மெண்ட்டும் தர்றாங்க!" ஸ்பீக்கர் ஃபோனில் அவன் பேசுவதைக் கேட்டு லலிதா சந்தோஷத்தில் அப்படியே திளைத்து போயிருந்தாள்.
அப்புறம் ஜெட் வேகத்தில் அமெரிக்காவுக்கு விசா வாங்கி, டிக்கெட் வாங்கி இதோ புறப்பட்டும் வந்தாயிற்று...
தன் இருக்கையில் லலிதா அமர்ந்து கொண்டபோது, மெழுகு பொம்மை போலிருந்த விமானப் பணிப்பெண் புன்சிரிப்போடு அவளது லக்கேஜை மேலேற்றி வைத்தாள். சீட்பெல்ட்டைப் போட்டுக்கொண்ட நாழிகையில், விமானம் மெள்ள மேலேறிப் பறந்தபோது, லலிதாவின் மனதும் கடந்த காலத்துக்குப் பயணப்பட்டது.
"லலிதா, இன்னிக்குச் சாயங்காலம் வர்றச்ச நாலு ஃப்ரெண்ட்ஸோட வருவேன்; ஏதாவது சாப்பிடப் பண்ணி வை... சுந்தர் எப்பவும் இப்படித்தான். ஈற்று முன்கூட்டியே சொல்லுவோம்; கொஞ்சம் ஏற்பாடாகச் செய்வோம் என்பதெல்லாம் கிடையாது. அன்றைக்கென்று பார்த்து அரிசியும், பருப்பும் 'நிறைந்து' இருந்தது. ஃப்ரிஜ்ஜில் இரண்டு வாழைக்காயும், நாலு கத்தரிக்காயுமே கண்சிமிட்டின.
கடைக்குப் போய்வரக் குறைந்தது நாற்பது நிமிஷங்களாகும் என்று யோசித்தவள் தாமதிக்காமல் கிளம்பினாள் . சமர்த்தாக ஹோம்வொர்க் செய்து கொண்டு இருந்த பரத்தைப் பார்த்தவள்... "பரத் கண்ணா, ஹோம்வொர்க் பண்ணப்புறம் டி.வி.லே சமர்த்தா கார்ட்டூன் பார்த்துண்டு இருப்பியாம்... அம்மா உனக்கு மைலோ சாக்லேட்மில்க் வாங்கிட்டு ஓடி வந்துடுவேனாம்... உனக்குச் சாப்பிட கேக் பிஸ்கட், ஜூஸ் எல்லாம் வச்சிட்டுப் போறேன்... சரியா?..." ஹோம்வொர்க் செய்யும் மும்முரத்தில் தலையாட்டினான் பரத்.
படி இறங்கி ஒரு பத்தடிகூடத் தாண்டி இருக்க மாட்டாள்... "அம்மா! பயம் அம்மா! பயம்" .. பரத்தின் கதறல் அவளைக் கிடுகிடுங்க வைத்தது. அரக்கப் பரக்க ஓடி வந்தவளை இறுகக் கட்டிக்கொண்டான் பரத். தனியே இருக்கப் பயந்து அவன் போட்ட சத்தத்தில், அண்டைவீடுகளில் எல்லாம் மிரட்சியுடன் தென்பட்ட முகங்கள்! ஏகக்கடுப்பாகிப் போனாள் லலிதா... சுள்ளென்று அவன் முதுகில் ஒன்று வைத்தவள்.. 'வந்து தொலை... சீக்கிரம் நடக்கணும்... மொள்ள வந்தியானா மொத்துத்தான்' சுந்தர் வருவதற்குள் சமைத்து முடித்து வீட்டை நேராக்கணுமே என்ற கவலை மேலிட நடந்தாள். அதன்பிறகு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பரத்தை தனியாக விட்டுப் போனதே இல்லை. கங்காரு தன் குட்டியை வயிற்றில் கட்டிக்கொண்டு போவது மாதிரித்தான், எல்லா இடங்களுக்கும் பரத்தோடுதான்...
தனியாக மொட்டை மாடி போக பயம், இருட்டில் பாத்ரூம் போக பயம், தியேட்டரில் இடைவேளையின்போது கேன்டீன் போய் பாப்கார்ன் வாங்க பயம், கோயிலில் ஆண்கள் வரிசையில் நிற்க பயம்... இப்படி எதற்கெடுத்தாலும் "அம்மா... பயமா இருக்கு" என்று நடுங்கிய பிள்ளை... இன்று அமெரிக்காவில் என்ன செய்கிறானோ... லலிதாவுக்கு நேரில் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது.
பரத் அவளை வரவேற்க வந்திருந்தான். சொகுசான ஃபோர்ட் கார் பளபளத்துக்கொண்டிருந்தது. முகத்தில் சற்று சதை போட்டு, பளீர் சிரிப்பும் பரவசமுமாக இருந்த பரத், சுந்தரை அப்படியே அச்சில் வார்த்தது போலிருந்தான். சகலமும் வெள்ளையாக அவனது அபார்ட்மெண்டும் ஏகப் பிரமிப்பூட்டுவதாக இருந்தது.
அவனது அலுவலகம் பற்றியும், வேலையைப் பற்றியும் தினமும் ஏதேனும் ஒரு செய்தி இருக்கும். அனாயாசமாக அவன் டிரைவ் செய்வதும், கை சொடுக்கும் நேரத்தில் மேப்பை வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட இடத்துக்குப் போவதும் லலிதாவை வியப்பில் ஆழ்த்தின
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இடமென்று சுற்றிவந்ததில் நாட்கள் பறந்துகொண்டிருந்தன. இன்னும் பத்து நாட்களில் இந்தியாவுக்குக் கிளம்பணும் என்ற எண்ணமே அவளுக்கு வேதனை தருவதாக இருந்தது. "அம்மா, ரெடியா இரு. இன்னிக்கு
வெள்ளிக்கிழமையாச்சே... உன்னை பாரத்வாணி ஹிண்டு சென்டரில் இருக்கிற ஒரு கோயிலுக்குக் கூட்டிண்டு போறேன்..."
இரண்டரை மணிநேரப் பயணத்துக்குப் பிறகு அந்தக் கோயிலை அடைந்தபோது மனது ரொம்பவும் பரவசப்பட்டுப் போனது. பளிங்குப் பிள்ளையாரும் துர்க்கையும், தியானம் செய்துகொண்டிருந்த சிவபெருமானும், விஷ்ணுவும் பெரிய பிரார்த்தனை மண்டபமுமாக அந்தக் கோயில் மிக அழகாக இருந்தது. அங்கு வந்திருந்தவர்களைப் பார்த்தபோது, 'அம்மாடி! இத்தனை பேரு நம்மூர்க்காரா இருக்காளா?' என்று மனது வியந்து போயிற்று.
வரும் வழியில், பழங்கதையைச் சொல்லிக் கொண்டும், பாடல்களைக் கேட்டுக் கொண்டும் வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
அந்த நெடுஞ்சாலையில் இருட்டைக் கிழித்துக்கொண்டு கார் போய்க்கொண்டிருந்தது. ரிஃப்லக்டர்களின் வெளிச்சமும், சாலையோரத்துக் காட்டுப் பகுதியின் இருட்டும், சர்சர்ரென்று போய்க் கொண்டிருக்கும் வாகனங்களும் ஒருவித அமானுஷ்ய அமைதியை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. அயர்ச்சி மேலிட லலிதா, சற்றுக் கண்ணயர்ந்தாள்.
கிரீச் என்ற சப்தத்தோடு கார் நிற்கவும், பரத்... என்னாச்சு? ஏன் இங்க வழியிலே கார் நிக்கறது?''
அம்மா... அங்க பாரு..." கண்ணுக் கெட்டிய தூரத்தில் ஒரு கார் குப்புறக் கவிழ்ந்து கிடப்பதையும், இரண்டொருவர் நிற்பதையும் பார்த்தபோது கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. "என்னடா பரத், இது? உனக்கு ஒண்ணும் இல்லையே?... அந்தக் காரோட மோதிட்டியா, என்ன?"
"ஐயோ அம்மா! கொஞ்சம் பேசாம இரு. நாம் எங்கே இந்த ரோட்ல வந்தோம்? நானா யூடர்ன் எடுத்து என்னவாச்சுனு பார்க்க வந்தேன் ... நீ கொஞ்சம் கார்லயே வெயிட் பண்ணு... நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன்; பயங்கர ஆக்சிடெண்ட் மாதிரி தெரியறது... விபத்து நடந்திருக்கும் இடத்துக்கு இங்கிருந்து நடந்துதான் போகணும். நீ இங்கேயே இரு...''
லலிதாவுக்கு அந்த ஏசி காரிலும் வியர்த்துக் கொட்டியது. "கடவுளே!! யாரோட உசிருக்கும் ஆபத்து வரப் படாது... பாவம்... என்ன கஷ்டத்துல இருக்காளோ...? ஒருவித நடுக்கம் உடம்புக்குள் வந்துபோனது.
நேரம் செல்லச் செல்ல, லலிதாவின் நடுக்கம் அதிகமானது. "என்ன பிள்ளை இவன்? இத்தனை நாழி பண்றானே?... காரைவிட்டு இறங்கி நடக்கவும் அச்சமாக இருந்தது. பரத்தின் ஆஃபீஸ் ஃபைல்கள், டிஜிட்டல் காமிரா, பணப்பை என்று எல்லாவற்றையும் காரில் எப்படி விட்டுச் செல்வது? தவித்துக் கொண்டிருந்த வேளையில்தான், ஒரு போலீஸ் கார் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி... 'ஜஸ்ட்... ஒன் மினிட்' என்ற பரத், ''அம்மா, இங்க வா... இந்தப் போலீஸ் காரில் ஏறி, நீ நம்ப அபார்ட்மெண்ட்டுக்குப் போ... பயப்படாதே.. நான் போய் அந்த ஆக்ஸிடெண்ட்ல சீரியஸா இருக்கிற பெண்ணை ஹாஸ்பிட்டல்ல சேர்க்க ஹெல்ப் பண்ணிட்டு வர்றேன்.." என்றான்.
கலங்கிய முகத்தோடு இருந்தவளை... '"அம்மா, ப்ளீஸ்... சும்மா தைரியமா இவங்களோட கிளம்பு... நான் சீக்கிரம் வந்துடுவேன்..."
அபார்ட்மெண்ட் வந்து சேர்ந்தவளுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. மணி விடியற்காலை 4.30 ஆகியிருந்தது. பரத்திடமிருந்து ஃபோன் கூட வரவில்லையே என்றிருந்தது. கணக்கு வழக்கின்றி மனம் ராமஜபம் செய்யத் தொடங்கியபோது, பரத் வந்து சேர்ந்தான்.
"என்னம்மா... ரொம்ப பயந்துட்டியா?"
''என்னாச்சு தெரியுமா? ஆக்ஸிடெண்ட்ல அந்த அமெரிக்கப் பொண்ணுக்கு ரொம்ப ரத்த சேதம் ஆயிடுத்தும்மா... பாவம். சின்னப் பொண்ணு பத்து வயசுதான் இருக்கும். ப்ளட் க்ரூப் வேற ரொம்ப ரேர்... 'ஓ' பாஸிட்டிவ். நல்லவேளை... என்னோடதும் அதானே.. அதுனால எல்லாம் ஈஸியா முடிஞ்சது.. இப்போ தட் கேர்ள் ஈஸ் அவுட் ஆஃப் டேஞ்சர்!"
பரத் சொல்லிக்கொண்டே போக, லலிதாவுக்கு வார்த்தைகளே எழவில்லை.
"பரத் கண்ணா! எத்தனை நல்ல கார்யம் பண்ணிட்டு வந்திருக்கேடா? ஆபத்துல உதவி பண்றதுக்கு இணை எதுவுமே இல்லை தெரியுமா? நாம வரும்போது எத்தனை கார் போய்ட்டிருந்தது.. ஒரு கார்கூட அங்க நிக்கலை. நீ அங்க போனதோட இல்லாம, ஒரு உயிரையும் காப்பாத்தியிருக்கியே... நீ நல்லா இருப்பேடா!"
தனியாக இருக்கப் பயந்து 'அம்மா... பயம்' என்று தன்னைக் கட்டிக்கொண்ட பிள்ளை, வாமனன் விஸ்வரூபம் எடுத்தாற்போல, குணத்திலும் தைரியத்திலும் உயர்ந்து நிற்பதைப் பார்த்தபோது லலிதாவின் கண்களில் நீர் பூத்தது!
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் மே 2010 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்